Friday, February 27, 2015

கலையெனவே கொலைகூட ஆயிற் றிங்கே –கயவர் கைக்கூலி, பெறுகின்றார் கருணை எங்கே!?



கொலைகொள்ளை நடக்காத நாளே இல்லை –இந்த
கொடுமைக்கு, விடிவுவர உண்டா எல்லை!
கலையெனவே கொலைகூட ஆயிற் றிங்கே –கயவர்
கைக்கூலி, பெறுகின்றார் கருணை எங்கே!?
நிலைகுலைந்து வாழ்கின்றார் மக்கள் நாளும்-சற்றும்
நிம்மதியே இல்லாமல் அச்சம் மூளும்
வலைவீசி தேடுவதாய்க் காவல் துறையும் –செய்தி
வருகிறது! என்னபயன்! எப்படிக் குறையும்!?


பொதுமக்கள் ! நமக்குமிதில் பொறுப்பு வேண்டும்-வீட்டைப்
பூட்டிவிட்டால் , போதாது காக்க ஈண்டும்!
எதைவீட்டில் வைப்பதென எண்ண வேண்டும்-அதற்கு
ஏற்றவழி என்னவெனக் ஆய்வீர் யாண்டும்!
முதுமக்கள் தனித்திருப்பின் , காவல் துறைக்கே-நாமே
முறையாகத் தெரிவிப்போம்! குற்றம் தவிர்க்க!
இதுபோல ,மேலும்சில நாமும் செய்வோம் –ஏதோ
இயன்றவரை நமைக்காக்க முயலின்! உய்வோம்!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, February 25, 2015

என்னதான் நடக்குது நாட்டினிலே!



என்னதான் நடக்குது நாட்டினிலே –எடுத்து
எழுதிட இயலா ஏட்டினிலே
அன்னைதான் தெரசா நாடறியும் –அவர்
ஆற்றிய தொண்டே உலகறியும்
பொன்னைதான் பழிப்பது பித்தளையா –இழித்துப்
பேசுதல் ஐயகோ! பித்னையா
சின்னதாய் போவதோ சிலர்புத்தி – உடன்
சிந்தனைச் செய்வீர் ஆள்வோரே!


புலவர் சா இராமாநுசம்

Monday, February 23, 2015

முகநூல் துளிகள்!





அம்பு வடிவில் நேரானதாகத் போன்றினாலும் செயலோ கொடிது! யாழ் வளைவினை உடையதாக் தோன்றினாலும் இனிய இசையைத் தரும்! ஆகவே மக்களின் செயலைக் கண்டே நாம் பழக வேண்டும் உருவு கண்டு ஏமாறக் கூடாது

தவவேடமணிந்து கொண்டு அவ்வேடத்திற்கு மாறாக பிறர் அறிய இயலாதவாறு தவறுகளைச் செய்பவன் ,செயலானது , பசு ஒன்று , புலித் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வதற்கு ஒப்பாகும்

வழுக்கு நிலத்தில் நடப்பவனுக்கு உதவுகின்ற ஊன்றுகோல் போல,ஒருவன் தன் வாழ்க்கைப் பாதையில் பதுகாப்பாகப் போக
கற்ற ஒழுக்கமுடையவர் கூறும் அறிவுரை ஊன்று கோலாகப் பயன்படும்

இல்லற வாழ்க்கையில் அதிக ஆதிக்கம் செலுத்துவது எதுவாக இருக்க வேண்டும் அன்பா அறிவா என்றால் அன்பாகத்தான் இருக்க வேண்டும் ஏனென்றால், அன்பு அனைத்தையும் அரவணைத்துச் செல்லும், அறிவு எதையும் ஆய்வு செய்யும் தன்மையுடையது பிரித்துப் பார்க்கும். அதனால் இல்லறம் பாதிக்கப் படும் என்பதே

மற்றவர் உரிமையைப் பறிப்பது என்பது மன்னிக்க முடியாதக் குற்றமாகும்! அது போலவே நம் உரிமைப் பறிபோவதைத் தடுக்காமலோ அல்லது, பார்த்துக் கொண்டுருப்பதோ பெரும் குற்றமாகும்!

புலவர்   சா  இராமாநுசம்