Saturday, December 22, 2012

ஒழிந்ததா மரண பயமேதான் –அடடா! உலகே மகிழ்வின் மயமேதான்!




ஒழிந்ததா  மரண  பயமேதான் அடடா!
   உலகே  மகிழ்வின்  மயமேதான்!
அழிந்ததா ? இல்லை!  அகிலம்தான்-என்ன
   ஆகுமோ  என்றத்  திகிலில்தான்!
எழுந்திட  பொழுதும்  விடிந்தனவே ஆனால்
   எதுவுமே  இன்றி  முடிந்தனவே!
மொழிந்திட  மேலும்  ஏதுமிலை வாழும்
    முறைப்படி  வாழ்ந்தால்  தீதுமிலை!

இயற்கையை  ஒட்டியே  வாழ்வோமா அதை
    எதிர்த்து  அழித்தே  வீழ்வோமா!?
செயற்கை  நம்முடை  சீரழிக்கும் தினமும்
     செய்தால்  அதுநம்   வேரழிக்கும்!
உலகம்  அழிதல்நம்   கையில்தான் நான்
     உரைப்பது  சற்றும்  பொய்யில்தான்!
கலகம், கயமை, போராட்டம் என
    காண்பது  முற்றிலும்  மாறட்டும்!

பிறந்தார்  இறப்பதில்  மாற்றமுண்டா இதில்
    பேதம்  ஏதும்  காண்பதுண்டா !
சிறந்தார்!  செயலால்!  என்றேதான் உலகம்
     செப்பிட  வாழ்தல்   நன்றேதான்!
இறந்தார்  என்றால்  பெருங்கூட்டம் நம்
    இல்முன்  கூடின்  அதுகாட்டும்!
வருந்தார்  இல்லை  ஒருவரென நாமும்
     வையத்தில்  வாழ்வோம்  ஒருவரென!

                                புலவர்  சா  இராமாநுசம்

Thursday, December 20, 2012

அழியும் உலகம் என்றேதான் -வலையில் ஆய்வு செய்தே இன்றேதான்!





அழியும்  உலகம்  என்றேதான்  -வலையில்
    ஆய்வு  செய்தே  இன்றேதான்!
மொழியும்  செய்திகள்  பலபலவே கருத்து
     முரண்பட  அவைகள்  மிகவுளவே!
விழிகளில்  அச்சம்  தோன்றிடவும் ஊர்
   வீதியில்  விவாதம்  நடந்திடவும்,
                     ஏனோ,
வழிபடும்  கடவுளை  வணங்குகின்றார் சிலர்
     வருவது  வரட்டும்  என்கின்றார்!

வாழவே  விரும்புதல்  தவறில்லை இங்கே
    வாழ்பவர்  நிலையாய்  எவருமில்லை!
சூழவே  நாமும்  அறிந்தாலும் பிறர்
     சொல்வதைக்  கேட்டுத்  தெரிந்தாலும்
வீழலே  இன்னா  தென்றேதான் எடுத்து
     விளம்பினன்  வள்ளவன்  அன்றேதான்!
                   என்றாலும்,
தாழவே  உரைத்து ,  புனிதர்களாய் நேயம்
        தழைத்திட  வாழ்வோம்  மனிதர்களாய்!

உலகமே  அழியின்  வாழ்வெதற்கு அது
    உண்மையா  பொய்யா  ஆய்வெதற்கு?
கலவரம்  போரொடு  ஊழல்தான் எங்கும்
    காணும்  உலகச்  சூழல்தான்!
நிலவரம்  இப்படிப்  போகையிலே நான்
    நினைத்துப்  பார்த்த  வகையினிலே,
                   புதிய,
உலகம்  தோன்றுதல்  நன்றாமே நாம்
    உணர்ந்து  வாழ்தலும்  ஒன்றாமே!
                   புலவர்  சா  இராமாநுசம்



Tuesday, December 18, 2012

எதையும் தாங்கும் இதயம்தான் –இனி என்றும் நமக்கே வேண்டுந்தான்




எதையும்  தாங்கும்  இதயம்தான் இனி
   என்றும்  நமக்கே  வேண்டுந்தான்
கதையோ  அல்ல!  உண்மைநிலை! இன்று
    காண்பதில்! கேட்பதில் உள்ளநிலை
உதைபடா  மீனவன்  நாளில்லை அவன்
    உரைப்பதைக்  கேட்டிட ஆளில்லை
இதைவிடக்  கொடுமை  வேறுண்டா அரசுகள்
    இணைந்து செயல்படும்  வழியுண்டா

எதையும்  தாங்கும்  இதயம்தான் இனி
   என்றும்  நமக்கே  வேண்டுந்தான்

வானம்  பொய்பினும்  பொய்யாதாம் காவிரி
    வற்றிப்  போனதும்  மெய்யேதாம்
தானம்  தருவதாய்  நினைக்கின்றான் கன்னடன்
     தண்ணீர்  என்றால்  சினக்கின்றான்
மானம்  இழந்தே  வாழ்கின்றோம் உரிய
    மதிப்பும்  இழந்து  வீழ்கின்றோம்
ஏனாம்  இந்த  இழிநிலையே ஆய்ந்து
     எண்ணிட  ஒற்றுமை  நமக்கிலையே

எதையும்  தாங்கும்  இதயம்தான் இனி
   என்றும்  நமக்கே  வேண்டுந்தான்

கட்சிகள்  இங்கேப்    பலப்பலவே காணும்
     காட்சிகள்  தினமும்  பலப்பலவே
முட்செடி  முளைப்பது  போலிங்கே சாதி
    முளைவிடின்,  வாழ்வதும்  இனியெங்கே?
பதவியும்  சுகமும்  பெரிதாக நல்ல
      பண்பும்  குணமும்  அரிதாக
உதவும்  நிலைதான்  இனியில்லை நம்
     உயிருக்கு  கப்போ நனியில்லை

எதையும்  தாங்கும்  இதயம்தான் இனி
   என்றும்  நமக்கே  வேண்டுந்தான்

கொலையோ  இங்கே  கலையாக மாளா
     கொள்ளை  மேலும்  நிலையாக
தலையே  கேட்பினும்  கூலிப்படை வெட்டித்
    தந்திடும்  என்றால்  ஏதுதடை
விலைதான்  அதற்கும்  உண்டாமே இந்த
    வேலையே அவர்க்குத்  தொண்டாமே
அலைபோல்  மனமே  அலைகிறதே ஊஞ்சலாய்
      ஆடியே  தினமும்  குலைகிறதே
                எனவே
எதையும்  தாங்கும்  இதயம்தான் இனி
   என்றும்  நமக்கே  வேண்டுந்தான்
                 புலவர் சா இராமாநுசம்

Sunday, December 16, 2012

சொல்லல் யார்க்கும் எளிதன்றோ சொன்னதை செய்தல் அரிதன்றோ



நினைத்து நினைத்துப் பார்க்கின்றேன்
     நினைவில் ஏனோ வரவில்லை!
அனைத்தும் மனதில் மறைந்தனவே
    அறிவில் குழப்பம்  நிறைந்தனவே!
தினைத்துணை  அளவே செய்நன்றி
    தேடிச் செய்யின் மனமொன்றி!
பனைத்துணை யாகக் கொள்வாரே
    பயனறி உணரும் நல்லோரே!

அடுத்தவர் வாழ்வில் குறைகண்டே
     அன்னவர் நோக அதைவிண்டே!
தொடுத்திடும் சொற்கள் அம்பாக
     தொடர்ந்து அதுவே துன்பாக!
கெடுத்திட வேண்டுமா நல்லுறவை
     கேடென தடுப்பீர் அம்முறிவை!
விடுத்திட வேண்டும் அக்குணமே
     வேதனை குறையும் அக்கணமே!

கீழோ ராயினும் தாழஉரை
   கேடோ! குறையோ! அல்ல! நிறை!
வீழ்வே அறியா பெரும்பேறே
   விளைவு அதனால் நற்பேரே!
பேழையில் உள்ள பணத்தாலே
   பெருமையும் வாரா குணத்தாலே!
ஏழைகள் பசிப்பிணி போக்கிடுவீர்
   இணையில் இன்பம் தேக்கிடுவீர்!

மக்கள் தொண்டு ஒன்றேதான்
   மகேசன் தொண்டு என்றேதான்!
தக்கது என்றே சொன்னாரே
   தன்நிகர் இல்லா அண்ணாவே!
எள்ளல் வேண்டா எவர்மாட்டும்
   இனிமை ஒன்றே மகிழ்வூட்டம்!
சொல்லல் யார்க்கும் எளிதன்றோ
   சொன்னதை செய்தல் அரிதன்றோ!

                  புலவர் சா இராமாநுசம்