Showing posts with label வாழ்த்து கவிதை. Show all posts
Showing posts with label வாழ்த்து கவிதை. Show all posts

Monday, December 31, 2012

ஆங்கிலப் புத்தாண்டே வருக ! –வாழும் அனைவர்க்கும் ஆனந்தம் தருக




ஆங்கிலப்  புத்தாண்டே  வருக ! –வாழும்
    அனைவர்க்கும்  ஆனந்தம்  தருக
ஏங்கியே  ஏழைகள்  வாழ – குடிசை
    இல்லாமல்  வளமனைச்  சூழ
தாங்கிட  அன்னாரை நீயும் –இன்பம்
    நிலையாக  தடையின்றிப்  பாயும்
தீங்கின்றி  கழியட்டும்  ஆண்டே –மக்கள்
    தேவைகள்  நிறைவேற  ஈண்டே

இயற்கையின்  சீற்றங்கள்  கண்டே –எங்கள்
   இதயமும்  உடைவது  உண்டே
செயற்கையால்  வருவதே  அறிவோம் – இனி
   செய்வதை  ஆய்ந்துமே   செய்வோம்
இயற்கையின்   கோபத்தை  நீக்க –எம்மின்
    இன்னல்கள்  இல்லாது  போக்க
முயற்சியும்  செய்வாய  ஆண்டே – மக்கள்
    முன்னேற  தடையின்றி  ஈண்டே

உழவனும்  அழுகின்றான்  இங்கே – அவன்
   உழைத்தாலும்  பலன்போதல்  எங்கே
தழைத்ததா   அவன்வாழ்வு  இல்லை – தினம்
    தவித்தவன்  பெறுவதோ  தொல்லை
பிழைத்திட  பருவத்தில்  மாரி – வந்து
   பெய்திடச்  தருவாயா  வாரி
செழித்திட  உலகமே  ஆண்டே –உடன்
    செய்திட  வேண்டினோம்  ஈண்டே

இல்லாமை   நீங்கிட  வேண்டும் – ஏழை
    இல்லாத   நிலையென்றும்  வேண்டும்
கல்லாதார்  இல்லாமை   வேண்டும் – கல்வி
    கற்றாரை  மதித்திட  வேண்டும்
கொல்லமை  விரதமாய்  வேண்டும் –நற்
    குணங்களும்  வளர்ந்திட  வேண்டும்
எல்லாரும்  வாழ்ந்திட ஆண்டே –நீயும்
    ஏற்றது  செய்வாயா  ஈண்டே!

                 புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...