Friday, October 5, 2012

வேங்கட உன்னடி தொழுகின்றேன்!


  குறிப்பு- புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை!
                      பாமாலை!

    ஆதவன் எழுவான் அதிகாலை
      ஆயர் பாடியில்  அதுவேளை
    மாதவன்  குழலை  ஊதிடுவான்!
      மாடுகள்  அனைத்தும்   கூடிடவே
    ஒன்றாய்   கூடிய   ஆவினங்கள்
      ஊதிய  குழலின்  இசைகேட்டு
    நன்றாய்  மயங்கி  நின்றனவே
      நடந்து மெதுவாய் சென்றனவே!
 
   ஆயர்  பாடியில் மங்கையரும்
     ஆடவர்  பிள்ளைகள் அனைவருமே!
   மாயவன் இசையில் மயங்கினரே
     மகிழ்வுடன் பணியில் இயங்கினரே !
   சேயவன்   செய்த  குறும்புகளே
     செப்பிட இனிக்கும் கரும்புகளே!
   தூயவன்  திருமலை வேங்கடவா
     திருவடி தலைமேல்  தாங்கிடவா !

   ஆயிரம் ஆயிரம்  பக்தர்தினம் 
      ஆடிப் பாடி வருகின்றார்!
   பாயிரம்  பலபல பாடுகின்றார்
      பரமா நின்னருள்  தேடுகின்றார்!
   கோயிலைச்  சுற்றி  வருகின்றார்
     கோபுர தரிசனம் பெறுகின்றார்!
   வாயிலில் உள்ளே நுழைகின்றார்
     வரிசையில் நின்றிட விழைகின்றார்!
 
    எண்ணில் மக்கள் நாள்தோறும்
     ஏழாம் மலைகள் படியேறும்
   கண்ணுக் கெட்டிய தூரம்வரை
     கண்ணன் புகழே போற்றுமுரை
   பண்ணொடு இசைத்தே உய்கின்றார்
     பஜகோ விந்தமே செய்கின்றார்!
   விண்ணொடு மண்ணை அளந்தவனே
      வேங்கட உன்னடி தொழுகின்றேன்
        
              புலவர் சா இராமாநுசம்

Thursday, October 4, 2012

ஏன் சிரித்தார் பிள்ளையார் ! ! ! ? ? ?

ஊருக்கு ஒருபுறத்தில் ஒற்றை ஆலமரம்
வேருக்குத் துணையாக விழுதுபல தொங்கிடவும்
பேருக்குக் கடவுளென பிள்ளையார் அமர்ந்திருக்க
யாருக்கும் அவர்மீது ஏனோ பாசமில்லை

ஏழைக் கடவுளவர் எண்ணையில்லை விளக்குமில்லை
பேழை வைத்துப்பணம் போடுபவர் ஒருவரில்லை
வாழை இலையில்லை வைக்கவில்லை வடைஎதுவும்
கோழை ஏழையென குடியிருந்தார் அவர்பாவம்

பிள்ளையார் பிறந்தநாள் ஊர்நடுவே பந்தலிட்டு
உள்ளமிக பக்தியொடு உருவான பிள்ளையாரின்
வெள்ளைநிற உருவத்தை வீதியெல்லாம் வலம்விட்டு
மெள்ளவரும் ஊர்வலமே மேளதாளம் சத்தமிட

மரத்தடி பிள்ளையாரோ மௌனமாய் பார்த்திருக்க
சிரத்தையெடு ஊர்வலமும் சென்றதுவே குளம்நோக்கி
கரமெடுத்து வணங்கிவிட்டே கரைத்தார்கள் நீரதிலே
வரசக்தி  மரத்தடியார் வாய்விட்டு  சிரித்தாரே!

                            புலவர் சா இராமாநுசம்

Tuesday, October 2, 2012

அண்ணலே காந்தி நீங்கள்-மீண்டும் அவனியில் பிறக்க வேண்டும்!
அண்ணலே காந்தி நீங்கள்-மீண்டும்
  அவனியில் பிறக்க வேண்டும்!
கண்ணியம் இல்லாக் கையர்-ஊழல்
  கறையது மிகுந்த பொய்யர்!
எண்ணிலார் மிகுந்து விட்டார்-இங்கே
  ஏழைகள் துயரப்  பட்டார்!
புண்ணிய வந்தே பாரீர்-மக்கள்
  புலம்பலை நீக்க வாரீர்!

உத்தம காந்தி நீங்கள் மீண்டும்
  உதித்திட வேண்டும் வேண்டும்!
எத்தர்கள் செயலால் இங்கே என்றும்
  ஏழ்மைக்கும் விடுதலை எங்கே?
சித்தமே கேட்கும் கேள்வி அன்று
  செய்தீரே தியாக வேள்வி!
புத்தரே காந்தி நீவீர்-உடன்
  பூமியில் பிறந்து காவீர்!

தன்னலம் இல்லாத் தொண்டே நீர்
  தந்ததை  மக்கள் கண்டே!
பொன்னென மக்கள் போற்றி அறப்
  போரினை உம்மொடு ஆற்றி,
கண்ணெணப் பெற்ற விடுதலை இன்றே
   கயவரால் உற்ற கெடுதலை
எண்ணியே நீக்க வாரீர் !மக்கள்
  இன்னலைப் போக்க வாரீர்!

               புலவர் சா இராமாநுசம்

Monday, October 1, 2012

அன்புதரும் பண்பாளர் முனைவர் சனா பல்லாண்டு வாழ்க!

   
     முன்னாள் மேலவை உறுப்பினர் முனைவர்  இரா சனார்தனம்
அவர்களின் எழுபத்து, ஐந்தாண்டு  பிறந்த நாள் வாழ்த்துப்பா!
இவர்  தமிழகத்  தமிழாசிரியர் கழகத்திற்கு ஆற்றியுள்ள தொண்டு
என்றும்  போற்றத் தக்கது! அரசியலே வாழ்வாகக் கொண்ட இவர்
கறைபடா  கரத்திற்கு சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது!அன்புதரும் பண்பாளர் முனைவர் சனா-அவர்
   அரசியலே வாழ்வாக கொண்டார் ஆனா
என்பும்தரும் பெருந்தன்மை குணமே பெற்றார்-வாழ்வில்
   எள்ளவும் ஊழலிலா தூய்மை உற்றாரf
துன்புவரும் போதுமவர் துவள  மாட்டார்-எண்ணித்
    தொடங்கியதை முடிக்காமல் ஓய்வே காட்டார்
இன்புதரும் எழுச்சிதரும் எண்ணும் தோறும்-என்
    இதயத்தில் அவராற்றல் பண்ணாய் ஊறும்

தனக்கென்றே தனிகுணமே அவர்பால் உண்டே-நம்
    தமிழுக்கும் தமிழருக்கும் செய்வார் தொண்டே
தனக்கென்றும் சொந்தமென  இல்லம் இல்லார்-நாளும்
   தன்மானம் மிக்கவராய் வாழும் நல்லார்
குணக்குன்றே அவராகும் சொல்லப் போனால்-கொண்ட
    கொள்கையிலே அணுவளவும் மாறார்! ஆனால்
மணக்கின்ற மல்லிகையின் மென்மை உள்ளம்-அவர்
    மனமறிய ஒருநாளும் அறியார் கள்ளம்

வாழத்தான் அரசியலாம் என்றே சொல்லி-இன்று
   வாழ்வாரை கண்டவரும் அன்றே எள்ளி
ஈழத்தார் வாழ்கயென கொறடாப் பதவி-தூக்கி
    எறிந்துவிட்டு பல்வகையில் செய்தார் உதவி
சூழத்தான் வேண்டுமா அவரின் பணியே-மேலும்
    சொல்வதென்ன மாசற்ற தங்க அணியே
எழுபத்து ஐந்தாண்டு பிறந்த  தின்றே-அவர்
    என்றென்றும் வாழ்கயென வாழ்த்த நன்றே

                      புலவர் சா இராமாநுசம்
  

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...