Thursday, September 5, 2013

உலக மக்களின் வாழ்வுக்குச் செய்திடும் சேவை ஆசிரியர் தின வாழ்த்து!
எழுத்ததை அறிவிப்பான் இறைவனாம் என்றே-என
   எண்ணியே ஆசிரியர் பணிசெய்ய நன்றே
அழுத்தமாய் பசுமரத் தாணியைப் போன்றே-நீர்
    ஆற்றிட வந்தீராம் சேவையாம் இன்றே
செழித்திட உலகது வேண்டுதல் நன்றே-என்
    சிரம்தாழக் கரம்கூப்பி செப்புதல் ஒன்றே
அழியாது இயற்கையைக் காப்பீரா மென்றே-வகுப்பு
    அறைதனில் மாணவர் முன்னாலே நின்றே
   
பருவங்கள் மாறிட உலகமே மாறும்-இதை
   படிக்கின்ற மணவர் உணரவே கூறும்
வருங்கால உலகமே அன்னாரின் கையில்-அதை
   வகுப்பது வகுப்பறை அறிவீரா பொய்யில்
தருகின்ற அழிவிற்கு ஜப்பானே சாட்சி-முன்னர்
   தமிழ்நாடு கண்டதும் அழியாத காட்சி
திருமிகு இப்பணி செய்திடின் நீரும்-நல்ல
   திருப்பணி யாகவே மலர்ந்திடும் பாரும்

பலவாறு பருவங்கள் மாறிட யிங்கே-தினம்
   பார்கின்றோம் யார்செய்த தவறுதான் எங்கே
நிலமகள் நடுங்கியே குலுங்கிட அந்தோ-தம்
  நெடும்வாயே திறந்துயிர் விழுங்கிட தந்தோம்
அலையாக பேராழி புகுந்திட உள்ளே-உலகு
  அழிகின்ற காட்சிகள் திரையது சொல்ல
விலையாக அழிப்பதோ நாள்தோறும் தன்னை-மேலும்
  விடுவாளா எண்ணுங்கள் இயற்கையாம் அன்னை

சுற்றும் சூழலும் கெட்டேதான் போச்சே-தினம்
   சுற்றிடும் உலகெங்கும் மாசாக ஆச்சே
கற்றும் பாடமே தெளியவே இல்லை-என்ன
   காரணம் யாருக்கும் புரியவே இல்லை
பெற்றவள் இயற்கையாம் அன்னையைக் காத்தே-நாம்-
   பேணுவோம் உலகென்னும் நம்பெரும் சொத்தே
மற்றெவர் போனாலும் மாணவர்  சேவைஉலக
   மக்களின் வாழ்வுக்குச் செய்திடும்  சேவை

                    புலவர் சா இராமாநுசம்

Wednesday, September 4, 2013

பதிவர் சந்திப்பும் என்கருத்தும் அறிவிப்பும்அன்பு  உறவுகளே!
              வணக்கம்!
        பதிவர்  சந்திப்பு  விழா நடந்து  இரண்டு நாட்கள்  ஓடிவிட்டன!  விழா மிகவும்  சிறப்பாக  நடை பெற்றது என்பதை  நேரில்  கலந்து  கொண்டவர்களும்  .கண்டு  வந்தோர்  வலைவழி  பதிவுகளாக  பலரும் எழுதியதன்  வாயிலாகவும்  அறிந்திருப்பீர்கள்!

       இதற்கான  ஆயத்தப் பணிகளை  கடந்த  இரண்டு  திங்களாக திட்டமிட்டு, ஒவ்வொரு  ஞாயிற்றுக்  கிழமையும்  கூடி விவாதித்து,
ஒட்டுமொத்த  விழாவின் அனைத்துக்  குழுவினரையும் அமைத்தும், பணியாற்றிய சென்னை  நகர இளைஞர்  படையின் ஒற்றுமையும் உயர்ந்த  பண்பும்,வெறும்  பாராட்டத் தக்கது  மட்டுமல்ல! என்றென்றும் போற்றத் தக்கது என்றால்  அது  மிகையல்ல!

       எதிர்  பலன்  நோக்காது , கைமாறு  கருதாது ,கடமை உணர்வோடு, கட்டுப்  பாடாக கண்ணியத்தோடு   அங்கும் , இங்கும் ஓடி விழாவன்று   அவர்கள் பணியாற்றிதைக்  கண்டவர்  பாராட்டினர் அதனைக் கேட்டு  நான் உள்ளம்  பூரித்துப்  போனேன்!

       இப்படை  தோற்கின்  எப்படை வெற்றி கொள்ளும்  என்ற கேள்விக்கு விடையாக  நின்ற  என் அன்பின்  இனிய  தம்பிமார்களின் கரங்களைப்  பற்றி  மூத்தவன் (வயதில்) என்ற முறையில் என்நன்றியினை  தெரிவித்துக்  கொள்வதோடு  அவர்கள்  வாழ்வாங்கு வாழ என் வாழ்த்தினையும்   தெரிவித்துக்  கொள்கிறேன்

      விழா தொய்வின்றி  நடைபெற  உள்நாட்டிலும், வெளி நாட்டிலும்  இருந்து  நிதி  அளித்து  உதவிய  அனைவருக்கும்  நாங்கள்  நன்றி  தெரிவிக்க  கடமைப்  பட்டுள்ளோம்!
   
           நன்றி!             நன்றி!               நன்றி! 

     மேலும்,  விழா  சிறப்பாக  நடைபெற  நாட்டின் பல்வேறு  இடங்களில் இருந்தும்  போக்கு வரத்து  போன்ற  தொல்லைகளை எல்லாம் கடந்தும் திரளாக வந்து  கூடிய  பதிவர்கள்  அனைவருக்கும்  எங்கள்  வணக்கத்தையும்  வாழ்த்தையும்   தெரிவித்துக்  கொள்கிறோம்

     வாழ்க பதிவர் !             வளர்க அவர்தம்  ஒற்றுமை!

                          புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...