Saturday, August 31, 2013

கரம்கூப்பி அழைக்கின்றேன் வருக! வருக!

வந்துவிட்டார்  வந்துவிட்டார்  சிலபேர்  இங்கே
     வந்துகொண்டே  இருக்கின்றார்  பலபேர்  இங்கே
தந்துவிட்டார்  தந்துவிட்டார்  மகிழ்வே  தன்னை
     தலைநிமிர  வாழ்துகிறாள்  தமிழாம்  அன்னை
 
விடுதியிலே  தங்கிசிலர்  ஓய்வுப்  பெறவும்
     வேண்டியநல்  வசதிகளைச்   செய்து  தரவும்
கடமையென  உழைக்கின்ற  இளைஞர்  படையே
      கண்ணியமாய்  செய்கின்றார்   இல்லை  தடையே

வருவிருந்து  ஓம்புவது   தமிழர்  பண்பே
     வள்ளுவனார்  வகுத்திட்ட  உயர்ந்த  பண்பே
அருமருந்து  ஆற்றல்மிகு   இளைஞர்  படையே
    ஆற்றுகின்ற சேவைக்கு  இல்லை  தடையே

எண்ணில்லார்  நாளையிங்கே  வருவார்  என்றே
    எண்ணுகின்றோம்  எதிர்பார்த்து வருவீர்  நன்றே
கண்ணில்லார்  கண்பெற்ற  மகிழ்வே  பெறுவோம்
    கரம்கூப்பி அழைக்கின்றேன்  வருக!  வருக!


                         புலவர்  சா இராமாநுசம்

Friday, August 30, 2013

திருநாள் நமக்கு இதுவன்றோ நீர் திரளாய் வந்தால் அதுவன்றோ


ஒருநாள்  இடையில்  மட்டுமே!-நம்
   உள்ளத்தில்  உவகை  கொட்டுமே
திருநாள்  நமக்கு  இதுவன்றோநீர்
   திரளாய்  வந்தால் அதுவன்றோ

ஆண்டுகள் தோறும் இனிமேலே-நடக்க
    அழகாய்  இனிக்க  கனிபோல
வேண்டிய  அனைத்தும் உய்வோமே நல்
    விளக்கமாய்  திட்டம்  செய்வோமே

அணையா  விளக்காம்  வலைதாமேஎன்றும்
     அழியாத்  ஒன்றதன்  நிலைதாமே
இணையம்  தானே  நம்மூச்சேபேதம்
    இல்லை    இல்லை  மறுபேச்ச

வாரீர்  வாரீர்  வலையோரே!-திரண்டு
    வந்தால்  உமக்கு  நிகர்யாரே!
பாரீர்! பாரீர்   உலகோரே!-எங்கள்
    பதிவர்கள்  கூட்டத்தைக்   காணீரே!
                       புலவர் சா இராமாநுசம்

Thursday, August 29, 2013

துண்டுச் செய்திகளும் உம் வரவைத் தூண்டும் செய்திகளும்


அன்பின்  இனிய   உறவுகளே!
                                        வணக்கம் !கணக்கில!

பதிவர் சந்திப்புக்கான  கவல்  துறையின்     ஒப்புதலும்  பெற்று  விட்டோம்
நண்பர்,மதுமதி  அரசன் , செயக்குமார் ஆகிய  நாங்கள்  நால்வரும் சென்றிருந்தோம் .சென்ற  ஆண்டைப்  போலவே  இந்த ஆண்டும் முதலில்  ஏனோ, தானோ என்று  நம் கடிதத்தை வாங்கிய  காவல்  துறை அதிகாரிகள்  தமிழ்ப்  புலவர்களும்  கவிஞர்களும் எழுத்தாளர்களும்  நடத்தும்  விழா என்று அறிந்ததும்  காட்டிய அன்பும்  மரியாதையும் , கனிவும்  கண்டு  உவந்து போனோம்
                  இது, நம் அன்னைத்  தமிழுக்குக் கிடைத்த  மரியாதை  என்பதை   உணர்ந்து  மிகவும்    பெருமைப்  பட்டோம்
                     வாழ்க ! தமிழகக்  காவல்  துறை!  வளர்க ! அவர்கள்  தமிழ்மொழிப்
                                                                       பற்று!

                                                                    நன்றி!
உறவுகளே!!
                வலைவழி  விழா  பற்றிய அனைத்துச்  செய்திகளும்   விரிவாக  அறிந்திருப்பீர்கள்!
                பல  பதிவர்களும்  தங்கள்  எழுத்துத்  திறமையால்  உங்கள் வரவை விரும்பியும் , வேண்டியும்  எழுதியுள்ள  பதிவுகள்  பாராட்டத் தக்கன!

வழங்கப் படும்  உணவு  வகைகளின்  பட்டில் தரப்பட்டுள்ளன!                       உங்கள்  தேவை , சைவமா, அசைவமா  என்பதை  முன் கூட்டியே பதிவு செய்தல் அவசியம்!
                          அவ்வாறு  செய்தால்  உரிய ஏற்பாடு  செய்ய  இயலும்

நானும்   எனது  பங்காக  , உங்கள்  அனைவரைம்  தவறாமல் வருமாறு சிரம் தாழ்த்தி கரம் கூப்பி  வேண்டுகிறேன்
               வருக!   வருக! விழாவினைச் சிறப்புற நடத்தித்  தருக!  தருக!
                                                      நன்றி!
                                                                            புலவர்  சா இராமாநுசம்

Tuesday, August 27, 2013

கண்ணில் காணும் இடமெல்லாம்-பலரும் காண நீரும் வருவீரா ! !?
இடையில்  உள்ளது  சிலநாளே-நம்
   எதிர்வரும்  பதிவர்  திருநாளே
தடையில்  உம்முடை வரவொன்றே-மேலும்
   தந்திடும்  பெருமை  மிகநன்றே
படையென  அணிதரும்  தம்பிகளே-ஆற்றும்
   பணியில்  தங்க , கம்பிகளே
நடைபெறும்  அன்றே காண்பீரேமனம்
    நலமுற  இன்பம்  பூண்பீரே

கொட்டிய  நெல்லி  மூட்டையென-நாட்டில்
   குவிந்து, சிதறியோர்  கோட்டையென
கட்டிய  மாலையாய்  வருவீரே-நம்
   கடமை  வரவென  தருவீரே
எட்டியா? கசக்க ! கரும்பன்றே உறவு
   இணையத்தில்  காச்சிய  இரும்பன்றோ
ஒட்டிய  அன்பே  உள்ளத்தில்உணர்வு
   ஒன்றெனும்  உணர்ச்சி  வெள்ளத்தில்

மண்ணில்  மனித  நேயந்தான்ஏதும்
    மாசில்  ஒன்றென ஆய்ந்தேதான்
பண்ணில் உரையில் வலையோரேநாளும்
    பாடி , எழுதி  வாழ்வோரே
எண்ணில்  பதிவர்  கூட்டமெனநம்
   எழுத்தில்  கண்ணியம்  நாட்டமென
 கண்ணில் காணும்  இடமெல்லாம்-பலரும்
    காண  நீரும்  வருவீரா ! !?

                       புலவர்  சா  இராமாநுசம்

Monday, August 26, 2013

அன்பின் இனிய உறவுகளே! நன்றியும் அறிவிப்பும்

அன்பின் இனிய உறவுகளே! வணக்கம் ! உங்கள் அன்புகலந்த வாழ்த்தோடு வெளிநாடு சுற்றுப் பயணம் மேற் கொண்ட நான்,நலமுற இல்லம் வந்து சேர்ந்தேன் என்பதை முதற்கண் நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறேன் பதிவர் சந்திப்பு முடிந்தபின்,என் வலைவழி ஐரோப்பிய நாடுகளில் நான் கண்ட காட்சிகளையும் எடுத்துக் கொண்ட புகைப் படங்களையும் முறையாக வெளியிடுவேன் என்பதையும் பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் பலரும் அது பற்றி தொலை வாயிலாகவும் , மின்னஞ்சல் வழியும் கேட்பதால், நான் இதனைக் குறிப்பிட வேண்டியதாயிற்று மீண்டும், நாளை முதல் வழக்கம் போல் வலைவழி நம் சந்திப்பு தொடரும் நன்றி! புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...