Friday, March 22, 2013

செம்புல நீராக செயல்படுவாய் தமிழினமேஒப்புக்கே தீர்மானம் ஒபாமா கொண்டுவர
செப்பிக்க ஆதரவும்  செப்பியது  இந்தியா
உப்புக்கும்  உதவாத  ஒன்றலவா அதுவும்
தப்பிக்க  மாற்றுவழி தமிழர்களே காணுங்கள்!

ஓரங்க  நாடகத்தை  ஒருவழியாய்  அனைவருமே
பேரங்கம்  தன்னில்  பேசிமுடித்  துவிட்டார்
ஊரெங்கும்  ஊர்வலமே  உண்ணா  விரதமென
யாரிங்கே  செய்யினும்  என்னபயன்  தனித்தனியே!

உள்ளத்   தூய்மையுடன் ஒன்றுபட்ட  நிலையுண்டா
கள்ள   நினைவுடனே  கைகோர்க்கும்  செயல்தானே
தெள்ளத்  தெளிவாகத்  தெரிகிறது  கண்டோமே
வெள்ளம்போல்  மாணவர்கள்  வீறுகொண்ட  பின்னாலும்!

செம்புல  நீராக  செயல்படுவாய்  தமிழினமே
வன்புல வடநாடு  உணரட்டும்  மிரளட்டும்
உன்பலம்  அறியட்டும்  ஒன்றுபடு!  ஒன்றுபடு!!
தம்பலம் காட்டியே  தமிழனே  வென்றுவிடு!!

                புலவர்  சா  இராமாநுசம்

               

Wednesday, March 20, 2013

மதில்மேல் பூணை நிலைபோலும்-நம் மத்திய அரசின் நிலை!மேலும்
மதில்மேல் பூணை நிலைபோலும்-நம்
மத்திய அரசின் நிலை!மேலும்
புதிர்போல் பதிலும் தோன்றிடுமே-ஐயம்
புகுந்திட மனதில் ஊன்றிடுமே!
எதிலும் இதுவே வாடிக்கையா-என
எண்ணிட செய்வது வேடிக்கையா
பதிலில் குழப்பமே! தெளிவில்லை!-எங்கள்
பாரதப் பிரதமரே! இதுஎல்லை!

முழுவதும் அரசுக்குக் கிடைக்கிலையா-அன்றி
முழுமனம் கொண்டிட இடமிலையா
அழுவது போலிது நாடகமா-பதில்
அளித்தது எதற்கோ? பூடகமா!
தொழுவது எல்லாம் முடிந்தகதை-இங்கே
தோன்றும் மற்றோர் இடிந்தகரை!
எழுவது தடுத்திட முனைவீரே-ஓட்டு
இலங்கைக்கு எதிர்ப்பாய் தருவிரே!

சென்றது சென்றன ஆகட்டும்-நாம்
செய்தன பாபம்! போகட்டும்!
கொன்றன ஒன்றா ஆயிரமா?-சிங்களக்
கொடியோர் செய்தது? பல்லாயிரமா!
இன்றென வந்தது சிறுவிடிவே!-இதில்
எடுப்பீர் பிரதமரே நல்முடிவே!
நன்றென உலகம் வாழ்த்தட்டும்-தமிழ்
நாடும் மகிழ்ந்து போற்றட்டும்!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, March 19, 2013

ஒட்டுமொத்த மாணவரும் கிளம்பி விட்டார்-இன்று ஊர்தோறும் விரதமென ஒன்று பட்டார்


ஒட்டுமொத்த மாணவரும் கிளம்பி விட்டார்-இன்று
ஊர்தோறும் விரதமென ஒன்று பட்டார்
பட்டுமெத்தை பதவிசுகம் தேடீ யல்ல!-அவர்
படிக்காமல் பட்டம்பெற விரும்பி அல்ல
திட்டமிட்டு தினந்தோறும் சிங்கள வெறியன் -பெரும்
தீங்குதனை தமிழருக்கு இழைக்கும் சிறியன்
கொட்டமிடும் பக்சேவை குற்றக் கூண்டில்
கொலைக் குற்றவாளியென நிறுத்தல் வேண்டி!

மறவர்குல மாணிக்கம் மாணவர் ஆமே -இங்கே
மனமுருகி துயர்பட்டு பொங்கி தாமே
அறவழியில் போராடி வருதல் காண்பீர் -காந்தி
அண்ணல்வழி வெற்றியென உறுதி பூண்பீர்
இனவெறியன் தண்டனைக்கு மத்திய அரசே-உடன்
ஏற்கட்டும் உறுதியென போரின் முரசே
தனையிங்கே கொட்டிவிட ஆவன செய்வீர் -எவர்
தடுத்தாலும் ஓயாது! அறிந்தால் உய்வீர்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...