Tuesday, February 9, 2016

நான் எழுதிய இரங்கல் கவிதை!

என் அருமை நண்பர் புலவர் வேள்நம்பி மறைந்து ஓராண்டு ஆனதை ஒட்டி  நான் எழுதிய இரங்கல் கவிதை!


தனக்குநிகர் இல்லையென உதவும் நண்பர் –இவர்
தன்னிடத்தே கொண்டவராய் விளங்கும் பண்பர்
எனக்குமவர் பல்வகையில் உதவி செய்தார் –ஈடே
இல்லாத அன்பதனை மழைபோல் பெய்தார்
மனக்கவலை ஏதுமில்லா குடும்ப வாழ்வே –ஏனோ
மறைந்தீரே மின்னலென பலரும் அழவே
குணக்குன்றே வேள்நம்பி! நன்றா இதுவே-என்றே
குமுறுகின்ற நெஞ்சுதனைத் தேற்றல் எதுவே!


ஆள்வினையே மிக்கவராய் வாழ்நாள் முற்றும்-தேடி
ஆய்ந்திட்ட குறிப்புகளை முறையாய் சாற்றும்
வேள்நம்பி தொகுத்தநூல் திராவிட இயக்கம்- வளர்ந்த
வரலாறே என்றேதான் படித்தோர் வியக்கும்
நாள்வருமே புகழ்தருமே உலகம் காணும் –மேலும்
நற்றமிழ! உம்மாலே பெருமை பூணும்
தோள்மீறி வளர்ந்திட்ட மக்கள் தம்மை -நீரும்
தோழரென பழகியது காணின் செம்மை!

அகழ்வாரைத் தாங்குநில பொறுமைக் கொண்டே-தீமை
அடுத்தடுத்து செய்தாலும் விளக்கி விண்டே
இகழ்வாரும் பாராட்ட வாழ்ந்தார் இவரே – அதுவே
இயல்பாகக் இறுதிவரை மறைந்தார் எவரே!
புகழ்வாராம் போகவிட்டுப் புறமே பேசும் –தீய
புல்லர்களின் முகம்காண அகமே கூச
திகழ்வாராம் வேள்நம்பி மறக்கப் போமோ –நாளும்
தேம்புகின்றோம் மீண்டுமுமை காணல் ஆமோ

அப்பப்பா நம்மிடையே மலர்ந்த நட்பே-கற்ற
அன்னையவள் தமிழ்தந்த அழியா பொட்பே
தப்பப்பா தவிக்கமனம் விட்டுச் சென்றீர் – மீண்டும்
தவறாது சந்திக் வருவேன் என்றீர்
செப்பப்பா செப்பாது போனீர் எங்கே-அதனால்
செயலற்றார் எனைப்போல பலரும் இங்க
எப்பப்பா கண்போமென ஏங்க மனமே –சேலம்
என்றாலே துயரத்தில் மூழ்கும் தினமே

நீரின்றி நானில்லை என்றே வாழ்ந்தோம்-அந்த
நினைவின்றி சென்றீரா துயரில் வீழ்ந்தோம்
ஏரின்றி உழவுதனை செய்வார் போன்றே –இன்றே
என்நிலமை ஆயிற்று சொல்லில் சான்றே
காரின்றே வான்மழையே வருமா என்றே- வாடிக்
காத்திருக்கும் உழவன்தன் நானும் இன்றே
வேரின்றி அற்றமரம் அந்தோ நானே-மேலும்
விளக்குவதால் ஏதுபயன் ! வாழ்தல் வீணே

திரும்பிவரும் இடத்திற்கா நம்பி சென்றீர் –மீண்டும்
திரும்பாத இடத்திற்கேன் விரைந்து சென்றீர்
கரும்புமனம் கொண்டவரே காலன் வந்தால் –உம்முன்
கைகூப்பி பணிவாக அழைப்பு தந்தால்
விரும்பியுடன் போனதுவும் நியாயம் இல்லை!-அதனால்
விளைந்திட்ட வேதனைக்கே உண்டோ எல்லை
இரும்புமனம் கொண்டவரும் இளகிப் போனார்-என்றும்
இறவாத புகழ்பெற்றீர் வாழ்க நண்ப!

புலவர் சா இராமாநுசம்

Sunday, February 7, 2016

நான் சீனா சென்று கண்டுவந்ததைப் பற்றி எழுதிய கவிதை!




நான் சீனா சென்று கண்டுவந்ததைப் பற்றி எழுதிய கவிதை!
குப்பையிலா நகரமது சிங்கை என்றே-முன்னர்
கூறுவதைக் நாம்மவரும் கேட்டோம் நன்றே
செப்பறிய அந்நிலையே சீனா எங்கும்-நான்
சென்றபோது கண்டேனே! மகிழ்ச்சி பொங்கும்
தப்பியொரு இடத்தினிலும் குப்பை யில்லை-அவர்
தனிமனித ஒழுக்கத்தில் கண்டார் எல்லை
தொப்பையிலா மக்கள்தான் அங்கே முற்றும் -காண
தோன்றுகின்றார் !கட்டான உடலைப் பெற்றும்
விண்முட்டும் பலமாடி அடுக்கே எங்கும்-நீண்ட
வீதிகளின் இருமருங்கும் பெலிவாய் ஓங்கும்
கண்முட்ட தேடினாலும் குடிசை ஒன்றும்-அங்கே
காணவில்லை! உண்மையிது! வாழ்க!! என்றும்
பண்பட்ட அவர்வாழ்வில் பகட்டு யில்லை- ஏழை
பணகாரப் பாகுபாடு பேதம் இல்லை
வெண்பட்டு மென்மையென சாலை விரியும் –மின்
விளக்குகளோ தங்கமென ஒளியில் எரியும்
புலவர் சா இராமாநுசம்