Wednesday, June 11, 2014

முகநூல் துணுக்குகள்!
1 உறவுகளே! வணக்கம்!

உலகில் , மனிதனாகப் பிறந்த , ஒவ்வொருவரிடமும் குணமும்
உண்டு, குற்றமும் உண்டு . இரண்டின் கலவைதான் மனிதப் பிறவி
குற்றமே செய்யாதவர் ,குணமே இல்லாதவர் , என எவருமே இல்லை
ஆகவே, நாம் எவரோடு தொடர்பு வைப்பது ,என்றால் , அவரிடம் உள்ள
நல்ல குணங்களை ஆய்வு செய்தும், குற்றங்களை ஆய்வு செய்தும் ,அவற்றுள் எது அதிகமாக (குணம், குற்றம்) உள்ளதோ , அதனை ஏற்று
பழகுவது நன்று!

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.- குறள்


2 உறங்கிக் கிடக்கும் தமிழகமே! எழுவாயா! அன்றி, அழிவாயா!!!!?

முல்லைப் பெரியாறு என்றாலே , கட்சி வேறுபாடுகளை மறந்து
ஒரணியாய் திரள்கிறது கேரளம்! அதுபோலவே கர்நாடகமும் காவிரி
மேலாண்மைக் குழு அமைக்க எதிர்த்து ஒரணியாய் திரள்கிறது!! ஆனால் .......? தமிழகமோ !இங்குள்ள, கட்சிகளோ......

அவிழ்த்துக் கொட்டிய நெல்லிக்காய் மூட்டைபோல, சிதறி, உதிரிப் பூக்களாய் ஒட்டாமல் ஈகோ யுத்தம் நடத்துகின்றன! ஒன்றுபட வேண்டாமா ! நீரின்றி தமிழகம் பாலைவனம் ஆவதை தடுக்க, வேண்டாமா காலம் தாழ்த்துவது நன்றல்ல!
எனவே, மாண்புமிகு முதல்வர் அவர்களே, உரிய முயற்சி எடுத்து
அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து, ஒன்று படுத்தி அழைத்துச் சென்று பாரதப் பிரதமர் அவர்களை சந்தித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமுல் படுத்த ஆவன செய்ய வேண்டும் !
3 சொல்லுகின்ற பொருள் ,நல்லதோ, கெட்டதோ ,எதுவானாலும், அதனைச் சொல்லுகின்றவர் , உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ ,எவரானாலும்,நாம், அப்பொருளைப் பற்றி ஆராய்ந்து, அதன் உண்மைப் பொருளை உணர்வதுதான் அறிவாகும்!!

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவுகுறள்

4 எந்த ஒரு செயலையும் செய்ய முற்படும்போது அதனைப் பற்றி நன்கு ஆராய்ந்து.தகுதியான ஒருவனிடம் ஒப்படைக்க , வேண்டும்
அதாவது, இந்த, செயலை ,இப்படிப் பட்ட வழிகளின் மூலமாக,
இவன், செய்து முடிக்க வல்லவன் என ஆய்ந்து,அறிந்து அச்செயலை
அவனிடத்தில் விட வேண்டும்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்- குறள்


5 மாண்பு மிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு வாழ்த்தும் வேண்டுகோளும்!

ஐயா!
வரலாற்று ,சிறப்பு மிக்க வெற்றி பெற்று, பதவி
ஏற்றுள்ள தங்களை, வாழ்த்துகிறேன்! வணங்குகிறேன்! அத்துடன்,
இப் புலவனின் வேண்டு கோளாக ,ஒன்றை உங்களிடம் தாழ்மையோடு தெரிவித்துக் கொள்கிறேன்

திருமிகு, இராஜீவ் காந்தி படுகொலை பற்றிய வழக்கில்
குற்றவாளிகளாக கருதப்பட்டு ,பிறகு உச்ச நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில்
தமிழக ,மாண்பு மிகு முதல்வர் அவர்களால் விடுதலை செய்யப்பட்ட
எழுவரையும் முந்தைய மத்திய அரசு தடை விதித்து நிறுத்தி வைத்துள்ளது. இது, முறையற்ற , நியாமற்ற செயலாகும் . ஆகவே
தாங்கள் அருள் கூர்ந்து எழுவரையும் விடுதலை செய்ய , ஆணை யிட வேண்டுகிறோம்!

புலவர்  சா  இராமாநுசம்
-Monday, June 9, 2014

பகல்கொள்ளை அடிக்கின்றார் தனியார் இன்றே- கல்விப் பணியென்ற பெயராலே நாளும் நன்றே!பகல்கொள்ளை அடிக்கின்றார் தனியார் இன்றே- கல்விப்
பணியென்ற பெயராலே நாளும் நன்றே!
நகக்கண்ணில் ஊசிதனை ஏற்றல் போல –ஏழை
நடுத்தர குடும்பங்கள் கடனில் மாள!
அகந்தன்னில் பொருளாசை மிகுந்து போக –அரசு
அதிகார வர்கமிதை அறிந்தும் ஏக!
புகலின்றி வாடுதலும் கொடுமை அன்றோ –மக்கள்
புலம்புவதும் தீருகின்ற நாளும் என்றோ!

ஆங்கிலத்தை முதலீடாய் வைத்துக் கொண்டே –நடக்கும்
அநியாயம் இதுவென்றே எடுத்து விண்டே!
ஓங்குபுகழ் தமிழ்தன்னை ஒதுக்கித் தள்ளி –இதுவும்
ஒவ்வாது என்பாரின் உணர்வை எள்ளி!
தீங்குதனை அறியாது தேடிச் செல்வார் –கடலில்
திசையறியாக் கப்பலென! எவ்வண் வெல்வார்!
நீங்குவழி காணவில்லை! வணிகம் தானே –கல்வி
நிலையென்றால் ! அதற்காக வருந்தல் வீணே!


புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...