Friday, April 27, 2012

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!


அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!
   அனைவரும் அறியின் வாழ்வில் உய்வோம்!
மன்னவ ராயினும் மறத்தல் இயலாம்
   மறந்தவர் மனமோ வளமிலா வயலாம்!
பின்னை அவர்தமை பேணி மேலும்
   பிள்ளைகள் என்போர் பணிசெய நாளும்
தென்னை மரமாய்ப் பெற்றவர் தாமே
    தினமும் காத்து வளர்தவர் ஆமே!

ஆலயம் தொழுவது சாலவும் நன்று
   ஆன்றோர் கூறிய மூதுரை, இன்று!
சீலமாய் எண்ணி செயல்படின் நன்மை
   செப்பவும் வேண்டுமா? வருவது உண்மை!
கோலமே போடுவார் புள்ளிகள் இடுவதும்
    கோபுரம்கண்டே கன்னத்தைத் தொடுவதும்
ஞாலமே சுற்றலும் நாயகன்செயலே!
    நம்பியே எதையும் செய்திடமுயலே!

ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
   ஈத்து உவப்பவர் இறையெனச் சொல்வர்!
வாய்தனை அடக்கி வைத்திடின் வெல்வர்
   வாழ்வில் அமைதி  வழியெனச் செல்வர்!
நோய்நொடி இன்றே நேர்வழி சென்றே
   நொந்தவர் துயரம் போக்கிட நன்றே!
தாய்மை குணமே தனக்கெனக் கொண்டே
   தன்னலம் இன்றி செய்வீர் தொண்டே!


             புலவர் சா இராமாநுசம்

Wednesday, April 25, 2012

உன்னெழில் வாழ்வுக்கு உரமே!


    
சினமது சேர்ந்தாரைக் கொல்லி!-என
  செப்பிய குறள்தன்னை உள்ளி!
இனமது காத்திட வேண்டும்-நல்
  இன்பமேப் பூத்திட யாண்டும்!
மனமது வைத்தாலே போதும்-பொது
  மறையது சொல்வது யாதும்!
தினமது எண்ணியே வாழ்வீர்-சினம்
   தேவையா?ஆய்வாக சூழ்வீர்!

செல்லிடம் காப்பதே! சினமும்-என
   சிந்தித்துச் செயல்பட! மனமும்!
அல்லிடம் காப்பதா!? அன்றே!-இதை
   அறிவது அனைவரும் நன்றே!
பல்லிடம் நஞ்சினை வைத்தே-நல்
    பாம்பென பகைகொண்டுக் கொத்த!
இல்லிடம் நெஞ்சிலே! சினமே-முடிவு
    எடுத்தாலே வாழ்வீரக் கணமே!

தன்னையே தான்காக்க எவரும்-சினம்
    தன்னையே காத்திடின் அவரும்!
நன்னலம் காண்பரே என்றும்-வாழ்வில்
    நடந்திடின் அறிவரே இன்றும்!
பொன்நிகர் வள்ளுவன் குறளே-எடுத்து
    போதிக்கும் வழிதேடி வரலே!
உன்னெழில் வாழ்வுக்கு உரமே-என
   உணர்தலே நாம்பெற்ற வரமே!

                                 புலவர் சா இராமாநுசம்


Monday, April 23, 2012

ஓயாத அலைபோல முயற்சி வேண்டும்!


ஓயாத அலைபோல முயற்சி வேண்டும்
   உறவல்ல என்றாலும் உதவ வேண்டும்!
சாயாத நீதிவழி என்றும் வேண்டும்
   சாதிமதம் பார்க்காத மனமே வேண்டும்!
காயாகிக் கனியாகக் காக்க வேண்டும்
   காலத்தை பயனாகக் கழிக்க வேண்டும்!
ஆயாத செயல்தன்னை நீக்க வேண்டும்
   ஆணவத்தை அடியோடு அகற்ற வேண்டும்!


கோபத்தைக் கொடிதென்று எண்ண வேண்டும்
    குடிகெடுக்கும் குடிதன்னை ஒழிக்க வேண்டும்!
ஆபத்தை முன்கூட்டி அறிதல் வேண்டும்
    அழுக்காறு ஆசைகளை அடக்க வேண்டும்!
பாபத்தை செய்யாது இருக்க வேண்டும்
   பண்பதனைப் பாடறிந்து ஒழுக வேண்டும்!
தீபத்தைப் போல்தியாகம்  செய்ய வேண்டும்
    திட்டமிட்டே தினந்தோறும் நடக்க வேண்டும்!


முன்னோரின் மூதுரையை ஏற்க வேண்டும்
    முறையாகக் கல்விதன்னைக் கற்க வேண்டும்!
பின்னோரின் நலந்தன்னைப் பேண வேண்டும்
    பிழைசெய்யின் மன்னிப்புக் கோர வேண்டும்!
தன்னேர் இல்லாத தகமை வேண்டும்
   தாய்போல தாய்மெழியைப் போற்ற வேண்டும்!
இன்னாரே என்றாலும் மதிக்க வேண்டும்
   இனியசொல் பேசலே என்றும் வேண்டும்!

                                            புலவர் சா இராமாநுசம்