Thursday, December 31, 2015

ஆங்கிலப் புத்தாண்டே வருக ! –வாழும் அனைவர்க்கும் ஆனந்தம் தருகஆங்கிலப் புத்தாண்டே வருக ! –வாழும்
அனைவர்க்கும் ஆனந்தம் தருக
ஏங்கியே ஏழைகள் வாழ – குடிசை
இல்லாமல் வளமனைச் சூழ
தாங்கிட அன்னாரை நீயும் –இன்பம்
தடையின்றிப் நிலையாக பாயும்
தீங்கின்றி கழியட்டும் ஆண்டே –மக்கள்
தேவைகள் நிறைவேற ஈண்டே


இயற்கையின் சீற்றங்கள் கண்டே –எங்கள்
இதயமும் உடைந்ததிவ் வாண்டே
செயற்கையால் வந்ததே அறிவோம் – இனி
செய்வதை ஆய்ந்துமே செய்வோம்
இயற்கையின் கோபத்தை நீக்க –எம்மின்
இன்னல்கள் இல்லாது போக்க
முயற்சியும் செய்வாய ஆண்டே – மக்கள்
முன்னேற தடையின்றி ஈண்டே

உழவனும் அழுகின்றான் இங்கே – அவன்
உழைத்தாலும் பலன்போதல் எங்கே
தழைத்ததா அவன்வாழ்வு இல்லை – தினம்
தவித்தவன் பெறுவதோ தொல்லை
பிழைத்திட பருவத்தில் மாரி – நீயும்
பெய்திடச் தருவாயா வாரி
செழித்திட உலகமே ஆண்டே –உடன்
செய்திட வேண்டினோம் ஈண்டே

இல்லாமை நீங்கிட வேண்டும் – ஏழை
இல்லாத நிலையென்றும் வேண்டும்
கல்லாதார் இல்லாமை வேண்டும் – கல்வி
கற்றாரை மதித்திட வேண்டும்
கொல்லமை விரதமாய் வேண்டும் –நற்
குணங்களும் வளர்ந்திட வேண்டும்
எல்லாரும் வாழ்ந்திட ஆண்டே –நீயும்
ஏற்றது செய்வாயா ஈண்டே!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, December 29, 2015

நாள்தோறும் கூடியதே நாடாளு மன்றம்-ஆனால் நடந்ததென்ன..?நாடறியும் இல்லைபலன் ஒன்றும்!நாள்தோறும் கூடியதே நாடாளு மன்றம்-ஆனால்
நடந்ததென்ன..?நாடறியும் இல்லைபலன் ஒன்றும்
தோள்தட்டி மார்தட்டி நடந்ததென்ன முடிவில்-இதில்
தோற்றதெவர் வென்றதெவர்! ஆயவதென்ன! விடிவில்!


கோடிகோடி கோடியென வரிப்பணமும் வீணே-ஏதும்
கொள்கையிலா கட்சிகளாய் இன்றிருத்தல் தானே
தேடிதேடி வீடுதோறும் வாக்குத்தர கேட்டார்-இன்று
தேம்பியழும் மக்கள்தானே நம்பியதைப் போட்டார்

பெரியதென்ன சிறியதென்ன ஊழல்தன்னில் அளவே-என
பேசுவதால் பலனுண்டா அத்தனையும் களவே
புரியாத மக்களென நினைத்துவிடில் தவறே-அதுவும்
புரிந்துவிடும் தேர்தல்வரின் உணர்திடுவர் அவரே

நிலையான கொள்கையென யாருக்கும் இல்லை-இன்று
நிறம்மாறும் பச்சேந்தி கட்சிகளே தொல்லை
விலையாகும் அரசியலே விளையாடும் இங்கே-எனில்
விலைவாசி ஏற்றத்தைத் தடுப்பவர்தான் எங்கே

பதவிக்கே வந்துவிட்டால் பேசுவதும் ஒன்றாம்-பதவி
பறிபோனால் பேசுவதோ மாறான ஒன்றாம்
முதலுக்கே தேவையில்லா அரசியலும் தொழிலாம்- சற்று
முயன்றாலே போதுமவர் வாழ்வேநல் எழிலாம்

நல்லவர்கள் வரவேண்டும் பொதுவாழ்வைத் தேடி-அந்த
நாள்வந்தால் வரவேற்பர் மக்களெலாம் கூடி
அல்லவர்கள் மீண்டும்வரின் இந்நிலையே என்றும்-இந்த
அவலந்தான் முடியாத தொடராக நின்றும்

புலவர் சா இராமாநுசம்

Saturday, December 26, 2015

தங்கும் குடிசையும் தரைமட்டம்-பனி, தையின் குளிரோ எமைவாட்டும்!பொங்கிய வெள்ள போயிற்றே-கண்ணீர்
பொங்கும் நிலைதான் ஆயிற்றே!
திங்கள் ஒன்றும் ஆகிறதே-இங்கே
தினமும் நெஞ்சம் வேகிறதே!
எங்கள் வாழ்வும் நலமுறுமா-மழை
இழைத்த அழிவும் வளமுறுமா?
தங்கும் குடிசையும் தரைமட்டம்-பனி,
தையின் குளிரோ எமைவாட்டும்!


புள்ளி விபரம் போடுகின்றார்-வந்து
போவதும் வருவதாய் ஒடுகின்றார்!
அள்ளிப் போடவும் மனமில்லை-ஐந்து
ஆயிரம் அளிப்பதால் பயனில்லை!
கொள்ளி வைக்கவே பயன்படுமே-எம்
குடும்பமே அதிலே எரிபடுமே!
வெள்ளம் வந்தால் வடிந்துவிடும்-துயர
வெள்ளத்தில் ஊரே மடிந்துவிடும்!

யானைப் பசிக்கு எதுவேண்டும்-அரசே
எமக்கு உதவ நி(ம)திவேண்டும்!
ஏனோ உடமைகள் இழந்திட்டோம்-வாழ
ஏதினி வழியின்றி அழிந்திட்டோம்!
விணே எம்மை வாட்டாதீர்-வெறும்
வார்த்தையால் திட்டம் தீட்டாதீர்!
தேனாய் இனித்திட வாழ்ந்தோமே-எட்டு
திசையும் இருண்டிட வீழ்ந்தோமே!

புலவர் சா இராமாநுசம்

Friday, December 25, 2015

ஏதிலார் குற்றத்தை ஆய்தல் போல -வாழ்வில் எவனொருவன் தன்குற்றம் ஆய்ந்து சாலஏதிலார் குற்றத்தை ஆய்தல் போல -வாழ்வில்
எவனொருவன் தன்குற்றம் ஆய்ந்து சால
தீதிலா வாழ்வுதனை நடத்தல் நன்றாம்-அதுவே
திருக்குறள் சொல்லும் நீதி ஒன்றாம்
ஓதிய வள்ளுவன் உரையைக் கொண்டே-தமது
ஊர்மெச்சி பாராட்ட செய்யின் தொண்டே
மேதினி திரளுமே அவரின் பின்னால்-நாளும்
மேன்மேலும் வளருமே புகழும் தன்னால்

புலவர் சா இராமாநுசம்

Thursday, December 24, 2015

முகநூல் பதிவுகள்!
கெடுதலை செய்த மழை ஓய்ந்து விட்டது! இட்ட பயிர் அழிந்து விட்டது என்றாலும் வள்ளுவன் ஒரு குறளில் சொன்ன பாதி முடிந்தது! இனி மறுபாதி நடக்க வேண்டுமல்லவா! நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது ! விவசாயம் செழிக்க என்ன வழி!? உழவன் பாடுபட, வேண்டிய உதவிகளை மத்திய .மாநில அரசுகள் ஆவன உடனே செய்ய வேண்டும் அப்பணி விரைந்து நடந்தால்தான் விலைவாசி விலை குறையும் மக்கள் ஒரளவாது நிம்மதி காண்பர்!

குற்றம் ஏதும் இல்லாதவனாக மக்களுக்கு நன்மை செய்து முறையாக ஆளும் அரசனை அவன் நாட்டு மக்கள் மட்டுமல்ல உலகமே சுற்றமாக எண்ணி மகிழ்ந்து பாராட்டும் என்பது வள்ளுவர் வாக்கு!

கெடுதல் வருவதில் இரண்டு வகை ! ஒன்று செய்யக் கூடாத வேலைகளை செய்வதனாலும் வரும்! அடுத்தது செய்ய வேண்டிய செயல்களை உரிய காலத்தில் செய்யாமல் விடுவதாலும் வரும் இன்று சென்னை அழிவுகுக் காரணமே இவைதான் ! ஆக்கிரம்பை தடுக்காததோடு உரிய காலத்தில் செய்ய வேண்டிய பணிகளை செய்ய தவறியது தான்

புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, December 22, 2015

முறையல்ல முறையல்ல மத்திய அரசே-மக்கள் முடமாகி விட்டாரே மத்திய அரசே!முறையல்ல முறையல்ல மத்திய அரசே-மக்கள்
முடமாகி விட்டாரே மத்திய அரசே
குறைசொல்லும் நோக்கமல்ல மத்திய அரசே-நெஞ்சக்
குமுறலாம் ஆக்கமிது மத்திய அரசே
கறையாகும் கறையாகும் மத்திய அரசே –உடன்
கண்ணீரைத் துடைப்பிரா மத்திய அரசே
நிறைவான நிதிதன்னை மத்திய அரசே-துயர்
நீங்கிட உதவுங்கள் மத்திய அரசே


காலத்தில் உதவாது மத்திய அரசே –மேலும்
காலத்தைக் கடத்தாதீர் மத்திய அரசே
ஆலத்தை உண்டார்க்கு மத்திய அரசே –தேவை
அவசர சிகிச்சைதான் மத்திய அரசே
உயிர்மட்டும் மிஞ்சிட மத்திய அரசே-மாற்று
உடைகூட இல்லாது மத்திய அரசே
வயிர்மட்டும் உணவுக்கு மத்திய அரசே-ஏனோ
வைத்தானோ இறைவன் மத்திய அரசே

புலவர் சா இராமாநுசம்

Sunday, December 20, 2015

மாண்பு மிகு முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!அள்ளிக் கொடுத்தாலும் சரி செய்ய முடியாத பேரழிவு அடைந்துள்ள தமிழகத்திற்கு மத்திய அரசோ கிள்ளிக் கொடுப்பது நியாயமா!???
மாண்பு மிகு முதல்வர் கடிம் எழுதினால் மட்டும் போதுமா?
நேரில் போங்கள் இத்தனை எம்-பிக்களை உடன் அழைத்துக் கொண்டு
பிரதமரைச் சந்தித்து வலியுறுத்துங்கள்!

 புலவர்  சா  இரா மாநுசம்

Saturday, December 19, 2015

தூய்மை வருமே துணை!அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல உம்மை
இகழ்வாரைத் தாங்கி இருப்பீரேல் –புகழாக
வாய்மை வழிநடத்த வாழ்ந்தாலே உள்ளவரை
தூய்மை வருமே துணை

புலவர்  சா  இராமாநுசம்

Friday, December 18, 2015

வெட்கப்படுவதா!? வேதனைப் படுவதா!பதவி ஒன்றே குறிக்கோள் இன்றைய தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு! இதில் எந்த கட்சிகளும் விதிவிலக்கல்ல! அல்லல் பட்டு ஆற்றாது இன்னும் கண்ணீர் விடும் மக்களின் கண்ணீரைத் துடைக்க அனைத்து கட்சிகளும் இணைந்து பாடுபட முயலாமல் வரும் தேர்தலில் வெற்றி பெற யாரோடு யார் சேர்வது என்ற கூட்டணி பேரம் தொடங்கி விட்டது ! இதனைக் கண்டு வெட்கப்படுவதா!? வேதனைப் படுவதா!

புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, December 15, 2015

திருவினை இழந்தோர் போற்ற –வழிகள் தேடியே புண்ணை ஆற்றும்!நடந்தது நடந்தது போக- இனியே
நடப்பது நலமாய் ஆக
திடமொடு முடிவு எடுப்பீர் –மக்கள்
தேவையை அறிந்து நடப்பீர்
கடமையாய் எண்ணிச் செயல்பட – சகல
கட்சிகள் இணைந்து புறப்பட
உடமைகள் இழந்த மக்கள் –துயர
உள்ளத்தின் புண்ணை ஆற்றும்


ஒருவரை ஒருவர் சாடி –மேலும்
உரைப்பதால் தீமைக் கோடி
வருவதால் உண்டா பலனே –அதனால்
வாராது மக்கள் நலனே
பெறுவது ஏதும் இல்லை-நாளும்
பெற்றது தீராத் தொல்லை
திருவினை இழந்தோர் போற்ற –வழிகள்
தேடியே புண்ணை ஆற்றும்

புலவர் சா இராமாநுசம்

Monday, December 14, 2015

தாங்காது தாங்காது இயற்கைத் தாயே –உடன் தடுத்திடு வாராமல் தொத்து நோயே

தாங்காது  தாங்காது  இயற்கைத்   தாயே –உடன்
      தடுத்திடு   வாராமல்   தொத்து  நோயே
தூங்காத  விழியிரண்டின்  துணையக்  கொண்டும் விரைந்து
       தொலையாத  இரவுயென  துயரம்   மண்டும்
நீங்காத  என்றேதான்  நாளும்  பொழுதும்-அந்தோ
       நிலையான  நிலையாலே நெஞ்சுள்  அழுதும்
தேங்காது  கண்ணீரும்  சிந்து  கின்றோம்  -இயற்கைத்
      தேவியேயுன் திருவடி  தொழுது  நின்றோம்!

புலவர்  சா  இராமாநுசம் Sunday, December 13, 2015

முகநூல் பதிவு!நடுத்தர மக்களே! இனியாவது யோசிக்க வேண்டுகிறேன் இதுவரை இராமன் ஆண்டால் நமக்கென்ன , இராவணன் ஆண்டால் நமக்கென்ன என்று ஓட்டுப் போடுவது கூடவீண்வேலை என்று எண்ணியது போதும் உங்களைப் போன்றவர் ஒதிங்கிக் கொண்டதின் விளைவு இன்றைய நிலை வெளியே வாருங்கள்! வருவீர்களா????

புலவர்  சா  இராமாநுசம் 

Friday, December 11, 2015

தொற்று நோயும் வருமுன்னே-எண்ணித் தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னைஎங்கு காணிலும் குப்பையடா-நம்
எழில்மிகு சென்னை காட்சியடா
பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில்
போடுவார் மேலும் எட்டியடா
தங்கும் மழையின் தண்ணீரும்-செல்ல
தடைபட அந்தோ! மிகநாறும்
இங்கே எடுக்க ஆளில்லை-அதை
எடுத்துச் சொல்லியும் பலனில்லை


பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
பரவிக் கிடப்பது பெருந்தொல்லை
வேதனை தீரும் வழிகாண்பீர்-எனில்
வீணே நீரும் பழிபூண்பிர்
சோதனை போல கொசுக்கடியே-எடுத்து
சொல்ல இயலா நெருக்கடியே
நாதம் இசைத்தே படைபோல-எமை
நாடி வருமோர் தினம்போல

தொற்று நோயும் வருமுன்னே-எண்ணித்
தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை
மற்றது பின்னர் ஆகட்டும்-குப்பை
மலையென கிடப்பது போகட்டும்
குற்றம் சொல்வது நோக்கமல-இது
குத்தும் கவிதை ஆக்கமல
வெற்றுச் சொல்லும் இதுவல்ல-பட்ட
வேதனை விளைவாம் இதுசொல்ல

அண்மை காலமாய் இவ்வாறே-ஏனோ
அடிக்கடி நடப்பது எவ்வாறே
உண்மை எதுவோ வேண்டாமே-உரியோர்
உணர்ந்தால் போதும் ஈண்டாமே
நன்மை ஒன்றே உடன்தேவை-மா
நகர ஆட்சிக்கு இப்பாவை
சொன்னேன் ஐயா! தவறில்லை-ஆவன
செய்வீர் வேறு வழியில்லை!

புலவர் சா இராமாநுசம்

Thursday, December 10, 2015

கோட்டையை ஆள்வோர் மட்டுமே-இக் கொடுமையை நீக்க இயலாதே!


கோட்டையை ஆள்வோர் மட்டுமே-இக்
கொடுமையை நீக்க இயலாதே!

எண்ணிப் பாரும் நல்லோரே-நல்
இதயம் படைத்த பல்லோரே
கண்ணில் படுவது வீதியிலே-எங்கும்
காகித பிளாஸ்டிக் குப்பைகளே!
விண்ணில் காற்றில் பறந்திடுமே-வந்து
விரைவாய் முகத்தில் மோதிடுமே!
திண்ணிய முடிவும் எடுப்பீரா-குப்பை
தெருவில் போடவும் தடுப்பீரா!


வீட்டை சுத்தம் ஆக்குதும்-அள்ளி
வீதியில் குப்பையைத் தேக்குவதும்!
கேட்டை நாமே தேடுவதாம்-பிறர்
கேட்பினும் , அவரைச் சாடுவதாம்!
நாட்டைக் கெடுக்கும் நோயன்றோ-தொற்று
நோய்கள் பிறக்கும் தாயன்றோ!
கோட்டையை ஆள்வோர் மட்டுமே-இக்
கொடுமையை நீக்க இயலாதே!

தொட்டி இருக்கும் ஆனாலும்-கையில்
தூக்கிக் கொண்டு போனாலும்!
எட்டி நின்றே குப்பைகளை-தூக்கி
எறிந்து விட்டுச் செல்வாரே!
தட்டிக் கேட்பின் வைவாரே-அந்த
தவறே நாளும் செய்வாரே!
கொட்டிய குப்பையோ உதறிவிட-மிக
குறையின்றி வீதியில் சிதறிவிடும்!

சொன்னால் செய்பவர் சிலபேரே-எவர்
சொல்லினும் கேளார் பலபேரே!
தன்னால் உணர்பவர் இருப்பாரே-சிலர்
தனக்கென என்றும் போவரே!
முன்னாள் அனுபவம் பலவற்றை-இங்க
முறையாய் அதிலே சிலவற்றை!
என்னால் ஏதோ முடிந்தவரை-ஐயா
எழுதினேன் தருவீர் கருத்துரையே!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, December 9, 2015

அன்பின் இனிய உறவுகளே!


அன்பின் இனிய உறவுகளே!
வணக்கம்! நான் நலமாக உள்ளேன்! என்பால் பேரன்பு கொண்டு விசாரித்த அனைவருக்கும் மிக்க நன்றி! கடந்த, நடந்த எதையும்
மீண்டும் நினைத்துப் பார்க்கவோ எழுதவோ விரும்ப வில்லை! ஆண்டவன் அருளும் உங்கள் அனைவரின் அன்பும் என்னை வாழவைக்கிறது என்பது மட்டும் உண்மை!!

புலவர்  சா  இராமாநுசம்

Sunday, December 6, 2015

பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை, பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல் ஆகும்!பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை,
பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல் ஆகும்!
அழுதுகிட்டே மீன்பிடிக்கும் மீனவன் போல -அவன்
அல்லலுக்கு விடிவுண்டா என்றும் சால!
பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை,
பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல் ஆகும்!
பொழுதுமுட்ட குடிக்கின்றான் கவலை அகல –இல்லம்
போனபின்னர் அவன்செயலை எடுத்துப் புகல!
விழுதுகளாம் பிள்ளைகளும் மனைவி என்றே –படும்
வேதனையை விளக்குவதும் எளிதும் அன்றே!
பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை,
பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல் ஆகும்!

நஞ்சுண்ட விவசாயி கண்டோம் இன்றே –வரும்
நாட்களிலே நடக்குமிது காணும் ஒன்றே!
பஞ்சுண்டு நெய்வதற்கும் ஆலை யுண்டே –ஆனா
பலநாளாய் மூடியது அரசின் தொண்டே!
பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை,
பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல் ஆகும்!
கஞ்சுண்டு வாழ்வதற்கும் தொட்டி கட்ட –அரசு
கருணையுடன் மானியமே நம்முன் நீட்ட!
நெஞ்சுண்டு நன்றிமிக வாழ்வோம் நாமே –பெரும்
நிம்மதியாய் அஞ்சலின்றி நாளும் தாமே!
பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை,
பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல் ஆகும்!
புலவர் சா இராமாநுசம்

Tuesday, December 1, 2015

அன்று, 2012-ல் மழைவர வேண்டி பாடிய பாடல்!!!! இன்று????


அன்று, 2012-ல் மழைவர வேண்டி பாடிய பாடல்!!!!
இன்று????

மழையே மழையே வாராயோ-நீரும்
மன்னுயிர் வாழ்ந்திட தாராயோ?
விழையா ரிடமே பெய்கின்றாய்-உன்னை
விழைவா ரிடமே பொய்கின்றாய்!
அழையா விருந்தென போகின்றாய்-இங்கே
அழைத்தும் வந்துடன் ஏகின்றாய்!
பிழையார் செய்யினும் பொறுப்பாயே-உற்ற
பிள்ளைகள் எம்மை வெறுப்பாயா!


சிறப்பொடு பூசனை செல்லாதே-வான்துளி
சிந்தா விட்டால் நில்லாதே!
அறத்தொடு வாழ்வும் அகன்றுவிடும்-மனதில்
அன்பும் பண்பும் இன்றிகெடும்!
துறவும் தவறித் தோற்றுவிடும்-பசித்
தொல்லை அதனை மாற்றிவிடும்!
மறவாய் இதனை மாமழையே-மக்கள்
மகிழ்ந்திட வருவாய் வான்மழையே!

உழவுத் தொழிலும் நடக்காதே-யாரும்
உண்ண உணவும் கிடைக்காதே!
அழிவே அனைத்தும் பெற்றுவிடும்-நெஞ்சில்
அரக்க குணமே முற்றிவிடும்!
எழுமே அலைகடல் தன்நீர்மை-விட்டு
ஏகும் என்பதும் மிகுஉண்மை!
தொழுமே வாழ்ந்திட மனிகுலம்-மழைத்
தூறிட வந்திடும் இனியவளம்!

வானின்றி உலகம் வாழாது!-ஐயன்
வகுத்த குறளுக்கு நிகரேது!
ஏனின்று அவ்வுரை சரிதானே-மழை
இன்றெனில் வாழ்வும் முறிதானே!
கானின்று குறைந்திட இத்தொல்லை-இனி
காண்போம் ஓயாப் பெருந்தொல்லை!
தான்நின்று பெய்யா மழைமேகம்-எனில்
தவிர்த்திட இயலா தரும்சோகம்!

புலவர் சா இராமாநுசம்

Sunday, November 29, 2015

போதுமடா சாமி –நாங்க பொழைக்கவழி காமிபோதுமடா சாமி –நாங்க
பொழைக்கவழி காமி
சேதமதிக மாச்சே –ஏதும்
செய்யமுடி யாபோச்சே

அளவுமிஞ்சி போனா –எதிலும்
அழிவுவரும் தானா
களவுபோன பொருளே –உடன்
காட்டுமுந்தன் அருளே

 மேலும்வரு     மென்றே-பயம்
மேலும்வர நன்றே
மூளுமச்சம் நெஞ்சில்-தீயை
மூட்டுவதா பஞ்சில்

கருணைகாட்டு சாமி –உடன்
காக்கவாரும் பூமி
வருணதேவன் பாரும் –எங்கள்
வாழ்கைதனை காரும்

புலவர் சா இராமாநுசம்

Wednesday, November 18, 2015

மாண்பு மிகு முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்!


உறவுகளே வணக்கம்!
நான் முன்பே எழுதியதைப் போல இவ்வளவு மழை பெய்தும் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரிமட்டும் முழு அளவினை
எட்டவில்லை மற்ற ஏரிகள்( சோழவரம், பூண்டி, செம்பரம் பாக்கம்) நிரம்பியதோடு உபரி நீர் வெளியேறி வெள்ளச்சேதம் ஏற்படத்தியுள்ள செய்திகளை அனைவரும் அறிவீர்! இதனால் தெரிவது புழல் ஏரிக்கு நீர் வரும் வழிகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளநிலைமை உள்ளங்கை நெல்லிக்கனி என்பதுபோல் தெளிவாகத் தெரிகிறது
ஆகவே எதையும் துணிவோடு செய்யக்கூடியவர் என பெயர் பெற்ற நமது மாண்புமிகு முதல்வர் அவர்கள், பழைய கோப்புகளை எடுத்து ஆய்வு செய்து, அனைத்து ஆக்கிரமிப்புகளையும், யாரானாலும் எந்த கட்சி ஆனாலும் தயவு காட்டாமல் போர்கால அடிப்படையில் உடனடி அகற்ற நடவடிக்கையை எடுக்குமாறு வேண்டுகிறோம் இதுதான் உரிய தருணம் நாள் தள்ளிப் போனால் ஆறின சோறு ஆகிவிடும் மீண்டும் மீண்டும் வேண்டுகிறோம்! செய்வீகளா!

புலவர்  சா  இராமாநுசம்

Saturday, November 14, 2015

என் முகநூல் பதிவுகள்!
உறவுகளே வணக்கம்!
இடைவிடாது பெய்த கனமழையால் தமிழகத்தில் பல ஏரிகள் நிரம்பியும் வழிவதோடு உடைந்தும் போவதாகச். செய்திகள் வரும் நிலையில் சென்னக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள்( புழல்.பூண்டி.சோழவரம் செம்பரம்பாக்கம) மட்டும் நிரம்பாததோடு நான்கில் ஒருபங்கு அதாவது மாநகரின் மூன்றுமாத தேவைக்கு உரிய நீர்தான் மொத்தமாக வந்துள்ளதாகக்
குடிநீர் வாரியம் அறிவித்துள்ள செய்தி மிகவும் வேதனையானது! நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்தும் ஏரிகள் நிரம்பா நிலைக்கு . யார்,என்ன காரணம் நீர் வரும் வழிகள் அனைத்தும் ஆக்கிரமப்பு செய்யப்பட்டுள்ளனவா!!!? அவ்வாறு இருந்தால் உடன் அவற்றை அகற்ற அதிகரிகளும் அரசும் செயல்பட வேண்டும்
மாண்புமிகு முதல்வர் அவர்கள் உடன் தலையிட்டு ஆய்வு செய்ய ஆணையிட வேண்டுகிறோம்!

உறவுகளே!இன்று பெய்யும் கடுமையான மழையினால் நாம் பெற்றுவரும் சேதங்கள் அனைத்தையும் பார்க்கும் போது வள்ளுவன் கூறிய குறள் தான் நினைவிற்கு வருகிறது! குற்றமோ, தவறோ, துன்பமோ எதுவானாலும் அது வருவதற்கு முன்
பாதுகாப்பினை தேடிக்கொள்ள வேண்டும் இலையென்றால்
எரியும் தீயின் முன்னால் வைக்கப் பட்ட வைக்கோல் போல எரிந்து விடும்
இதுபோலத்தான் இன்று தமிழக அரசு செய்து வரும் வெள்ள நிவாரண பணிகளின் நிலையும் உள்ளன!
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர
வைத்தூறு போலக் கெடும்- குறள்

கரடு முரடான பாதையிலேயே நடந்து பழக்கப்பட்டு வந்தவனுக்கு சமதரையிலே நடக்கும் போது மகிழ்ச்சி வரும். சமதரையிலேயே நடந்து பழக்கப்பட்டு வந்தவனுக்கு கரடு முரடான பாதையிலேயே நடக்கும் போது துன்பம் தரும்! ஆனால் இரண்டு வழிகளிலும் நடந்து பழக்கப்பட்டு வந்தவனுக்குப் பக்குவம் வரும்! நம்முடைய வாழ்க்கையும் இப்படித்தான் அமையும்! அமைய வேண்டும்

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...