Saturday, September 20, 2014

இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை! வேங்கடவன் துதி!


உறவுகளே!
இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை! வேங்கடவன் துதி! என்
துணைவியின் வேண்டுகோளுக்கிணங்க அன்று பாடியது!

சூழும் இடர்தன்னை சுடர்கண்ட பனியாக்கும்
ஏழுமலை யானே எனையாளும் பெருமாளே
வாழும் நாளெல்லாம் உனைவணங்கி நான்வாழ
பாழும் மனந்தன்னை பதப்படுத்த வேண்டுகிறேன்


அன்னை அலர்மேலு அகிலாண்ட நாயகியே
பொன்னை வேண்டியல்ல பொருளை வேண்டியல்ல
உன்னை வணங்குதற்கே உயிர்வாழ விரும்புகின்றேன்
என்னை ஆட்கொள்வாய் எனையாளும் தாயேநீ

பஞ்சுப் பொதிபோல பரவி வருகின்ற
மஞ்சு தவழ்ஏழு மலையானே கோவிந்தா
தஞ்சம் நீயென்றே தலைவணங்கும் என்போன்றார்
நெஞ்சில் நீங்காது நிலைத்திருக்க வேண்டுகிறேன்

வாழிவாழி யென வானோர்கள் கூத்தாட
ஆழிகடைந் தமுது அளித்தவனே மங்கையர்கள்
தாழிகடைந் தெடுத்த தயிர்வெண்ணை திருடியவர்
தோழி பலர்துரத்த தொடர்ந்தோடி ஒளிந்தவனே

தத்தம் குறையெல்லாம் தடையின்றி நீங்குமென
நித்தம் உனைநாடி நீள்வரிசை தனில்நின்று
சித்தம் மகிழ்வுடனே செப்புகின்ற கோவிந்தா
சத்தம் உன்செவியில் சங்கொலியாய் கேட்கிறதா

வெண்ணை உண்டவாய் விரிய வியனுலகு
தன்னைக் கண்டதாய் தடுமாறி மகிழ்ந்தாட
மண்ணை அளந்தவனே மாபலியின் தலையோடு
விண்ணை அளந்தவனே விமலனே வணங்குகிறேன்

மலையில் வாழ்பவனே மலையை நீதூக்கி
தலையின் மேல்வைத்தே ஆவினத்தை காத்தவனே
அலையில் கடல்மீது ஆனந்தப் பள்ளியென
இலையில் துயின்றவனே இறைவாநான் தொழுகின்றேன்

ஆதிமூல மென்ற அபயக்குரல் வந்துன்
காதில் விழச்சென்று காத்தவனே கோவிந்தா
வீதிதனில் வருவாய் வீழ்ந்து வணங்கிடுவார்
தீதுதனை முற்றும் தீர்த்திடுவாய் கோவிந்தா

எங்கும் உன்நாமம் எதிலும் உன் நாமம்
பொங்கும் உணர்வெல்லாம் போற்றும் திருநாமம்
தங்கும் மனதினிலே தடையின்றி உன்நாமம்
பங்கம் அடையாமல் பாஞ்சாலி காத்ததன்றோ

அம்மை அலர்மேலு அப்பன் திருமலையான்
தம்மை நாள்தோறும் தவறாமல் வணங்கிவரின்
இம்மை மறுமையென எழுபிறவி எடுத்தாலும்
உம்மை மறந்தென்றும் உயிர்வாழ இயலாதே

பாடி முடித்திவிட பரந்தாமா உன்அருளை
நாடி வருகின்றேன் நாயகனே வேங்கடவ
தேடி வருவார்கு திருமலையில் உனைக்காண
கோடிக் கண்வேண்டும் கொடுப்பாயா பரந்தாமா

முற்றும் உன்புகழை முறையாக நான்பாட
கற்றும் பல்லாண்டு காணாது தவிக்கின்றேன்
பற்றும் அற்றவரும் படைக்கின்ற பிரம்மாவும்
சற்றும் அறியாருன் திருவடியும் திருமுடியும்

வேதத்தின் வித்தேயுன் விளையாட்டை யாரறிவார்
நாதத்தின் சத்தேயுன் நாடகத்தை யாரறிவார்
பேதத்தை கொண்டவுள்ளம் பெருமாளே என்போன்றார்
சோகத்தை நீக்குமென சொல்லியிதை முடிக்கின்றேன்

தாங்கும் நிலையில்லா தடைபலவே வந்தாலும்
நீங்கும் படிசெய்யும் நிமலனே நாள்தோறும்
தூங்கும் முன்வணங்கி தூங்கி எழவணங்கும்
வேங்கி தாசன்நான் விடுக்கின்ற விண்ணப்பம்

செல்லும் திசைமாறி சென்றுவிடும் கப்பலென
அல்லும் பகலுமென் அலைகின்ற உள்ளத்தை
கொல்லும் அரவின்மேல் கொலுவிருக்கும் கோவிந்தா
ஒல்லும் வழியெல்லாம் உனைவணங்கச் செய்திடுவாய்

புலவர் சா இராமாநுசம்

16 comments :

  1. அருமை.அருமை.
    புரட்டாசி சனி அன்று
    பரந்தாமன் புகழ் பாடும் பா
    பல்லாண்டு பல்லாண்டு
    பார் உள்ளவரை
    பவனியெல்லாம் எதிரொலிக்கும்.

    பாடி பாடி நானும் மகிழ்வேன்.
    கோவிந்தா கோவிந்தா
    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  2. புரட்டாசி முதல் சனி!
    சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
  3. https://www.youtube.com/watch?v=G7zR-_FpogY

    SUBBU THATHA

    ReplyDelete
    Replies
    1. என் பாடலை (.youtube-பில்) இசையமைத்து,பாடி அதனையும் எனக்கு அனிப்பியுள்ள தங்கள் அன்பிற்கு தலை வணங்குகிறேன்!
      மிக்க நன்றி!

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா!

    வினைதீர வேண்டியே வேங்கடனைப் பாடத்
    துணையாய் வருவான் தொடர்ந்து!

    மிக அருமையான பாமாலை!
    வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  6. வேங்கடவன் துதி அருமை. சுப்பு தாத்தா பாடலுக்கான லிங்க் க்ளிக் செய்திருக்கிறேன்!

    ReplyDelete
  7. //“கொல்லும் அரவின்மேல் கொலுவிருக்கும் கோவிந்தா
    ஒல்லும் வழியெல்லாம் உனைவணங்கச் செய்திடுவாய்”//

    ஆழ்வார்களின் அழகுதமிழ்ப் பாசுரங்களை நினைவூட்டும் அருமையான வரிகள்.

    செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
    நெடியானே வேங்கடவா நின்கோயில் வாசலிலே
    அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்க
    படியாய்க் கிடந்துன் பவளவாய்க் காண்பேனே!

    ReplyDelete
  8. பாற்கடல் நாரணனுக்கு அருமையானதொரு
    பாமாலை பெருந்தகையே....

    ReplyDelete
  9. வேங்கடவன் துதி
    அருமை ஐயா
    நன்றி

    ReplyDelete
  10. வெண்ணை உண்டவாய் விரிய வியனுலகு
    தன்னைக் கண்டதாய் தடுமாறி மகிழ்ந்தாட///

    ReplyDelete
  11. பாவினைப் பாடி மகிழ்ந்தேன் ஐயா பரவசமுற்று
    பரந்தமான் அருளால் பார் முழுதும் பரவட்டும் இப் பா இனித்து !

    ReplyDelete
  12. வேங்கடவன் துதி மிகவும் அருமை ஐயா.....

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...