Saturday, December 10, 2011

பதிவர்களே! நமக்கொருப் பாதுகாப்பு வேண்டாமா...?  பதிவர்களே! நமக்கொருப் பாதுகாப்பு வேண்டாமா...?

          அன்பின் இனிய தோழமை மிக்க பதிவர்களே!
வணக்கம்!
          விண்ணில் ஒளிவிடும் நட்சத்திரங்கள் போல
வலைவானில் ஒளிவிடும் நம் வலைகளுக்கு விரைவில்
அரசின் கட்டுப்பாடு வருகின்ற சூழ்நிலை உருவாகி வருகிறது
        அது எப்படி வேண்டுமானாலும் வரலாம். இதுவரை
சுதந்திரமாக எழுதிவந்த, நம் கருத்துகளை அடக்கவும் ஒடுக்கவும்
முற்படலாம். அதனால்  சிலர் இன்னலுக்கு ஆளாகலாம் அவற்றை
எதிர்கொள்ள நமக்குள் ஒற்றுமை வேண்டும்.
 
    இதற்கென ஓர் அமைப்பை,இயக்கத்தை உருவாக்கி
சட்ட திட்டங்களை அமைத்து சங்கப்பதிவுப் அலுவலகத்தில்
பதிவு செய்யவேண்டும்
        தங்கம் செய்யாததைக் கூட சங்கம் செய்யும்
என்று சொல்வார்கள்
       நீண்ட காலம் தொழிச்சங்க வாதியாகவும்
தலைவனாகவும்  நான் பணியாற்றி உள்ளதால்
இவ்வாறு, அமைப்பு இருக்குமானால் நம் உரிமைகளை
எப்படி பாதுகாக்க முடியும் என்பதை அறிவேன்
 
       உலகத் தமிழ் வலைப் பதிவாளர்கள் சங்கம்
         -----------------------------------------------------------------------------
 என்றோ அல்லது வேறு,( அனைவரின் கருத்துக்கு ஏற்ப)
  பெயரிலோ செயல்படலாம்
  
          முதற்கண், இக்கருத்தை ஏற்றுச் செயல்படலாம்,
அமைப்பை உருவாக்கலாம் என்று கருதுகின்றவர்கள்  இப் பதிவின்
கீழ் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்
         நிறைவாக நீங்கள் ஆதரவு தெரிவித்தால் எப்படி
அமைக்கலாம் என்பதை விரிவாக ஆராயலாம்
        முதலில், அமைப்பு  வேண்டுமா வேண்டாம
 என்பதைத் தெளிவுப் படுத்துங்கள்
            
                           பிற பின்னர்
                            
                                     அன்பன்
                       புலவர் சா இராமாநுசம்
        

       

Friday, December 9, 2011

விலையைக் குறைப்பீர் ஆள்வோரேஅள்ளும் நெஞ்சைச் சிலம்பென்றே-அன்று
   அறைந்தார் பாரதி மிகநன்றே
வள்ளுவன் தன்னை உலகிற்கே-வாரி
   வழங்கிய வான்புழ் தமிழ்நாடாம்
தெள்ளிய தேனாய்க் கனிச்சாராய்-நன்கு
   தேர்ந்துத் தெளித்தப் பன்னீராய்
உள்ளியே எடுத்துச் சொன்னாரே-முற்றும்
   உணர்ந்த ஞானி அன்னாரே

ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று
   ஆனார் இளங்கோ அடிகளென
காட்சியை எண்ணிப் பார்பீரே-மாறிக்
   கட்சிக்கு கட்சிப் போவீரே
மாட்சியா சற்று நில்லுங்கள் உங்கள்
   மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்
சாட்சியா வேண்டும் மேன்மேலும்-நாளும்
   சண்டைகள் தேவையா இனிமேலும்

சேவை செய்ய என்கின்றீர்-பதவியில்
   சென்றதும் என்ன செய்கின்றீர்
தேவை உமக்கெதோ தேடுகின்றீர்-ஆனால்
   தேர்தல் வந்தால் ஒடுகின்றீர்
சாவைத் தடுத்திட ஆகாதாம்-என்றும்
   சாதிச் சமயம் போகாதாம்
பாவைக் கூத்தே நாள்தோறும்-நடக்க
   பாவம் மக்கள் ஊர்தோறும்

நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து
   நாளும் மக்கள் அதைப்பேசி
நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
   நீங்கா வேதனை மனதூன்றி
பஞ்சென அடிபட வாழ்கின்றார்-கடும்
   பற்றாக் குறையில் வீழ்கின்றார்
வெஞ்சினம் அவர்பெறின் என்னாகும்?-உடன்
   விலையைக் குறைப்பீர் ஆள்வோரே!

                              புலவர்  சா இராமாநுசம்

Thursday, December 8, 2011

நானா நீயா பாரென்றே நானா நீயா பாரென்றே
     நடத்திய மத்திய அரசின்றே
 வீணாய் தம்முள் தாம்சாடி
     விரையம் ஆகிடப் பலகோடி
 காணோம் ஏதும் பலனொன்றே
     கடமை கண்ணியம் நிலையின்றே
 ஏனாம் இந்த இழிநிலையே
     எண்ணிப் பார்க்கவும் வழியிலையே

புற்று நோயாம் ஊழலிங்கே
      போனது என்றால் ஒழிவதெங்கே
 உற்றுப் பார்த்தால் மனிதரிலே
      ஊழல் செய்யாப் புனிதரிலே
 மற்றவர் செய்தால் ஊழலெனல்
      மறைப்பார் ஊழல் தம்மதெனில்
 கற்றவர் அறிந்தே செய்கின்றார்
      கல்லார் அறியாது செய்கின்றார்

முடங்கிப் போனதே அவையிரண்டும்
     முறையா சரியா படை திரண்டும்
 அடங்கிப் போனதே பலனென்ன
     அழிந்ததுப் பணமே கோடியன்ன
 திடமொடு ஆய்து முடிப்பீரோ
     திரும்பவும் அமளிக்கு விடுப்பீரோ
 நடந்தது நடந்ததாய் போகட்டும்
     நல்லது எதுவோ ஆகட்டும்

அனைத்து மக்களும் வெறுப்பானார்
   அமளிக்கி அனைவரும் பொறுப்பானார்
நினைத்துப் பார்க்கவும் கூசிடுமே
   நிம்மதி கெட்டே ஏசிடுமே
தினைத் துணையளவில் எளிதாக
   தீர்த்திட முயலல் வழியாக
பனைத் துணையளவு பெரிதாக
   பரவ வளர்த்து தவறன்றோ?
 
        புலவர் சா இராமாநுசம்
         

Tuesday, December 6, 2011

வலையுலக அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வேண்டுகோள்!   இனிய அன்பு நெஞ்சங்களே!
                  முதற்கண், உங்கள் அனைவருக்கும் என் பணிவான
வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
            இதுவரை என் வலைவழி நான் எழுதியுள்ள கவிதைகளை
நூலாக வெளியிட முடிவு செய்து, உரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன்
            விரைவில் வெளிவர இருக்கிறது தேதி முடிவானதும்
அறிவிக்கப்படும்!
         மேலும் வெளிவர இருக்கின்ற நூலில் சிலப் பக்கங்களை
ஒதிக்கி என் கவிதைகளைப் பற்றிய உங்கள் சிறப்பான கருத்துக்களை
யும் வெளியிட விரும்புகிறேன்.
         எனவே, இனிய நெஞ்சங்களே, இப்பதிவின் கீழே தங்கள்
கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டுகிறேன்
        கருத்துக்கள் பொதுவானதாக,இரண்டு மூன்று வரிகளில்
அமையுமாறு இருத்தல் நலமென்று மிகப் பணிவன்போடுத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
       அதில் தங்கள் வலைப்பெயர் உள்நாடுஎனில் ஊரும்
 வெளிநாடு எனில்,நாட்டின் பெயரும் குறிப்பிட வேண்டுகிறேன்
அதை அப்படியே படி எடுத்து வெளியிடுவேன்
                
                      நன்றி!
                                   அன்புடன்
                             புலவர் சா இராமாநுசம்
                   
      
            

Monday, December 5, 2011

பார்க்கவில்லை நீயென்றால் படுவதெல்லாம் துன்பம்


தலைவாரிப் பூச்சூடி தண்நிலவே முன்னால்
  தடுமாற என்னுள்ளம் தவித்திடுமே உன்னால்
அலைமோதும் கரைபோல அணுவணுவாய் நெஞ்சம்
  அழிகின்ற நிலைதன்னைக் காணாயோ கொஞ்சம்
இலைமீதே தத்தளிக்கும் நீர்த் துளியேபோல
  என்னுயிரும் தள்ளாடி நீங்குமெனில் சால
நிலைமீறிப் போவதற்குள் நின்றென்னைப் பாராய்
  நீங்காத வேதனையை நீமாற்ற வாராய்!

துள்ளுகின்ற காரணத்தால் கரையடைத்த மீனோ
  துள்ளியுந்தன் இருவிழியில் புகலடைந்த தேனோ
தெள்ளுகின்றத் தீந்தமிழே தேவையில்லை வீணே
  தேன்மொழியே தக்கதல்ல தவிர்திடுவாய் நாணே
எள்ளுகின்ற நிலையெனக்கு நீதருதல் நன்றோ
  என்னிடத்து உன்கருத்தை அறிவதுதான் என்றோ
உள்ளமதைக் காட்டயெனில் ஓரவிழி போதா
  உரைத்திடுவாய் கனியிதழைத் திறப்பதென்ன தீதா

இடைகாட்டி மின்னலதைப் போட்டியிலே வென்றே
  இருவென்று சொன்னாயோ விண்ணினிலேச் சென்றே
படைகூட்டிப் போர்த்தொடுக்கப் பழிதனிலே நின்றே
  பளிச்சிட்ட மின்னலதோ பதுங்குவதேன் இன்றே
நடைகாட்டிப் பெருமையுற அன்னமெனும் புள்ளும்
  நாடியுனை அடைந்திட்டால் நாணமிகக் கொள்ளும்
கடைகூட்டிக் கருமணியால் காணிலது போதும்
  கற்பனையில் நாளெல்லாம் இன்பம்அலை மோதும்!

குளக்கரையில் உனைநினைத்து நானிருக்கும் நேரம்
   குடம்தாங்கும் இடைதுவள நீநடப்பாய் ஓரம்
உளக்கரையோ அணுவணுவாய் தானிடிந்துச் சாயும்
   உணர்வற்றே நானிருக்க ஒளிமங்கி ஓயும்
அளக்கரிய என்அன்பை  அறிவதுதான் என்றோ
   அரிவையுந்தன் ஆசைகளை மறைப்பதுவும் நன்றோ
விளக்கெரிய எண்ணையின்றேல் திரியெரிந்துப் போகும்
   விளங்வில்லை உனக்கென்றால் விதிமுடிவே ஆகும்

தேய்வதென்ன வளர்வதென்ன தெரிவதென்ன விண்ணில்
   தெரிவையுந்தன் முகத்தினிக்கே ஒப்பெனவே எண்ணில்
ஓய்வதென்னத் திங்களுக்கு ஒருமுறைதான் மண்ணில்
   ஒளிதன்னைப் பாச்சுகின்ற அம்புலிதான்  கண்ணில்
ஆய்வதென்ன அறைவதென்ன ஒப்பிலையாம் என்றே
   அழிவதுமே வளர்வதுமே ஆனநிலை இன்றே
பாய்வதென்ன உன்வரவால் என்னுளத்தில் இன்பம்
   பார்க்கவில்லை நீயென்றால் படுவதெல்லாம் துன்பம்
         
                        புலவர் சா இராமாநுசம்
  
         கல்லூரியில் படித்த போது எழுதியது
        
  

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...