Friday, September 21, 2012

பலபேர்ப் பதிவே எழுதவில்லை-இந்த பாழும் மின்வெட்டு! பெருந்தொல்லை!

பலபேர்ப் பதிவே எழுதவில்லை-இந்த
    பாழும் மின்வெட்டு! பெருந்தொல்லை!
புலராப் பொழுதே ஆனதுவே-துயர்
   பொங்கிட நிலையாய்ப் போனதுவே
தளரா அந்தோ! மின்வெட்டே-நம்
    தமிழகம் முற்றும் தொழில்கெட்டே
வளராப் பயிரும் கருகிவிடும்-பெரும்
    வறுமையும் பஞ்சமும் பெருகிவிடும்

சிலபேர் பதிவை படித்திடுவேன்-பதில்
    செப்பிட இயலா! திடுக்கிடுவேன்
உளபோல் தோன்றும் இல்லாகும்-எங்கும்
    உள்ள நிலைமை இதுவாகும்!
செலவும் வரவும் அறியோமே-எடுத்து
    செப்பிட ஏதும் இயலாமே
அலைபோல் உள்ளம் அலைகிறதே-என்ன
   ஆகுமோ? என்றே குலைகிறதே!

பகலும் இரவும் சரிபாதி-இங்கேப்
  பவர்கட் தருவதும் சரிபாதி!
அகலும் நாளும் வந்திடுமா-படும்
   அல்லல் நீக்கித் தந்திடுமா?
புகல அரசால் முடியாதே-திட்டம்
   போட்டால் அன்றி விடியாதே!
இகலே அரசியல் ஆனதுவே-காணல்
   இயல்பாய் நமக்கும் போனதுவே!


ஓட்டு ஒன்றே குறியாக-இங்கே
   உள்ள கட்சிகள் நெறியாக
காட்டும் நிலையே காண்கின்றோம்-இதைக்
   கண்டே மனமும் நாணுகின்றோம்
போட்டிகள் எதிலும் நாள்தோறும்-சண்டைப்
    போடுவர் உள்ள ஊர்தோறும்
வாட்டுது அந்தோ! மின்கட்டே-ஐயா!
   வந்திடும் மேலும் மின்வெட்டே!

                            புலவர் சா இராமாநுசம்

Wednesday, September 19, 2012

இன்றுவிட்டால் போதுமென ஓடும்நிலை தருவோமா?அச்சமின்றி வருகிறான்  அளவளாவி போகிறான்
இச்சகத்தில் தமிழனே   இளிச்சவாயன் ஆகிறான்
கச்சத்தீவைக் கொடுத்தமே கண்டபலன் என்னவோ
துச்சமாக எண்ணியே தொல்லைநாளும் பன்னவோ!


புத்தமதப் போர்வையில் பொறுக்கிபக்சே வருகிறான்
எத்தனவன் தமிழனுக்கு என்னதுயர் தருகிறான்
சித்தமெல்லாம் நஞ்சுகொண்ட சிங்களவன் வருவதா
பித்தர்களே வரவேற்பும் பேயனுக்குத் தருவதா


போர்குற்ற வாளியவன் புத்தமத வாதியா
யார்குற்ற வாளியிதில்? வடபுலத்து நீதியா
பார்தூற்றும் ஒருவனுக்கு பா.ஜ .க வும் வரவேற்பா
ஊர்தூற்றும்! உலகமே தூற்றுவதும்! ஏற்பா


குண்டுமழை பொழிந்தவனும் எம்மினத்தை அழித்தான்
கண்டுமதைக் காணாத நம்மாலே செழித்தான்
மண்டும்துயர் நீங்கவில்லை! மகேந்தன் வருவதிங்கே
உண்டுண்டு உறங்குவதா உணர்வுகளும் எங்கே?


உயிரொன்றே போயிற்று வீணாக இன்றே
வயிரின்றே எரிகிறது அணைவதுதான் என்றே
துயரொன்றே தமிழனுக்கு மாறாத சொத்தா
பயனின்றே! பாரதமே ஏகமெனப் பார்த்தா


ஒன்றுபட்ட தமிழகத்தைக் காணும்நிலை இல்லையே
நன்றிகெட்ட கயவர்களால் வந்ததிந்த தொல்லையே
வென்றுவிட்டேன் எனச்சொல்லி வீணனவன் வருவதோ
இன்றுவிட்டால் போதுமென ஓடும்நிலை  தருவோமா?

                             புலவர் சா இராமாநுசம்


                                                    

Monday, September 17, 2012

இனிய வலைப் பதிவு உறவுகளே! வணக்கம்!!


இனிய வலைப் பதிவு உறவுகளே!
                                                           வணக்கம்!
          கடந்த நான்கு தினங்களாக என் பதிவு எதுவும் வரவில்ல
                                                        காரணம், என்னிடம்
         கழுகு இணையதளக் குழுமத்தின் சார்பாக பேட்டி ஒன்று
         எடுக்க விரும்பி கேவிகளைத் தொகுத்து அனுப்பி இருந்தனர்
               
             நான் அதற்கான பதிலைத் தட்டச்சு செய்ய வேண்டி இருந்த
        தால் இயலவில்லை. அதன் விளைவாக சற்று முதுகு வலியும்
       இருப்பதால், மேலும் இரண்டுநாள் ஓய்வும் தேவைப்படுகிறது
 
                           முடிந்தவரை உங்கள் பதிவுகளை  படித்து  என்கருத்து
       களை எழுதுவேன்!  இன்று கழுகு வலைத்தளத்தில் என் பேட்டி
       வெளி வந்துள்ளது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

                    படித்து தங்கள் கருத்துகளை அங்கே பதியுமாறு அன்புடன்
         கேட்டுக் கொளகிறேன்

                                                                       புலவர் சா இராமாநுசம்

                           http://www.kazhuku.com/2012/09/blog-post_17.html

        

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...