Thursday, October 2, 2014

உத்தம உன்புகழ் உலகில் வாழ்க! உன்திருப் பெயரொடு அகிம்சையும் சூழ்க!


அண்ணல் காந்தி பிறந்தநாள் இன்றே
அடிமை விலங்கை அகற்றினார் அன்றே!
திண்மை அகிம்சையாம் அறவழி என்றே
தேடிக் கொடுத்தார் விடுதலை ஒன்றே!
உண்மையைத் தனது உயிரெனக் கொண்டே
உத்தமர் காந்தி, செய்தார் தொண்டே!
மண்ணில் பிறந்த மாந்தரில் எவரே
மாகாத்மா வாக மதித்தது! இவரே!


நிறவெறி தன்னை நீக்கிட வேண்டி
நீலத்திரைக் கடல் அலைகளைத் தாண்டி!
அறவழி நடந்து, ஆப்பிரிக்க நாட்டில்
அல்லல் பட்டது காண்போம் ஏட்டில்!
தீண்டா மையெனும் தீமையை ஒழிக்க
தீவிரம் காட்டிட சிலரதைப் பழிக்க!
வேண்டா மையா சமூக கொடுமை
விட்டது இதுவரை நம்செயல் மடமை!

இடுப்பினில் கட்ட ஆடையும் இன்றி
ஏழைகள் இருந்திட உள்ளம் குன்றி!
உடுப்பது இனிநான் வேட்டியும் துண்டென
உள்ளம் நொந்தவர் உறுதியே, பூண்டவர்,
எடுத்தார் விரதம் இறுதி வரையில்!
இறந்து வீழ்ந்தார் முடிவெனத் தரையில்!
கொடுத்தனர் பாவிகள் குண்டாம்பரிசே
கொன்றான் மதவெறி கொடியவன் கோட்சே!

எத்தனை நாட்கள் சிறையில் காந்தி
இருந்தவர் எனினும் எண்ணமே சாந்தி!
புத்தனாய் வாழ்ந்தார் போற்றிட, உலகம்
பதவியை நாடாப் பண்பினில் திலகம்!
சத்திய சோதனை வாழ்வாய் கொண்டே
சரித்திரம் எழுதிய பெருமையும் உண்டே!
உத்தம உன்புகழ் உலகில் வாழ்க!
உன்திருப் பெயரொடு அகிம்சையும் சூழ்க!

புலவர் சா இராமாநுசம்