Wednesday, October 15, 2014

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் எவராலும் காக்க இயலாது! அன்னோன்





இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
எவராலும் காக்க இயலாது! அன்னோன்
கெடுப்பாரும் இன்றியே தானேதான் கெடுவான்
கெட்டவன் அந்தோ! துயரமே படுவான்
துடுப்பதை இழந்திட்ட பரிதாபத் தோணி
துணையின்றி தனியாக உள்ளமே நாணி
விடுப்பானே ஆண்டிடும் உரிமையைக் கூட
வேதனை மண்டியே மனதினில் ஓட


தம்மிற் பெரியாரைத் தமராகக் கொண்டே
தன்னரசை நாள்தோறும் நடத்திடக் கண்டே
விம்மிதம் கொள்வாரே மக்களும் அவன்பால்
விருப்பியே புகழ்வாரே வியந்துமே அன்பால்
இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்
இல்லாது ஆள்கின்ற மன்னர்பால் விசுவாசம்
உம்மென்று இல்லாமல் உவகையில் காட்டுவார்
ஒருவருக் கொருவர் உற்சாகம் ஊட்டுவார்

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல வேந்தர்
சரியாக நீதியில் ஆண்டிட மாந்தர்
அமரின்றி அனைவரும் அமைதியில் வாழ்வார்
ஆண்டவன் அவனென்று ஆனந்தம் சூழ்வார்
தமரென்றே எல்லோரும் தம்முள்ளே உறவே
தக்கது என்பாரே! அறியாராம் கரவே
இமையோரும் காணத இன்பத்தைப் பெறுவர்
இறைவாநீ என்றுமே மன்னனை தொழுவர்!

பல்லோரின் பகையாலே பாதகம் இல்லை
பலமிக்க மன்னர்க்கு வாராது தொல்லை
நல்லோரின் துணையின்றி நாடாள முயலா
நல்லது கெட்டது அறிந்திட இயலா
வல்லவ ரானாலும் வழிதவறிப் போக
வாய்ப்புண்டு அதனாலே தீமைகள் ஆக
சொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே
பெரிதென்று அறிவீரே அதற்கில்லை இணையே!

புலவர் சா இராமாநுசம்










Monday, October 13, 2014

முகநூலில் வந்தவை!





இனிய உறவுகளே!

நாம் சில நேரங்களில் பிறருக்கு நல்லது செய்வதாக எண்ணிக் கொண்டு செய்யும் செயல்களே அவர்களுக்கு கெடுதலாக அமைந்து விடும்! அதாவது யாருக்காக, எதற்காக நாம் செய்கிறோமோ அச் செயலின் பண்புநலன்களை(விளைவினை) எண்ணி ஆய்வு செய்யாமல்
செய்தால்! வரும் என்பது வள்ளுவர் கருத்து!

நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை- குறள்

மனித வாழ்க்கையில் கெடுதல் , என்பது நமக்கு வருவதும் அதனால்
துன்பம் கொள்வதும் , இயல்பே! அதனைத் தடுக்கத்தானே நாம் முயல்வோம்! எதனால் கெடுதல் வந்தது என, நாம் ஆய்வதற்கு முன்
வள்ளுவர் சொல்வதைக கேட்போமா!
கெடுதல் , நாம் செய்யத் தகாத செயல்களைச் செய்வதனாலும்
வரும், உரிய நேரத்தில் செய்ய வேண்டிய செயல்களை ,நாம் செய்யத்
தவறினாலும் வரும் என்பதே அவர் கருத்து

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும் 
.
 நாம் சிலநேரங்களில் சிலர் செய்யும் செயலைப் பார்த்து இவை , அறிவுள்ளவன் செய்யும் செயலாக இல்லையே என்று அலுத்துக் கொள்வதுண்டு! அதுபோல வள்ளுவரும் நாகரீகமாக தம் கருத்தை வெளிப்படுத்துகிறார்!
அதாவது, பிற, உயிர்களின் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதி உதவ முன் வராவிட்டால் அறிவிருந்தும் பயனில்லை என்பதாம்!
 
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை.- குறள்

பிறந்தவன் ஒரு நாள் இறப்பது உறுதி ! அதுதான் இயற்கை! இதில்
மாற்றமில்லை! அதுபோல், இறந்தவன் மீண்டும் எழுவதில்லை என்பதும் உண்மை தானே !இதனை அறிந்தவர்தானே நாமெல்லாம்!
ஆனால் இரண்டுக்கும் இடைப்பட்டக் காலத்தில் வாழ்ந்து மடிகின்ற
நமக்குள், எத்தனை பேதங்கள்! சண்டைகள் ! வேறுபாடுகள் ! போன்ற
பலவும், வருதால் கண்ட பலன் என்ன! யாரேனும் பதில் சொல்ல இயலுமா!

உறங்கியவன் , விழித்தெழுவது எவ்வளவு இயற்கையானதோ,அதுபோல வாழ்கையில் விழுந்தவனும் (நினைத்து) தானும் எழ வேண்டும்! முயல வேண்டும் ! வெற்றி உறுதி!

புலவர்  சா  இராமாநுசம்

Sunday, October 12, 2014

கோடை வெயில் குறைந்தாலும் -அதன் கொடுமைச் சற்றே மறைந்தாலும்!


கோடை வெயில் குறைந்தாலும் -அதன்
கொடுமைச் சற்றே மறைந்தாலும்!
ஆடையோ! வேர்வையில் குளித்ததுவே-மிக
அனலில் உடலும் எரிந்ததுவே!
குடையோ! கையில் விரிந்திடவே-சற்றும்
குறையா! வெம்மை! புரிந்திடவே!
நடையோ, தெருவில் படுவேகம்-பலர்
நடப்பதைக் காணின் படுசோகம்!


வீடு வந்தால் மின்கட்டே-வழியும்
வேர்வை ஓடும் தரைத்தொட்டே!
காடும் இதைவிட நன்றாமே!-வெயில்
கடுமை அங்கு இன்றாமே!
சூடு பட்டும் உணர்வில்லை!-ஏதும்
சுரணை நமக்கும் வரவில்லை!
கேடு நீங்கும் நாள்வருமா?-இக்
கேள்விக்குக் காலம் பதில்தருமா?

ஆண்டுகள் தோறும் இதுதானே!-மாறி
ஆள்பவர் வரினும் இதுதானே!
தூண்டில் சிக்கிய மீனாக,-உயிர்
துடித்துமே போகும் தானாக,
வேண்டுமா எண்ணிப் பாருங்கள்-வழி
வேதனைத் தீர கூறுங்கள்!
கூண்டில் அடைத்த கிளியானோம்-என்றும்,
கோழையாய் இருந்தே பலியானோம்!

புலவர் சா இராமாநுசம்