Friday, November 14, 2014

குழந்தைகள் தினம் !


குழந்தைகள் தினம்
----------------------------------
சின்னஞ் சிறுக்குழவி
சிங்கார இளங்குழவி
கன்னம் குழிவிழவும்
களுக்கென்று நீசிரிப்பின்
அன்னை முகமாகும்
அன்றலரும் தாமரைபோல்
தன்னை மறந்ததவளும்
தாலாட்டுப் பாடுவாளாம்


பூவின் இதழ்போல
பொக்கை வாய்விரிய
நாவின் சுவைஅறிய
நறுந்தே னைதடவிட
பாவின் பண்போல
பைந்தமிழ் சுவைபோல
காவின் எழில்போல
களிப்பாயே தேன்சுவையில்

கண்ணே நீ உறங்கு
கற்கண்டே நீ உறங்கு
விண்ணில் தவழ்கின்ற
வெண்மதியே நீ உறங்கு
வண்ண மங்கா மல்
வரைந்தநல் ஓவியமே
மண்ணை வளமாக்கும்
மழையே நீயுறங்கு

கொஞ்சும் மழலைக்கோர்
குழலிசையும் ஈடாமோ
பஞ்சின் மெல்லிய சீர்
பாததில் நீ நடப்பின்
அஞ்சிடும் அன்னைமனம்
அடிதவறி விழுவாயென
நெஞ்சிலே சுமந் திடுவாள்
நீவளரும் வரை யவளே

புலவர் சா இராமாநுசம்

Thursday, November 13, 2014

நாணாதோ நம்நாடும் நன்று


இட்டபயிர் போயிற்றே! ஏர்பிடித்தோன் என்செய்வான்
திட்டமென்ன ஆள்வோரே எண்ணுங்கள் –நட்டமதை
ஈடுசெய்ய இல்லைவழி !ஏங்குகின்ற அன்னவனின்
கேடுநீங்க வேண்டாமா கூறு

உண்டி கொடுத்தும் உயிர்வாழ நன்றே
தொண்டு தனைசெய்தோன் துன்பமுற-விண்டாலும்
காணாதே கண்மூடி காண்பதுவோ! ஆள்வோரே
நாணாதோ நம்நாடும் நன்று

புலவர்  சா  இராமாநுசம்

Monday, November 10, 2014

ஓட்டென்றால் நம்முடைய உரிமைச் சீட்டே –அதை உணராது பலவகையில் வீணாய்ப் போட்டே!


நிழலிங்கே நிஜமெங்கே நிலமை ஆச்சே –நாட்டில்
நிகழ்கின்ற நடைமுறைகள் அனைத்தும் போச்சே!
விழலுக்கே நீர்பாய்ச்சி வீணாய்ப் போனோம் –புலம்பி
விம்முவதில் பயனில்லை! சிலையே ஆனோம்!
தழலுக்கு சுடுவதுதான் இயல்பு தாமே –தெரிந்தும்
தடம்மாறி வீழ்ந்ததுவும் அந்தோ நாமே!
சுழலுக்குள் சிக்கிவிட்ட கதைதான் இன்றே-கவிதை
சொல்லுவது புரிந்தாலே போதும் நன்றே!


ஓட்டென்றால் நம்முடைய உரிமைச் சீட்டே –அதை
உணராது பலவகையில் வீணாய்ப் போட்டே!
நாட்டைத்தான் கெடுத்தவர்கள் நாமே ஆகும் –தேர்தல்
நாடகத்தில் இன்றுவரை! துயரா போகும்!
கோட்டைதான் குறிக்கோளாய் கொள்கை என்றே-ஆட்சிக்
கோலோச்ச கட்சிகளும் கூடி நின்றே!
காட்டைத்தான் வீடாக்கி விட்டார்! நாளும் –ஏழை
கண்ணீரைத் துடைப்பதற்கு இன்றே ஆளும்!

பட்டதுயர் போதுமினி படவும் இயலா – நம்மின்
பகுத்தறிவு அணுவளவும் என்றும் முயலா!
இட்டபடி ஆள்வோரே வருவா ராக-நீங்கா
இன்னல்தான் நிலையென்ற நிலமை போக!
திட்டமிட்டு செயல்படுவோர் ஆட்சி வருமா –மக்கள்
தேவைகண்டு சேவைசெய்யும் திருநாள் தருமா!
குட்டதலை குணிவதுவோ! இனியும் வேண்டாம்-நிமிர
குறைதீரும்! காலமது கனியும்! ஈண்டாம்!

புலவர் சா இராமாநுசம்