Saturday, July 6, 2013

என், முகநூல் பதிவுகள்

1 அறஞ் செய விரும்பு! என்று ஔவையார் சொன்னார்!
அறஞ் செய் ! என்றே சொல்லியிருக்கலாமே! சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் தானே செய்யுளுக்கு அழகு!

ஔவையாருக்கு அது ,தெரியாது என்றா சொல்லமுடியும்!! பின், அவ்வாறு சொல்ல என்ன காரணம்!!?
உறவுகளே! சிந்தியுங்கள்! உங்கள் சிந்தனை கூறும் மறு மொழிகளை கண்டு நாளை என் கருத்தினை எழுதுகிறேன்


2  அன்பர்களே!
நேற்று, நான் போட்ட பதிவின் நோக்கம், வெறும் பொழுது போக்காகப் படிக்காமல் ,மேலும் உங்கள் சிந்தனையை சற்று தூண்டலாமே என்பது தான்! ஆனால்....
விருப்பம் தெரிவித்தவர் 35-பேரும், மறுமொழி தந்தவர்,9-பேரும் தான்! அது , எனக்கு சற்று ஏமாற்றமே!

3  அனைவருக்கும் மிக்க நன்றி! மறுமொழி தந்தவர்களின் பொரும்பாலார் கருத்தே , என் கருத்தாகும்! அறம் செய் என்பது கட்டளை வாக்கியம். அது நடந்தாலும் நடக்கலாம். நடக்காமலும் போகலாம் . விரும்பு என்று சொன்னால் , அவன் தனக்குள்ளயே விருப்பத்தை உருவாக்கிக் கொள்வது ஆகும் ! அது, செயல் நடைபெற ஏதுவாகும்!

4  இல்லறம் அல்லது நல்லறம் அன்று

மனைவி மக்களோடு சேர்ந்து வழும் குடு்ம்ப வாழ்க்கையே சிறந்தது. மற்ற துறவற வாழ்க்கை அற வாழ்வு ஆகாது

எண்ணும் எழுத்தும் கண்எனத் தகும்

கணிதமும் எழுத்தும் நம்முடைய இரு கண்கள் என்று சொல்லத் தக்கன!


5  பூக்காமலே காய்க்கும் ஆலமரம் ,அத்தி மரம்,பலாமரம் போன்ற மரங்கள் உள்ளன. அதுபோல மனிதர்களிலும் சொல்லிச் செய்யாமல் குறிப்பறிந்து தாமாகவே செய்யும் மக்களும் உலகத்தில் உள்ளனர்

6 மனித உயிர்களுக்கு எது மேன்மையைக் கொடுக்கும் என்றால் ,ஒழுக்கம் ஒன்றுதான் என்று உறுதியாகச் சொல்லலாம்! ஒழுக்கம் உருவம் என்றால் மற்ற அனைத்தும் அதன் நிழல் போன்றவை உருவம்
போகும் வழி நிழலும் பின் தொடர்வதைப்போல மற்ற சிறப்புகளும் ஒழுக்கத்தை பின் தொடர்ந்து நமக்கு வரும்

வள்ளுவப் பெருமான் கூட ஒழுக்கம் உயிரைக் காட்டிலும் பாது காக்கப்பட வேண்டும் என்றே சொல்கிறார்! போனால் திரும்பி வாராதது உயிர் மட்டுமல்ல ஒழுக்கமும் ஆகும்!

                                                              புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, July 3, 2013

என் முகநூல் பதிவுகள் -2


நாம் செய்த தீவினைகள் நம்மோடிருக்க, பிறர் நமக்கு செய்யும் தீவினைகள் நம்மை வருத்தும் போது, நாம் தெய்வத்தை நோவதால் எந்த பயனும் விளையாது! துன்பப் பட்டுத்தான் தீர வேண்டும்! வேறு வழியில்லை! எதுபோல என்றால் , ஒன்றுமே இல்லாத ( காலியான) பானையை அடுப்பில் வைத்து எரித்தால் பொங்கி வருமா !? வராது. அதுபோல!


ஆற்றில் நீர் ஓடிக்கொண்டிருக்கிறது.கரையோரம் கொக்கு, ஒன்று வாடிய பயிர் போல, அமர்ந்து கொண்டிருக்கிறது நீரில் மீன்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கின்றன என்றாலும். கொக்கானது தான் விரும்பும் மீன் வரும் வரை காத்துக்கொண்டிருப்பதைப் போல, நாமும் ,நமக்கு உரிய வாய்ப்பு வரும் வரை காத்திருக்க வோண்டும்


சிறப்பான வழிபாடு, ஆறுகால பூசை, வேண்டுதல், படையல் அன்னதானம், எனப் பல்வேறு வகையில் ஆண்டவனை வழிபாடு செய்கிறோமே, அதுகூட நடைபெறாமல் போய்விடும்! வானம்(மழை) பெய்யாமல் ,பொய்த்து விட்டால்!


பொருளற்ற, பரம ஏழைகளை அழிக்கக் கூடிய, கொடிய ,பசியாகிய நோயினைப் போக்குவதுதான் ,மிகுதியான பொருளைப் சேர்த்த ,ஒருவன் அப்பொருளைப் பாதுகாப்பாக வைக்கும் இடமாகும்! அதாவது ஏழைகளின் அழிபசி மிக்க வயிறுதான் வங்கியாகும், பாதுகாப்புப் பெட்டகமாகும் என்பதே வள்ளுவர் கருத்தாகும்!

                                  புலவர் சா இராமாநுசம்


Monday, July 1, 2013

நேற்றுஇரவு உறங்க வில்லை-ஏதோ நினைவுகள்! அதனால் அத்தொல்லை!நேற்றுஇரவு உறங்க வில்லை-ஏதோ
    நினைவுகள்! அதனால் அத்தொல்லை!
மாற்றி மாற்றி வந்தனவே-மேலும்
    மனதில் குழப்பம் தந்தனவே!
ஆற்ற முயன்றும் இயலவில்லை-ஏனோ
     அறவே சற்றும் துயிலவில்லை
காற்றில் பறக்கும் இலைபோல-வீணே
    கட்டிலில் புரண்டேன் அலைபோல!


எத்தனை மனிதர்கள் வந்தார்கள்-என்
    எண்ணத்துல் காட்சித் தந்தார்கள்!
பித்தராய்க் கண்டேன் சிலபேரை-தற்
    பெருமையே பேசும் சிலபேரை!
சித்தராய்க் கண்டேன் சிலபேரை-நல்
    சிந்தனை ஆளர்கள் சிலபேரை!
புத்தராய்க் கண்டேனே சிலபேரை-எதிலும்
   பொறுமை இல்லார் சிலபேரை!


எண்ணம் இப்படி சிதறிவிடும்-என்
    இதயம் அதனை உதறிவிடும்
வண்ணம் பலவழி முயன்றாலும்-முடிவில்
    வந்தது தோல்வியே என்றாலும்
கண்ணை மூடியே கிடந்தேனே-இரவு
    காலத்தை அவ்வண் கடந்தேனே!
உண்மை நிலையிது உரைத்தேனே-அந்த
    உணர்வினைக் கவிதையில் இறைத்தேனே!


விடிந்தது இருளும் ஓடிவிட-நெஞ்சில்
    விளைந்தநல் அனுபவம் பாடிவிட
முடிந்தது வலையில் ஏற்றிவிட-உங்கள்
   முன்னே இன்றும் தவழவிட
வடிந்தது வார்த்தையாம் இப்பாலே-நான்
   வணங்கும் தாய்த்தமிழ் கவிப்பாலே!
படிந்தது என்னுடை மனவானில்-நீங்கள்
    படித்திட தந்தேன் அலைவானில்!

              புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...