Saturday, September 3, 2011

விடியலுக்கான நாட்கள்


விடியலுக்கான நாட்கள் எப்போது-ஈழம்
விடுதலைப் பெறுவதும் எப்போது
கொடியவன் பக்சே தற்போது-ஆள
குமுறியே ஈழம் எழும்போது
வடியும் கண்ணீர் பேரலையாய்-பொங்கி
வந்திடமறவர் அலையலையாய்
முடியும் ஆட்சி அப்போதே-நாம்
முயல்வோம் முயல்வோம் இப்போதே

வெள்ளி முளைத்தால் விடிவதுண்டே-விடி
வெள்ளியாம் காந்தியின் வழிகொண்டே
கொள்ளி வாயுள பேயவனை-எதிர்க்
கொண்டே அழிப்போம் கொடியவனை
தள்ளிப் போகலாம் அக்காலம்-ஆனால்
தடுக்க இயலா முக்காலும்
முள்ளி வாய்க்கால் முடிவல்ல -மேலும்
முயலும் முயலும் நாம்வெல்ல

முடிவாய் வெற்றி நாம்பெறுவோம்-அகிம்சை
முறையில் நாளும் போரிடுவோம்
விடியும் நாளும் வந்திடுமே-பெரும்
வெற்றியை நமக்குத் தந்திடுமே
கொடியார் சிங்களர் கொடுங்கோலும்-அவர்
கொடுமைகள் முடிய அடிகோலும்
வெடியா அன்னவர் வெடிகுண்டே-உலகு
வெகுளும் வெடித்தால் அதுகண்டே

புலவர் சா இராமாநுசம்

Thursday, September 1, 2011

தண்டனை இரத்தா செய்துள்ளார்

தள்ளியே  நாட்களை வைத்துள்ளார்-தூக்குத்
    தண்டனை இரத்தா செய்துள்ளார்
உள்ளுவீர் தமிழரே ஓயாதீர்- இன
    உணர்வில் அணுவும் தேயாதீர்
கொள்ளியை வைத்தவர் அவரென்றே-மேலும்
    கொடுமை செய்வது தவரென்றே
எள்ளியே உலகம் நகைக்கட்டும்-செய்ய
    ஏதும் வழியின்றி திகைக்கட்டும்

மக்கள் எழுச்சி கண்டாரே-இன்று
     மாநிலம் மாற்றிக் கொண்டாரே
இக்கணம் முதலாய் மேன்மேலும்-ஏதும்
     இடையின்றி ஒவ்வொரு நாள்போலும்
திக்கது எட்டும் பரவட்டும்-இனத்
      தீயெனும் உணர்வே விரவட்டும்
தக்கது அறவழி போராட்டம்-உயிர்
     தருவது அல்லென கூறட்டும்

எட்டு  வாரம் எதற்காக-ஆட்சி
    இணங்கி வருமா இதற்காக
குட்டுப் பட்டதை மறப்போமா-மேலும்
   குட்டுப்  படுதல் சிறப்பாமா
ஒட்டும் உறவும் வேண்டாமே-இன
    உணர்வது ஒன்றாம் ஈண்டாமே
கொட்டும் முரசே ஒலிக்கட்டும்-வெற்றி
    கொண்டதை சங்கே முழங்கட்டும்

முடங்கிட அனைத்து வேலைகளும்-நகரின்
    முக்கிய  அனைத்து சாலைகளும்
தொடங்கிட ஊர்வல ஆர்பாட்டம்-நாளும்
    தொடர்கதை ஆகிட போராட்டம்
திடங்கொள செய்வீர் மறவர்களே-நன்கு
    திட்டமே வகுப்பீர் உறவுகளே
அடமிகு  அரசும் இறங்கிவரும்-போர்
     அறவழி செய்யின் நன்மைதரும்

Wednesday, August 31, 2011

தேசப் புகழைப் பாடுங்கள்

மீள் பதிவு-
             முத்துக்குமாருக்குப் பின் உயிர்த் தியாகம்
                செய்த கிருட்டினமூர்தியை
              நாம் நினைவு கூர  அது போது எழுதிய
               கவிதையே இது

      முத்துக் குமாரை பின்பற்றி-கிருட்டின
            மூர்த்தியும் பெட்ரோல் தனைஊற்றி
      வைத்துக் கொண்டார் தீயென்றே-இங்கே
            வந்தசெய்தி பொய் யென்றே
      செத்துப் போனது எதற்காக-என
            செய்கிறார் வாதம் அதற்காக
      எத்தனை கொடுமை தமிழ்நாடே-இனி
            எரிக்க வேண்டாம் சுடுகாடே
    
     ஒற்றுமை நம்மிடை வேண்டாமா-கூடி
            ஒன்றாய் உறுதி பூண்டோமா
     பெற்றவர் அங்கே அழுதிடவும்-அவர்
            பிள்ளையை பலவாய் எழுதிடவும்
     கற்றவர் செய்யும் செயலல்ல-வீண்
              கதைகள் சொல்வதும் பயனல்ல
     மற்றது உண்மை எதுவென்றே-யாரும்
              மறைக்க இயலா வரும்நன்றே

     மூடி மறைப்பதால் பலனில்லை-இன்னும்
              முள்ளி வாய்க்கால முடியவில்லை
     கேடி பக்சே கொடுங்கோலே-தட்டிக்
                கேட்க அங்கே நாதியிலே
     வாடியே பட்டி மாடுகளாய்-அங்கே
              வாழ்வார் துயரை ஏடுகளே
        தேடி எடுத்துப் போடுங்கள் –பின்
                தேசப் புகழைப் பாடுங்கள்

Monday, August 29, 2011

பெண்ணே எரிந்து போனாயே

பெண்ணே எரிந்து போனாயே-உயிர்
    பிரிந்து எங்கே போனாயோ
விண்ணே நீயும் சென்றாயா-ஓடி
    வேலூர் சிறையில் நின்றாயா
கண்ணீர் வற்ற அழுகின்றார்-மக்கள்
    கதறி துயரில் விழுகின்றார்
 எண்ணீர் மத்தியில் ஆள்வோரே-இனி
    எத்தனை உயிர்கள் மாள்வாரே

 வஞ்சம்  மட்டுமே உருவாக-மூவர்
      வாழ்வைப் பறிக்கும் கருவாக
 நெஞ்சம் இரங்கா நிலைநன்றா-உயிர்
     நீங்கின் மீண்டும் வருமொன்றா
 தஞ்சம் அடைந்த  பறவைக்கும்-தன்
     தசையைத் தந்தவன் தமிழனடா
 பஞ்சில் நெருப்பைக் கொட்டாதீர்-தீ
      பற்றி எரியும் திட்டாதீர்

 முடிவை ஆவர்கள் எடுக்கட்டும்-நாம்
     முடங்கியா விடுவோம் ஆகட்டும்
 அடங்கி நடக்கும் தமிழனுக்கு-பிறரை
     அடக்கவும் தெரியும் தமிழனுக்கு
 திடமாய் முடிவு  எடுப்பாராம்-அவர்
     தினமும் அறப்போர் தொடுப்பாராம்
 விடவே மாட்டோம் என்பாரா-வீணில்
     விடத்தை அவரே தின்பாரா 

 இனிமேல்  உயிர்பலி வேணாவே-இன்று
    இழந்தோம் செங்கொடி வீணாவே
 குனியோம் எவர்கும் குட்டகுட்ட-என்ன
    கோழையா நாமே தரைமுட்ட
 கனிவாய்ச் சொல்லியும் பயனில்லை-உயிர்
    காக்க தமிழரே உடன்ஒல்லை
 துணிவாய் தொடங்கும் அறப்போரே-மூவர்
    தூக்குக்  கயிற்றை அறுப்பீரே

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...