Thursday, January 11, 2018

சொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே பெரிதென்று அறிவீரே அதற்கில்லை இணையே!



இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
எவராலும் காக்க இயலாது! அன்னோன்
கெடுப்பாரும் இன்றியே தானேதான் கெடுவான்
கெட்டவன் அந்தோ! துயரமே படுவான்
துடுப்பதை இழந்திட்ட பரிதாபத் தோணி
துணையின்றி தனியாக உள்ளமே நாணி
விடுப்பானே ஆண்டிடும் உரிமையைக் கூட
வேதனை மண்டியே மனதினில் ஓட



தம்மிற் பெரியாரைத் தமராகக் கொண்டே
தன்னரசை நாள்தோறும் நடத்திடக் கண்டே
விம்மிதம் கொள்வாரே மக்களும் அவன்பால்
விருப்பியே புகழ்வாரே வியந்துமே அன்பால்
இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்
இல்லாது ஆள்கின்ற மன்னர்பால் விசுவாசம்
உம்மென்று இல்லாமல் உவகையில் காட்டுவார்
ஒருவருக் கொருவர் உற்சாகம் ஊட்டுவார்

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல வேந்தர்
சரியாக நீதியில் ஆண்டிட மாந்தர்
அமரின்றி அனைவரும் அமைதியில் வாழ்வார்
ஆண்டவன் அவனென்று ஆனந்தம் சூழ்வார்q
தமரென்றே எல்லோரும் தம்முள்ளே உறவே
தக்கது என்பாரே! அறியாராம் கரவே
இமையோரும் காணத இன்பத்தைப் பெறுவர்
இறைவாநீ என்றுமே மன்னனை தொழுவர்!

பல்லோரின் பகையாலே பாதகம் இல்லை
பலமிக்க மன்னர்க்கு வாராது தொல்லை
நல்லோரின் துணையின்றி நாடாள முயலா
நல்லது கெட்டது அறிந்திட இயலா
வல்லவ ரானாலும் வழிதவறிப் போக
வாய்ப்புண்டு அதனாலே தீமைகள் ஆக
சொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே
பெரிதென்று அறிவீரே அதற்கில்லை இணையே!

புலவர் சா இராமாநுசம்

3 comments:

  1. உண்மை ஐயா கவிதை நன்று.

    ReplyDelete

  2. தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete