Saturday, May 16, 2015

வேண்டுவோம் இயற்கைத் தாயிடமே வேதனை செய்வதா சேயிடமே!


பட்டக் காலிலே படுமென்பார்
கெட்டக் குடியே கெடுமென்பார்
பழமொழி சொன்னார் அந்நாளே
பார்த்தோம் சான்றாய் நேபாளே
மீண்டும் மீண்டும் வருகிறது
மிரட்டும் அதிர்வுகள பலஊரில்
வேண்டுவோம் இயற்கைத் தாயிடமே
வேதனை செய்வதா சேயிடமே


பட்டது போதும் அவர்துயரம்
பறந்திட அங்கே பலஉயிரும்
கெட்டது போதும் இனிமேலும்
கெடுவது வேண்டா வருநாளும்
விட்டிடு பூமித் தாயேநீ
விழுங்க திறவாய் வாயேநீ
தொட்டது அன்னவர் துலங்கட்டும்
தொழில்வளம் முன்போல் விளங்கட்டும்

உழைத்தவர் நலம்பெற வேண்டாமா
உண்மை! அறிவாய் ஈண்டாமே
தழைக்க வேண்டும் அவர்வாழ்வே
தடுத்தால் உனக்கும் அதுதாழ்வே
பிழைக்க அன்னவர் வழிகாட்டி
பூமித்தாயே கருணை விழிகாட்டி
செழிக்கச் செய்வது உன்செயலில்
செழிப்பதும் அழிப்பதும் உன்கையில்

புலவர் சா இராமாநுசம்

Thursday, May 14, 2015

நிதியிருந்தால் நீதிவிலை போகும் என்றே-மக்கள் நினைக்கின்றார்! ஐயகோ ! இதுவா? நன்றே


நிதியிருந்தால் நீதிவிலை போகும் என்றே-மக்கள்
நினைக்கின்றார்! ஐயகோ ! இதுவா? நன்றே
கதியில்லார் என்செய்வர்! காலம் முழுதும் –வற்றாக்
கண்ணீரே கதியென்று கதறி அழுதும்
விதியென்று வாடுவதும் அறமா!? ஆகும் –அவர்
விடுதலைக்கு ஏதுவழி! உயிர்தான் போகும்
மதியிழந்தோம் நாமெனவும் இதுவே சாட்சி –வீணில்
மக்களாட்சி என்பதெல்லாம் கனவுக் காட்சி


புலவர் சா இராமாநுசம்

Wednesday, May 13, 2015

சொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே பெரிதென்று அறிவீரே அதற்கில்லை இணையே!



இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    எவரலும் காக்க இயலாது! அன்னோன்
கெடுப்பாரும் இன்றியே தானேதான் கெடுவான்
    கெட்டவன் அந்தோ! துயரமே படுவான்
துடுப்பதை இழந்திட்ட பரிதாப தோணி
    துணையின்றி தனியாக உள்ளமே நாணி
விடுப்பானே ஆண்டிடும் உரிமையைக் கூட
    வேதனை மண்டியே மனதினில் ஓட

தம்மிற் பெரியாரைத் தமராகக் கொண்டே
    தன்னரசை நாள்தோறும் நடத்திடக் கண்டே
விம்மிதம் கொள்வாரே மக்களும் அவன்பால்
    விருப்பியே புகழ்வாரே வியந்துமே அன்பால்
இம்மென்றால் சிறைவாசம் ஏன்னெறால் வனவாசம்
    இல்லாது ஆள்கின்ற மன்னர்பால் விசுவாசம்
உம்மென்று இல்லாமல் உவகையில் காட்டுவார்
    ஒருவருக் கொருவர் உற்சாகம் ஊட்டுவார்

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல வேந்தன்
    சரியாக நீதியில் ஆண்டிட மாந்தர்
அமரின்றி அனைவரும் அமைதியில் வாழ்வார்
    ஆண்டவன் அவனென்று ஆனந்தம் சூழ்வார்
தமரென்றே எல்லோரும் தம்முள்ளே உறவே
    தக்கது என்பாரே! அறியாராம் கரவே
இமயோரும் காணத இன்பத்தைப் பெறுவர்
    இறைவாநீ என்றுமே மன்னனை தொழுவர்!

பல்லோரின் பகையாலே பாதகம் இல்லை
      பலமிக்க  மன்னர்க்கு வாராது தொல்லை
நல்லோரின் துணையின்றி நாடாள முயலா
      நல்லது கெட்டது அறிந்திட இயலா
வல்லவ ரானாலும் வழிதவறிப் போக
      வாய்ப்புண்டு அதனாலே தீமைகள் ஆக
சொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே
      பெரிதென்று அறிவீரே அதற்கில்லை இணையே!
       
                       புலவர் சா இராமாநுசம்

Sunday, May 10, 2015

அன்னையர் தினம் நினைவுக் கவிதை!



சுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை
சுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்!
அமைவாரே ஓய்வாக! ஆனால் தாயே-கருவில்
அடிவயிறு நாள்தோறும் கனக்கத் நீயே!
எமைதாங்கி பத்துமாதம் சுமந்தீர் அம்மா-அதை
எள்ளவும் சுமையாக நினைந்தீரா! அம்மா!
இமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த
ஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே?

உண்ணுகின்ற உணவென்ன பார்துத் தானே-நான்
உண்டான நாளைமுதலே உண்டுத் தானே!
கண்ணுறக்கம் இல்லாமல பெற்றீர் அம்மா-ஏனோ
கண்முடிப் போனிரே அம்மா அம்மா!
மண்மூடிப் போனாலும் அந்தோ! உன்னை-மனம்
மூட யியலாது வருந்தும்! அன்னை
பண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ
பறந்தாயா சொல்லாமல் எங்கே எங்கே?

புலவர் சா இராமாநுசம்