Monday, October 24, 2011

இடுவீர் பிச்சை இடுவீரே  இடுவீர் பிச்சை இடுவீரே-கல்வி
   ஏழைகள் கற்க விடுவீரே
 கெடுவீர் இன்றேல் ஒருநாளே-இது
   கேடெனக் களையின் எதிர்நாளே
 தொடுவீர் ஏழைகள் நெஞ்சத்தை-உடன்
   தொலைப்பீர் கல்வியில் இலஞ்சத்தை
 விடுவீர் ஏழைகள் நிலைஉயர-அவர்
   வேதனை நீங்கி தரமுயர

திறமை இருந்தும் பயனின்றி-வீணே
    தேம்பிட வாழல் மனங்குன்றி
 அறமா கருதிப் பார்ப்பீரே-பணம்
    அளித்தால் எவரையும் சேர்ப்பீரே
 தரமே அற்றவர் போனாலும் –அந்தோ
    தருவீர் இடமே!ஆனாலும்
 வரமே பொற்றவர் அவர்தானா-ஏழை
    வாழ்வே குட்டிச் சுவர்தானா

இல்லோர்  கல்வி இல்லோரா-இதை
    எடுத்து எவரும் சொல்லாரா
 நல்லோர் எண்ணிப் பாருங்கள்-இது
    நாட்டுக்கு நலமா கூறுங்கள்
 வல்லோர் வகுத்ததே வாய்க்காலா-ஏழை
    வாழ்வை அழிக்கும் பேய்க்காலா
 கல்லார் என்றும் அவர்தான-கேட்கும்
    கவிதை இதுவென் தவற்தானா

ஏழையின் கண்ணீர் பாரென்றீர்-அங்கே
    இருப்பது இறைவன் தானென்றீர்
 பேழையுள் இருக்கும் பாம்பாக-கட்டிப்
    பிணைத்திட பணமது தாம்பாக
 வாழையின் அடிவரும் வாழையென-அவன்
    வாழ்ந்தே மடிவது கொடுமையென
 கோழையாய் கிடப்பவன் எழுந்தாலே-பொங்கி
    குமுறும் எரிமலை ஆவானே

Sunday, October 23, 2011

ஊரறிய உலகறிய உண்மை தன்னை

      ஐ.நா அறிக்கை வந்தபோது எழுதியது


 ஊரறிய உலகறிய உண்மை தன்னை-ஐ.நா
    உரைத்தபின்னும உணராது இருத்தல் என்னை
 பாரறிய பாரதமே பொங்கி எழுவாய்-இன்னும்
    பக்சேவுக்குத் துணையானால் ஒருநாள் அழுவாய்
 சீரழிந்து தமிழினமே அழிந்தே போக-இந்த
    செயலாலே தமிழ்நாடே சுடுகா டாக
 வேரருந்து போய்விடுமே ஏக இந்தியா-உடன்
    விளங்கியிதை செயல்படுமா வடவர் இந்தியா

 தனிநாடய் நாமிருந்தால் ஈழம் அழிய-பொங்கி
      தடுத்திருப்போம் ஐயகோ ஏற்றோம் பழியே
 இனிமேலும் இதுதொடரின் பாரத நாடே-தமிழ்
      இனப்பற்றே வெறியாக விளையும் கேடே
 கனிமேலும் கனியவிடின் அழுகிப் போகும்-எதிர்
      காலத்தில் கதையல்ல உண்மை ஆகும்
 பனிபோகும் கதிரவனின் வரவும் கண்டே-உலகு
      பக்சேவை ஏற்றிவிடும் குற்றக் கூண்டே
 
 ஒசாமா பின்லேடன் ஒழிந்தான் என்றே-மகிழும்
     ஒபாமா உமக்கும்நான் சொல்வேன் ஒன்றே
 ஒசாமா சாகவில்லை இலங்கை மண்ணில-அவன்
     உலவுகின்றான் பக்சேவாய் காணக் கண்ணில்
 கூசாமல் எம்மவரை கொன்றே விட்டான்-பெரும்
     கொலைக் களமாய் ஈழத்தை ஆக்கிவிட்டான்
 பேசாமல் போர்குற்ற வாளி யென்றே-நீர்
    பிடித்துள்ளே போட்டாலே தொழுவோம் நன்றே

 கண்ணாடி வேண்டுமா கைப்புண்ணைப் பார்க்க-ஐ.நா
    காட்டிய அறிக்கையை ஆய்வுடன் நோக்க
 மண்ணோடு மண்ணாக அவன்மக்க வேண்டும்-தமிழ்
    மக்களவர் ஒன்றாக அணிதிரள ஈண்டும்
 எண்ணாமல் இரங்காமல் அரக்கனவன் கொலைகள்-நாளும்
    ஈழத்தில் கொன்றது எத்தனை தலைகள்
 உண்ணாமல் உறங்காமல் இருக்கின்றார் இன்னும்-உயிர்
    உடலோடு நடைப்பிணமே தெளிவாக எண்ணும்
                                                                                     
           புலவர் சா இராமாநுசம் 

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...