Saturday, November 23, 2013

என் முகநூல் பதிவுகள்-ஆறு

மரங்களானவை வெட்டும் வரையிலும். தம்மை வெட்டுவாருக்கும் சேர்த்தே நிழல் தந்து காக்கும்! அதுபோல,
அறிவுடைய சான்றோர், தாம் சாகும்வரை பிறர் தமக்கு தீங்கு செய்தாலும் அவர்களுக்கும் , வாழும்வரை முடிந்த எல்லா வகையிலும் நன்மையே செய்வர்!

கல்லால் ஆன தூண் அதிக பாரமானால் உடைந்து விழுமே தவிர வளைந்து கொடுக்காது! அது போல சான்றோர்கள் மானக்கேடு வருமிடத்து தம் உயிரை விடுவாரே
தவிர யாருக்கும் (பகைவர்) பணிய மாட்டார்கள்!!

ஏற்றி வைத்த குத்து விளக்கு அறையை ஒளிமயமாக ஆக்கினாலும் , அக் குத்து விளக்கின் கீழே வட்டமாக நிழல் படர்ந்து சற்று இருள் பரவி இருப்பதை பார்க்கிறோம் அதுபோல சில மனிதர்களின் வாழ்வு வெளிப் பார்வைக்கு இன்ப மயமாகத் தெரிந்தாலும் உள்ளுக்குள் ஏதோ ஒருவகை
சோகம் இருக்கவே செய்யும்

இல்லத்தை ஆளுகின்ற மனைவி நற்குணம் மிக்கவளாக இருப்பின் ஒருவன் வாழ்க்கையில் இல்லாது எதுவுமில்லை! அவள் இறந்து போனாலோ அல்லது கடும் சொற்களும், தீய குணங்களும் உள்ளவளாகவோ இருப்பின் அவ்வீடு , புலி தங்கும் குகையாகவோ , புதராகவோ மாறிவிடும்

வாழ்கையிலே நாம் ஒருவருக்கு உதவி செய்யறோம்! அவங்க நமக்கு உதவி செய்யறாறங்க! அது கொடுத்து வாங்கற கைமாற்று மாதிரி! ஆனா நாம , பிறருக்கு , ஏதும் செய்யாத, செய்யமுடியாத நிலையில் , பிறர் நமக்கு உதவி செய்தால் அது செய்யாமல் செய்த உதவி ஆகும் அதற்கு ஈடாக எதையும் சொல்வது அரிது!

எந்த செயலை செய்வதாக இருந்தாலும் தொடங்கு முன் அதைப் பற்றித் தெளிவாக ஆய்வு செய்தே தொடங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தொடங்கிய பின் பாதியிலே அதனை ஆய்வு செய்வது இழிவைத்தான் தரும் பலன் விளையாது

                          புலவர்  சா  இராமாநுசம்

Friday, November 22, 2013

போய்வந்த அடிச்சுவடுக் காய வில்லை – பிடித்து போடுதுவோ மீனவனை ஓய வில்லை!

போய்வந்த  அடிச்சுவடுக்  காய வில்லை – பிடித்து
     போடுதுவோ  மீனவனை  ஓய வில்லை!
நாய்வந்து எச்சிலைக்கு  அலைதல் போல – வெறி
      நாயாக சிங்ளவன்  வழக்கம் போல!
பேய்வந்து பிடிப்பதாக  நேற்றும் வந்தான்- பலரை
     பிடித்துப்போய் சிறைதானே  வாங்கித்  தந்தான்!
வாய்நொந்து போகும்வரை எடுத்துச்  சொன்னோம்-ஆனால்
     வடநாடு கேட்டதா பலன்தான்  என்னாம்!

ஒட்டுமொத்த  தமிழ்நாடு  ஒன்றாய் இங்கே –எடுத்து
     உரைத்தாலும் புறந்தள்ளி சென்றாய் அங்கே!
கட்டிவைத்த பழஞ்சோறே ஊசிப் போச்சே –இந்திய
     கண்ணியமே காற்றினிலே  பறக்க லாச்சே!
எட்டியெனத் தமிழ்நாட்டை எண்ணி விட்டாய் –இனி
     எதிர்நாளில்  கைதன்னை கழுவ ! கெட்டாய்!
பட்டியிலே அடைபட்ட மாடா ! அல்ல – மக்கள்
     பாடம்தான் புகட்டார? நாளும் செல்ல!

                              புலவர்  சா  இராமாநுசம்


Wednesday, November 20, 2013

என் முகநூல் பதிவுகள்! -நான்கு

இளமைக் காலத்தில் வரும் வறுமை துன்பத்தைத் தரும்! .முதுமை காத்தில் வரும் வளமும் அனுபவிக்க முடியாது துன்பத்தைத் தரும் ! எது போல என்றால் ,சூடுதற்கு ஏற்ற காலமல்லாதக் காலத்தில் பூத்த மலரையும் ,அனுபவிக்க உரிய கணவன் இல்லாத மங்கையின் அழகையும் ஒக்கும்!

பாலைக் குடிக்க குழந்தை அழுகிறது ,என்றால் பாவமென விட்டு விடுவாளா தாய்! பசியொடுத்தாலும், குழந்தை அழத்தானே செய்யுமென்று அறியாதவளா அவள்!

மீன் குட்டிக்கு நீந்தக் கற்றுத்தர வேண்டுமா ? என்று கேட்கும் மனிதன், தன் மகன் நடக்க நடைவண்டி செய்துத் தருகிறானே! அது, ஏன்?

பாலைக் காச்சினாலும் சுவை குன்றுவதில்லை! சங்கு சுட்டாலும் வெண்மை மாறுவதில்லை!அதுபோல ,மேன்மக்கள் என்ன நேர்ந்தாலும் தம் , மேன்மை தவறமாட்டார் ! ஆனால் கீழ்க் குணமுள்ள கீழ்மக்கள் , நாம்
எவ்வளவு நட்பு பாராட்டினாலும் தம்,இயல்பில் மாறமாட்டார்


நஞ்சுக் கனிகளைக் கொண்ட மரம் ஒன்று ஊரின் நடுவே பழுத்திருந்தால்அதை அறியாத மக்களுக்கு மரணத்தையே கொடுக்கும் !அதுபோல ,கெடுமதியும் துரோக சிந்தனையும் கொண்ட தீயவன் ஒருவனிடம் உள்ள செல்வமானது, அவ்வூர் மக்களுக்குத் தீமையைத்தான் செய்யும்

ஊரின் நடுவிலே உள்ள குளத்தில் சுத்தமான குடிநீர் நிறைந்திருந்தால், அந்த ஊர்மக்கள் அனைவருக்கும் பயன்படும் ! அதுபோல, தரும சிந்தனையும் கொடைக் குணமும் உள்ள நல்லவன் ஒருவன் பெற்ற செல்வமானது
அனைவருக்கும் பயன்படும்


                                           புலவர்  சா  இராமாநுசம்


Monday, November 18, 2013

சல்மானே ! நீர்சென்று-அங்கே சாதித் தென்ன?

சல்மானே ! நீர்சென்று-அங்கே
   சாதித் தென்ன?
சொல்வீரா  தீதேதும் - இதனால்
   தொடராதா இனியேதும்
கல்மனமும்  கரையுமென -கண்டு
   கேமரூன் கண்ணீர்விட!
பல்முறையும்  சென்றீரே -நீர்
    பகர்ந்தீரா ! பார்த்தீரா !

ஆணையிட  முடியாதாம் -அவன்
   ஆணவமாய் பேசுகின்றான்!
பூணையென  போய்விட்டு, -சத்தமின்றி
   பொறுமைமிக!  வாய்விட்டு,
மானமின்றி! மன்னிப்பும் -அடிமையென
   மண்டியிட்டு கேட்பதா!?
யானைபல  மிந்தியா – பலன்
   என்னவென !  சிந்தியா?

தொப்புள்  கொடியுறவு –இங்கே
    துடிக்கிறது ! வெடிக்கிறது!
தப்புக்குத்  துணையாக –அன்று
    தாளமிட்ட  காரணத்தால்
ஒப்புக்கே ஆடுகின்றார் –நடந்த
    உண்மையிலே!  நாடகமே!
செப்பிக்க ஏதுமில்லை! – வாழ
    செந்தமிழா ஒன்றுபடு!

                                புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...