Thursday, November 24, 2016

அன்று, 2012-ல் மழைவர வேண்டி பாடிய பாடல்!!!! இன்று???? பொருந்தும்!




அன்று, 2012-ல் மழைவர வேண்டி பாடிய பாடல்!!!!
இன்று????  பொருந்தும்

மழையே மழையே வாராயோ-நீரும்
மன்னுயிர் வாழ்ந்திட தாராயோ?
விழையா ரிடமே பெய்கின்றாய்-உன்னை
விழைவா ரிடமே பொய்கின்றாய்!
அழையா விருந்தென போகின்றாய்-இங்கே
அழைத்தும் வந்துடன் ஏகின்றாய்!
பிழையார் செய்யினும் பொறுப்பாயே-உற்ற
பிள்ளைகள் எம்மை வெறுப்பாயா!



சிறப்பொடு பூசனை செல்லாதே-வான்துளி
சிந்தா விட்டால் நில்லாதே!
அறத்தொடு வாழ்வும் அகன்றுவிடும்-மனதில்
அன்பும் பண்பும் இன்றிகெடும்!
துறவும் தவறித் தோற்றுவிடும்-பசித்
தொல்லை அதனை மாற்றிவிடும்!
மறவாய் இதனை மாமழையே-மக்கள்
மகிழ்ந்திட வருவாய் வான்மழையே!

உழவுத் தொழிலும் நடக்காதே-யாரும்
உண்ண உணவும் கிடைக்காதே!
அழிவே அனைத்தும் பெற்றுவிடும்-நெஞ்சில்
அரக்க குணமே முற்றிவிடும்!
எழுமே அலைகடல் தன்நீர்மை-விட்டு
ஏகும் என்பதும் மிகுஉண்மை!
தொழுமே வாழ்ந்திட மனிகுலம்-மழைத்
தூறிட வந்திடும் இனியவளம்!

வானின்றி உலகம் வாழாது!-ஐயன்
வகுத்த குறளுக்கு நிகரேது!
ஏனின்று அவ்வுரை சரிதானே-மழை
இன்றெனில் வாழ்வும் முறிதானே!
கானின்று குறைந்திட இத்தொல்லை-இனி
காண்போம் ஓயாப் பெருந்தொல்லை!
தான்நின்று பெய்யா மழைமேகம்-எனில்
தவிர்த்திட இயலா தரும்சோகம்!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, November 22, 2016

தீர்த்துவிடு அவன்துயரை நாராயணா-உந்தன் திருவடியைப் போற்றுகிறோம் நாராயணா!



கார்திகைப் பிறந்துகூட நாராயணா- வானில்
கார்மேகம் காணலியே நாராயணா
நேர்த்திகடன் ஏதுமில்லை நாராயணா-கண்ணில்
நீர்வடிந்து வற்றிவிட நாராயணா
வார்த்தையில்லை செல்வதற்கு நாராயணா-வாழ
வழியேது உழவனுக்கு நாராயணா
தீர்த்துவிடு அவன்துயரை நாராயணா-உந்தன்
திருவடியைப் போற்றுகிறோம் நாராயணா


புலவர் சா இராமாநுசம்

Monday, November 21, 2016

அடமழை பெய்யாது ஐப்பசி போகவும்-இயற்கை அன்னையே நீரின்றி இட்டபயிர் சாகவும்!




விடமுண்டு விவசாயி வேதனையால் மாளவும்
விளைநிலம் எல்லாமே வெடிப்புகளே ஆளவும்
இடமில்லை இவ்வுலகில் இனிவாழ என்றே
இதயத்தில் பல்வேறு துயர்சூழ நன்றே
திடமின்றி, உழவனவன் மாற்றுவழி கண்டான்!
தேடினான் கிடைத்தோ விடமது உண்டான்


புலவர் சா இராமாநுசம்