Friday, February 8, 2013

கொலைகாரா உன்னுடலை உண்ணா பேயும் !ஏடெடுத்தேன் கவிஎழுத நெஞ்சில் வந்தே-அந்த
ஈழத்து கொடுமையது துயரம் தந்தே
பாடெடுத்த பாடுயென இங்கே அதனை-நான்
படைத்திட்டேன படியுங்கள நீரும் இதனை
ஓடெடுத்து தெருத்தெருவாய் பிச்சை கேட்டே-பக்சே
ஓடிவர கண்டுமனம் மகிழ்ந்து பாட்டே
தேடிவரும் தீந்தமிழில் எடுத்துச் சொல்ல-வெற்றி
தேடிவரும் தனிஈழம் காண்போம் வெல்ல

பால்மணமே மாறாத குழந்தை கூட-பக்சே
பாவியவன் படையாலே சாவை நாட
காலிழந்தார் கரமிழந்தார் கண்ணும் இழந்தார்-மேலும்
கணக்கற்றோர் மடிந்தீழ மண்ணில வீழ்ந்தார்
தாலிதனை இழந்திட்ட தாய்மார் சாபம்-துயர்
தணியாத ஈழத்து மறவர் கோபம்
கூலியென கொடுத்திடுமே அழிவாய் நீயும்-பெரும்
கொலைகாரா உன்னுடலை உண்ணா பேயும்

இளம்பெண்கள் கற்பிழந்தார் உனதுப் படையால்-ஈவு
இரக்கமெனும் குணமில்லா அரக்க நடையால்
வளமிக்க வன்னிகா டழிந்தே போக-நீ
வான்வழியே குண்டுமழை பெய்து ஏக
களமறவர் எம்தமிழர் விடுதலைப் புலிகள்-அந்தோ
கண்மூடி பலியாக சிங்கள எலிகள்
உளமகிழ கூத்தாடும் நிலையும் கண்டோம்-கண்ணீர்
உதிரமென உதிர்கின்ற நிலையே கொண்டோம்

இனிஒன்றாய் வாழ்வதற்கே இயலா தென்றே-அவர்
எண்ணித்தான் முடிவாக எதிர்த்து அன்றே
தனிநாடாய் ஈழத்தை பிரியு மென்றார்-ஆனால்
தரமறுக்க ஆயுதத்தை ஏந்தச் சென்றார்
நனிநாடும் உலகத்தில் உரிமைப் போரே-எங்கும்
நடத்தாமல் பெற்றாரா சொல்லும் யாரே
கனியிருக்க காயுண்ணும் மடையர் இல்லை-ஈழம்
காணாமல் இனியுறக்கம் இல்லை இல்லை


(நன்றி முத்துக்கமலம்)

                    புலவர் சா இராமாநுசம்

Wednesday, February 6, 2013

வருகின்றான் வருகின்றான் கொலைகாரப் பாவி !
வருகின்றான்   வருகின்றான்  கொலைகாரப்  பாவி அவனை
      வரவேற்பு  செய்வதா  மலர்தன்னைத்  தூவி
தருகின்றான்  மீனவர்க்கு  நாள்தோறும்  தொல்லை இதை
      தடுத்திட  இயலாதார்  தமிழனே  இல்லை
தெருதன்னில்  திரிகின்ற  நாயுக்கும்  உண்டே  -பொல்லாத்
      தீயோரைக்  கண்டாலே  குரைத்திடும்   கண்டே
திருவன்ன  திருப்பதி  வேங்கட  நீயே அவன்
       திரும்பியே  சென்றிடச் செய்திடு  வாயே

இரக்கமே  இல்லாதும்  எம்மவர்  தம்மை அன்று
       இரத்தமே  ஆறாக   ஓடியே  செம்மை
நிறத்தையே  ஈழமே  பெற்றிடக்  கொன்றான் நஞ்சு
       நிரம்பிய  குண்டினைப்  போட்டுமே  வென்றான்
அரக்கனே!  அவன்தான்!  மனிதனே  இல்லை செய்த
       அழிவுக்கு  இனியேனும்  வாரதோ  எல்லை
மறக்கவோ  இயலாத  மாபாவி  அவனே யாரும்
       மன்னிக்க  இயலாத  கொடும்பாவி இவனே!

மத்திய  அரசிதை   மதித்திட  வேண்டும்  -தமிழ்
       மக்களின்  உணர்வினை மிதிப்பதா  மீண்டும்
கத்தியின் மேலிது நடப்பதே  ஆகும்  -கண்டும்
      காணாது  இருப்பதால்  நிலைமீறிப்  போகும்
சுத்தியால்  உடைப்பதா  கண்ணாடி  தன்னை உடைந்து
        சுக்கலாய்  ஆகாதோ   அறிவீரா !?  உண்மை!
சத்திய  சோதனை  செய்திட  வேண்டாம்  -ஏழரைச்
       சனியவன்  பக்சேவை  விரட்டுவீர்  ஈண்டாம்!

                                                                புலவர்  சா இராமாநுசம்

Tuesday, February 5, 2013

செய்தி அறிவிப்பு !           அன்பின்  இனிய   உறவுகளே!
                                                                            வணக்கம்!

                                 கடந்த  ஒரு  வாரகாலமாக நான்  புதிய பதிவு  ஏதும்  எழுத
            இயலாமலும்   மறுமொழி  இடவும் வழியில்லாமல் போய்விட்டது.
                                  எங்கள்  தெருவில்  மழைநீர்  வடிகால்  பாதை  அமைக்கும
             பணி  நடபெறுவதால்,   மண்ணைத்  தோண்ட  இயந்திரங்களைப்
             பயன் படுத்துவதன்  காரணத்தால் , தொலைபேசியும் கணனி  தொடர்பும்
              முற்றிலும்  பழுது பட்டுவிட்டது  


                                        பற்றாக் குறைக்கு  மின் தடை வேறு  இதுதான்
                காரணமாகும்.   இதுபற்றி  அன்போடு , தொலைபேசி , மின்னஞ்சல்
              வழியாகக் கேட்ட  அன்பு, வலை, முகநூல், உறவுகளுக்கு  மிக்க  நன்றி
                                             
                                            இனி வழக்கம்  போல்  முடிந்த வரை எழுதுவேன்!


                                                                                 புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...