Friday, June 3, 2016

ஓட்டுதனைக் குறிவைத்தே சாதி இங்கே – மனித உணர்வுகளை தூண்டிவிடின் ஒழிதல் எங்கே!?



உண்மையிலே சாதிதன்னை ஒழிக்கும் எண்ணம் –இங்கு
உருவாக வில்லையெனில், ! அழிக்கும்! திண்ணம்!
அண்மையிலே நடக்கின்ற நிகழ்வு எல்லாம்- அதற்கு
ஆதார மானதென காட்டும் சொல்லாம்!
புண்மைமிகு அரசியலே காரணம் ஆகும் –சாதிப்
புற்றுநோய் பல்லுயிரைக் கொண்டே போகும்!
வண்மைமிகு சட்டத்தால் பயனே இல்லை! –நாளும்
வளர்ப்பவரின் சுயநலமே! உண்டோ எல்லை!


ஓட்டுதனைக் குறிவைத்தே சாதி இங்கே – மனித
உணர்வுகளை தூண்டிவிடின் ஒழிதல் எங்கே!?
ஆட்டுவித்தால் ஆடுகின்ற பொம்ம லாட்டம் –கட்சி
அரசியலார் அனைவருமே கொள்ளும் நாட்டம்!
ஏட்டளவில் கொள்கையென திட்டம் போட்டே –அறியா
ஏழைகளை ஏமாற்றி ஓட்டு கேட்டே!
நாட்டளவில் இன்றுவரை நடக்கும் ஒன்றே- இதனை
நம்புகின்ற மக்கள்தான் உணர்தல் என்றே!?

புலவர் சா இராமாநுசம்

Wednesday, June 1, 2016

அன்பின் இனிய உறவுகளே-நீவீர் அளித்த மறுமொழி ஆக்கங்களே!



அன்பின் இனிய உறவுகளே-நீவீர்
அளித்த மறுமொழி ஆக்கங்களே!
என்பின் தோலென என்நெஞ்சில்-நன்றே
இணைந்திட ஓடின மனஅஞ்சல்!
இன்பின் வழிவரு ஊக்கத்தால்-கவிதை
எழுதுவேன் இயல்பென நோக்கத்தால்!
துன்பின் தொடர்பினை அறுத்தீரே-இன்றே
துவண்டிடா வண்ணம் தடுத்தீரே!

 
புலவர் சா இராமாநுசம்

Tuesday, May 31, 2016

ஏனோ தெரிய வில்லை –என்ன எழுதுவது புரிய வில்லை!



ஏனோ தெரிய வில்லை –என்ன
எழுதுவது புரிய வில்லை
தானே ஓடி வரும் –கருத்து
தடுமாற துன்பம் தரும்
மானோ மருண்ட தென்றே – எந்தன்
மனமின்று இருண்ட தின்றே
கானோ அறியதே நானும் –நொந்து
கலங்குவதை நீரறிய வேணும்


புலவர்  சா  இராமாநுசம்