Saturday, April 27, 2013

புற்று நோயாம் ஊழலிங்கே போனது என்றால் ஒழிவதெங்கே நானா நீயா பாரென்றே
     நடந்திட  மத்திய அரசின்றே!
 வீணாய் தம்முள் தாம்சாடி
     விரையம் ஆகிடப் பலகோடி!
 காணோம் ஏதும் பலனொன்றே
     கடமை கண்ணியம் நிலையின்றே!
 ஏனாம் இந்த இழிநிலையே
     எண்ணிப் பார்க்கவும் வழியிலையே !

புற்று நோயாம் ஊழலிங்கே
      போனது என்றால் ஒழிவதெங்கே
 உற்றுப் பார்த்தால் மனிதரிலே
      ஊழல் செய்யாப் புனிதரிலே!
 மற்றவர் செய்தால் ஊழலெனல்
      மறைப்பார் ஊழல் தம்மதெனில்!
 கற்றவர் அறிந்தே செய்கின்றார்
      கல்லார் அறியாது செய்கின்றார் !

முடங்கிப் போவதோ அவையிரண்டும்
     முறையா சரியா படை திரண்டும்!
 அடங்கிப் போனபின் பலனென்ன
     அழிவதுப் பணமே கோடியன்ன!
 திடமொடு ஆய்து முடிப்பீரோ
     திரும்பவும் அமளிக்கு விடுப்பீரோ!
 நடந்தது நடந்ததாய் போகட்டும்
     நல்லது எதுவோ ஆகட்டும்!

அனைத்து மக்களும் வெறுப்பானார்
   அமளிக்கி அனைவரும் பொறுப்பானார்!
நினைத்துப் பார்க்கவும் கூசிடுமே
   நிம்மதி கெட்டே ஏசிடுமே!
தினைத் துணையளவில் எளிதாக
   தீர்த்திட முயலல் வழியாக!
பனைத் துணையளவு பெரிதாக
   பரவ வளர்த்தல்  தவறன்றோ?
 
        புலவர் சா இராமாநுசம்
         

Thursday, April 25, 2013

இன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே-என் இதயத்தை கூறுபோட்டு அறுக்கும் வாளே!
இன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே-என்
   இதயத்தை கூறுபோட்டு அறுக்கும் வாளே!
அன்றேநான் அவள்பிரிய இறந்தோன் ஆனேன்-நல்
   அன்னையவள் தாரமவள் மறந்தா?  போனேன்!
குன்றன்ன துயர்தன்னை நெஞ்சில்  உற்றேன்-ஆனால்
    குறைதீர இருமகவை நானும் பெற்றேன்!
நன்றென்னைக் காக்கின்றார் எனதுப் பெண்கள்-என்றும்
    நலன்பேண நான்காணும்  இரண்டு கண்கள்!


செம்புலத்து நீர்போல கலந்தோம் அன்றோ!-தனிமை
     சிறைபட்டு  கிடக்கின்றேன் நானும்  இன்றோ!
வெம்புலத்து வீழ்ந்ததொரு புழுவைப் போல –பெரும்
    வேதனையில் நாள்தோறும் துடிக்கச் சால!
அம்பலமே இல்லாத  ஆடல் தானே-இன்று
    ஆயிற்றே என்நிலையும்! வாழ்தல் வீணே!
எம்பலமே அவள்தானே மறந்தேன் போனாள்-துயர்
    எல்லையிலே நான்மடிய பறந்தேன் போனாள்!


துடுப்பில்லா தோணியென விட்டுச் சென்றாள்-எட்டா
    தொலைவினிலே கண்காண நிலையில் நின்றாள்!
பிடிப்பில்லா வாழ்கையிது! எதற்கு வேண்டும் –மனம்
    பேதலித்து சலிப்பினையே மேலும் தூண்டும்!
நடிப்பிப்லா  நாடகமே என்றன்  வாழ்வே –நான்
    நடைப்பிணமே! விரைவாக  வருமா  வீழ்வே!
இடுப்புள்ள கைபிள்ளை  ஆனேன்  இன்றே –இனி
    இறப்புயெனும் நாளொன்றோ அறியா, ஒன்றே!

                        புலவர்  சா  இராமாநுசம்Wednesday, April 24, 2013

சாக்கடையும் குடிநீரும் கலந்து வருதே-மனம் சகிக்காத நாற்றமிகத் தொல்லை தருதே!
சாக்கடையும் குடிநீரும்  கலந்து  வருதே-மனம்
   சகிக்காத  நாற்றமிகத்  தொல்லை  தருதே!
நீக்கிடவே முடியாத  மேயர்  ஐயா –உடன்
   நேரில் ஆய்ந்து பாருங்கள் பொய்யா மெய்யா?
நோக்கிடுவிர் தொற்றுநோய்  பரவும்  முன்னே-மக்கள்
    நொந்துமனம் வருந்திடவும் செய்வார்  பின்னே!
போக்கிடமே  ஏதுமில்லா  கோழை  நாங்கள் –எண்ணி
   புலம்புவதா ? ஆவனவே செய்வீர்   தாங்கள்!

மழைநீரின்  வடிகால்வாய்  வேலை  முற்றும் –மிக
     மந்தகதி! கேட்டாலும் மதியார் சற்றும்!
அழையாத விருந்தினராய்  கொசுவின்  கூட்டம் –பெரும்
    அலையலையாய்  வந்தெம்மை  தினமும்  வாட்டும்!
பிழையேதும்  செய்யவில்லை ஓட்டே  போட்டோம் –உயிர்
    பிழைப்பதற்கே யாதுவழி!?  ஐயா  கேட்டோம்!
கழையாடும் கூத்தாடி ஆட்டம்  போன்றே –வாழ்வு
   காற்றாடி  ஆடுவதைக்  காண்பீர்  சான்றே!


நாள்தோறும் விலைவாசி  நஞ்சாய்  ஏற –ஒரு
     நாள்போதல் யுகமாக எமக்கு மாற!
ஆள்வோர்க்கும் குறையொன்றும் எட்ட வில்லை-மேயர்
     ஐயாவே நீரேனும்  தீர்பீர்  தொல்லை!
குடிநீரின் குறைதன்னை போக்க வேண்டும்–தீரா
    கொசுத்தொல்லை! இல்லாமல் நீக்க  யாண்டும்!
விடிவதனை எதிர்பார்த்து காத்துக் காத்தேன் –இரவு
    விழிமூட  இயலாமல்  கவிதை யாத்தேன்!

                       புலவர் சா  இராமாநுசம்

Monday, April 22, 2013

மதிமிகு தமிழா எழுவாயா –நம் மானத்தை உரிமையைக் காப்பாயா


              முல்லைப் பெரியார் அணைபற்றிய  தீர்ப்பு  விரைவில்  வரயிருக்கிறது.   அது  பற்றி அன்று தமிழகம் போராடிய போது,  நாம் எழுச்சி பெற நான்  எழுதிய  கவிதை  இன்றைய சூழ்நிலைக்  கருதி, நினைவு படுத்த
மீள் பதிவாக இங்கே வருகிறது!

எழுவாய்த் தமிழா எழுவாயா-அணையை
     இடித்த  பின்னர்  அழுவாயா
வழுவாய்ச் சொல்லியே துடிக்கின்றார்-நீர்
     வழங்கிட பொய்பல தொடுக்கின்றார்
தொழுவாய் எதற்கு வடநாடே-அவர்
    துணையால் நடப்பதே இக்கேடே
கழுவாய் எதிர்ப்புப் போராட்டம்-அதைக்
     கண்டவர் புத்தி மாறட்டும்

முல்லைப் பெரியார் அணைமட்டும்-அந்த
     மூடர்கள் கை யால் உடையட்டும்
எல்லைப் போரே நடந்திடுமே-நம்
    ஏக இந்தியா உடைந்திடுமே
தொல்லை மத்தியில் ஆள்வோரே-உடன்
     துடிப்புடன் விரைந்து தடுப்பீரே
இல்லை என்றால் பெரும்போரே-இங்கு
     ஏற்படும் பொறுப்பு ஆள்வோரே

திட்டம் இட்டே செய்கின்றார்-அவர்
    தினமும் பொய்மழை பெய்கின்றார்
கொட்டம் இனிமேல் செல்லாதே-தமிழன்
    குமுறும் எரிமலை பொல்லாதே
சுட்டால் தெரியும் நண்டுக்கே-எடுத்துச்
    சொன்னால் புரியா மண்டுக்கே
பட்டே அறிந்திடல் கேரளமே-நல்ல
     பண்பா ? அறித்திடு கேரளமே!

அனைவரும் ஒன்றாய் சேருகின்றார்-நம்
     அணையை உடைக்கக் கோறுகின்றார்
இனியென தமிழகம் திரளட்டும்-நம்
      எழுச்சியை உலகம் உணரட்டும்
தனியொரு புதுயுகம் தோன்றட்டும்-பின்
      தக்கதோர் பாடம் கற்கட்டும்
மனித நேயமே அற்றவர்கள்-பாபம்
      மனதில் நோயே உற்றவர்கள்

உதிரிப் பூவாய் கட்சிகளே-இங்கே
    உள்ளது சரியா கட்சிகளே
எதிரிகள் அனைவரும் ஒன்றாக-அங்கே
    இருப்பதைக் காண்பீர் நன்றாக
சதிபல அன்னவர் செய்கின்றார்-ஏற்ற
    சமயம் இதுவென முயல்கின்றார்
மதிமிகு தமிழா எழுவாயா –நம்
    மானத்தை உரிமையைக் காப்பாயா

                         புலவர் சா இராமாநுசம்


இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...