Thursday, May 11, 2017

என் முகநூலில் வந்தவை




அரிசியிலே கல்லிருந்த பொறுக்கி எடுத்துட்டு சமைக்கலாம் கல்லுலே அரிசியிருந்தா !!? முடியுமா
இப்படிதான் நம்முடைய வாழ்க்கையிலே சில நிகழ்வுகள் அமைந்து விடுகிறது

தமிழக விவசாயிகள் இறப்பை மறைத்து, வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் பொய்யான தகவலை பிரமாண பத்திரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.! வெட்க க் கேடானது !

உறவுகளே!
ஆட்சி, அதிகாரம் ,பதவி என்று வந்தாலே ,எந்த கட்சி ஆனாலும் ,ஊழல் செய்யவே தொடங்கி விடுகின்றன! இதில் எந்த மாறுபாடுமில்லை! அவ்வகையில் , தமிழகத்தில் ஊழல் செய்யாத கட்சியே இல்லை என்பதுதான் உண்மை! இந் நிலைக்கு காரணம், மக்கள் ஓட்டுக்கு காசு வாங்குவதும் அரசியல் வாதிகளின் பண,பதவி பேராசையும் போன்ற இன்னும் பலவம் ஆகும்

உறவுகளே!
தமிழகத்தின் இன்றைய முக்கிய தேவையாக இருப்பது
குடிநீர் பிரச்சனையே! பிளவு பட்ட அண்ணா தி மு க இரு அணிகளும் ஒன்று சேர வாய்ப்போ இல்லை! சேர்ந்தாலும் நீடிக்காது! எனவே மத்திய அரசு, உடன்
தமிழக சட்ட மன்றத்தை ஆறு மாதத்திற்கு நிறுத்தி வைத்து, ஆளுனர் ஆட்சியை கொண்டு வந்து போர்கால அடிப்படையில் குடிநீர் பிரச்சனையை
தீர்ப்பதே நன்று மட்டுமல்ல! இன்றியமையாத் தேவையும் ஆகும்!

ஆபத்து வருமுன்னர் அதனைத்
தடுத்து நிறுத்தாவர் வாழ்க்கையானது எரியும் தீயின்
முன்னால் வைக்கப் பட்ட வைக்கோல் போல் எரிந்து
அழிந்து விடும் என்பதைவள்ளுவர் வருமுன்னர் காவாதான் வழ்க்கை என்று கூறுவார்!அதுபோல வரும் எதிர்காலத்தில் பெரும் குடிதீர் பஞ்சம் வரப்போகிறது! அதனை சமாளிக்க இன்றைய அரசின் நிலை இல்லை எனபதை அனைவரும் அறிவோம்! ஆகவேதான் முன்எழுதிய பதிவில்
ஆளுனர் ஆட்சி ஆறுமாதமாவது தேவை எனக் குறிப்பிட்டேன்! மற்றபடி நான் சனநாயகத்திற்கு
எதிரானவனல்ல!


உறவுகளே!
சோப்பு விக்கிறவன் கை அழுக்கா இருந்தாலும் பராவாயில்லை! சோப்பு அழுக்கைப் போக்குகிறதா என்றுதான் பார்க்க வேண்டும்!-அறிஞர் அண்ணா


புலவர்  சா இராமாநுசம்

 

Monday, May 8, 2017

இன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே-என் இதயத்தை கூறுபோட்டு அறுக்கும் வாளே!




இன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே-என்
   இதயத்தை கூறுபோட்டு அறுக்கும் வாளே!
அன்றேநான் அவள்பிரிய இறந்தோன் ஆனேன்-நல்
   அன்னையவள் தாரமவள் மறந்தா?  போனேன்!
குன்றன்ன துயர்தன்னை நெஞ்சில்  உற்றேன்-ஆனால்
    குறைதீர இருமகவை நானும் பெற்றேன்!
நன்றென்னைக் காக்கின்றார் எனதுப் பெண்கள்-என்றும்
    நலன்பேண நான்காணும்  இரண்டு கண்கள்!

செம்புலத்து நீர்போல கலந்தோம் அன்றோ!-தனிமை
     சிறைபட்டு  கிடக்கின்றேன் நானும்  இன்றோ!
வெம்புலத்து வீழ்ந்ததொரு புழுவைப் போல –பெரும்
    வேதனையில் நாள்தோறும் துடிக்கச் சால!
அம்பலமே இல்லாத  ஆடல் தானே-இன்று
    ஆயிற்றே என்நிலையும்! வாழ்தல் வீணே!
எம்பலமே அவள்தானே மறந்தேன் போனாள்-துயர்
    எல்லையிலே நான்மடிய பறந்தேன் போனாள்!

துடுப்பில்லா தோணியென விட்டுச் சென்றாள்-எட்டா
    தொலைவினிலே கண்காண நிலையில் நின்றாள்!
பிடிப்பில்லா வாழ்கையிது! எதற்கு வேண்டும் –மனம்
    பேதலித்து சலிப்பினையே மேலும் தூண்டும்!
நடிப்பிப்லா  நாடகமே என்றன்  வாழ்வே –நான்
    நடைப்பிணமே! விரைவாக  வருமா  வீழ்வே!
இடுப்புள்ள கைபிள்ளை  ஆனேன்  இன்றே –இனி
    இறப்புயெனும் நாளொன்றோ அறியா, ஒன்றே!
                         
புலவர்  சா  இராமாநுசம்

Sunday, May 7, 2017

கதிரவனே கதிரவனே கருணை காட்டு-வீசும் கதிர்களிலே கொஞ்சமேனும் குளுமை ஊட்டு !



கதிரவனே கதிரவனே கருணை காட்டு-வீசும்
கதிர்களிலே கொஞ்சமேனும் குளுமை ஊட்டு
முதியவனாம் படுகின்றேன் அந்தோ தொல்லை-நாள்
முழுவதுமே வாட்டுவதால் தூங்கல் இல்லை
கதியிலவே கரம்குவித்து வணங்கு கின்றேன்-ஏற்று
கைதூக்கி விடுவாயா போற்று கின்றேன்
விதியென்று ஒதிங்கிநீ போக வேண்டாம்- படும்
வேதனைக்கி மாற்றுவழி செய்வாய் ஈண்டாம்


புலவர் சா இராமாநுசம்