Saturday, March 30, 2013

தனிஈழம் காண்பதுதான் தீர்வு என்றே-ஈழத் தமிழரை ஏமாற்ற வேண்டாம் நன்றேl
தனிஈழம் காண்பதுதான் தீர்வு என்றே-ஈழத்

     தமிழரை ஏமாற்ற வேண்டாம் நன்றேl

இனிஈழம் வாழ்நாளின் நோக்கம் என்றே-மேலும்

    இயம்பாதீர்! கலைந்தது வேடம் நன்றே


கனிகேட்டு காய்கவர நினைத்தல் தீதே-உரிய

    காரணம்தான் யாமறியோம் சொல்வீர் யாதே

பனிபட்டு பூக்கருகி உதிரல் போல-ஏனோ

    பதில்சொல்ல இயலாது விழிப்பீர் சால


உண்மையான எண்ணமுடன் கேட்க வேண்டும்-ஈழம்

    ஓட்டுக்கே கேட்பவரை ஒதுக்க வேண்டும்!

வெண்மைமிகு உள்ளமுடன் செயலும் வேண்டும்-மிக

     வேகமுடன் அதற்காக முயல வேண்டும்!


வெம்பித்தான் கிடக்கின்றார் ஈழக் குடிகள்-அவர்

    வேதனைக்கு வைக்காதீர் மேலும் வெடிகள்!

நம்பிக்கை வரும்படியாய் செயலும் வேண்டும்-எனில்

     நாடகமா..?என்றேதான் சொல்வார் மீண்டும்!


அடிபட்டார் திட்டுவதும் இயல்பு தானே-இதை

    அரசியலாய் ஆக்கினால் அனைத்தும் வீணே!

கொடிகட்டி ஆள்வதற்கே ஈழம் என்றே-எவர்

    குரல்கொடுக்க வந்தாலும் ஒழிப்போம் நன்றே!


உலகத்து நாடுகளின் கவனம் நன்றே-ஈழம்

   உருவாக ஏற்றதொரு சூழல் இன்றே!

திலகம்போல் தெளிவாக மிளிரக் கண்டோம்-வெற்றி

    தேவதையும்  தேடிவர வழிதான்! விண்டோம்!ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றாய் சேரின்-மேலும்

    உலகத்து தமிழர்களும் ஓங்கக் கூறின்

கிட்டிவிடும் ஈழம்தான் ஐயம் இல்லை!-படு

    கிழவன்நான் சொல்வது பொய்யா? இல்லை!


எதிர்காலம் கயவர்களை காட்டி விடுமே-அந்த

    எத்தர்களின் வாழ்வு மேலும் கெடுமே!

புதிரல்ல! புரிந்துவிடும் காலம் செல்ல-இது

    பிழையெனில் பொறுத்திடுக! ஈழம் வெல்ல!


                         புலவர் சா இராமாநுசம்Friday, March 29, 2013

நம்பும் படியே இல்லையா-நம் நாட்டின் நடப்பு சொல்லையா! நம்பும்  படியே இல்லையா-நம்
   நாட்டின் நடப்பு  சொல்லையா!
 தும்பை விட்டு  வால்தன்னை-பிடித்து
  துரத்த நினைப்பது போலய்யா!

 விலகி விட்டோம் என்றொருவர் -ஈழம்
   வேண்டினார் அவையில் மற்றொருவர்
 இலவு  காத்த கிளிதானே -நம்
  ஈழ மக்கள்  நிலைதானே!

  மாணவர்  எழுச்சி  கண்டோமே-மனதில்
   மகிழ்ச்சி  நாமும் கொண்டோமே
 வீணல என்பதை  உணர்ந்தோமே-அவர்
  வீரத்தில் விளைந்த  தொண்டாமே!

 அணையா விளக்காய்  எரியட்டும்-ஈழம்
  அடைவோம்  உலகுக்கே  புரியட்டும்
 துணையாய் என்றும்  இருப்போமே-நம்
  தோளும் கோடுத்து சுமப்போமே!

 தேர்தல் விரைவில்  வந்திடுமே- அதுவும்
  தினமும் மாற்றம்  தந்திடுமே
 ஊர்தனில் இதனை உணர்த்திடுவீர்-கடந்த 
  உண்மைகள் தம்மை  உரைத்திடுவிர்!

 நாடகம் நடத்தும் கட்சிகளை -நாளும்
  நடக்கும் பற்பல  காட்சிகளை
ஊடக  வாயிலாய் உணர்வாரே- தம்
  உள்ளத்தில் பதித்து  கொள்வாரே!

             புலவர்  சா  இராமாநுசம்

 

  

Wednesday, March 27, 2013

அன்னை வயிற்றில் உருவானோம்-எரியும் அக்கினி தனக்கே எருவானோம்


       மனிதா மனிதா ஏமனிதா-நாளை
           மரணம் வந்தே நெருங்குமுன்னே
       புனிதா புனிதா என்றுலகு-நாளும்
          போற்ற   ஏதும்     செய்தாயா
       நனிதா அல்ல ஒன்றேனும்-வாழ்வில்
           நலிந்தோர் தமக்குத் தந்தாயா
       இனிதா இதைநீ செய்திடுவாய்-உடன்
           இணையில் இன்பம் எய்திடுவாய்
      
       பிறந்தேம் என்பது பெரிதல்ல-மனிதப்
           பிறவியாய் பிறப்பதும் எளிதல்ல
       சிறந்தோம் ஏதோ ஒருவகையே-பிறர்
           செப்பிட வாழ்பவர் பெருந்தகையே
       துறந்தார் முற்றும் துறந்தாராய்-அவரும்
           தூய்மையை சற்றே குறைந்தாராய்
       இருந்தால் அவரையும் ஏற்காதே-பிறகு
           இவ்வுலகம் அவரைச் சேர்க்காதே
       
      தேவைக்கு மேலே பொருள்தேடி-அவர்
           தினமும் சேர்த்தது பலகோடி
       சாவைத் தடுக்குமா அப்பணமே-மன
           சாந்தியைக் கொடுக்குமா அப்பணமே
       நாவைத் தாண்டினால் சுவையறியா-நாம்
           நாளும் உண்ணும் உணவறியா
       பாவைக் கூத்தாம் இகவாழ்வே-அதிக
           பணம்பெரின் இல்லை சுகவாழ்வே
      
     அன்னை வயிற்றில் உருவானோம்-எரியும்
           அக்கினி தனக்கே எருவானோம்
      பொன்னை எடுத்துப் போனோமா-சேர்த்த
           பொருளை எடுத்துப் போனோமா
      கண்ணை மூடின் திறப்பதில்லை-இரு
           கையும் காலும் ஆடவில்லை
      மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
           மறப்பின் இல்லை புனிதர்களே!
         
                     புலவர் சா இராமாநுசம்
          

Sunday, March 24, 2013

பொற்பனை உயிரை இனியும் போக்காதீர் காலம் கனியும்
கட்டிளம்  காளை  யொருவன்
     கன்னியாம் பெண்ணு  மொருத்தி
விட்டனர்  உயிரை  என்ற
     வேதனை செய்தி  கேட்டே
பட்டது  துயரம் ! பஞ்சில்
      பற்றிய  தீயாய்  நெஞ்சில்
எட்டுமா ? துரோகி  உமக்கே
     ஈழமும்  மலர  எமக்கே!

தற்கொலை  வேண்டா  மிங்கே
     தன்னலம் மிக்கோ  ரிங்கே
அற்பனாம் பக்சே   தனக்கே
      அடிமையாய்  ஆன  கணக்கே
சொற்பநாள் விரைவில்  முடியும்
      சுதந்திர  ஈழம்   விடியும்
பொற்பனை உயிரை  இனியும்
     போக்காதீர்  காலம்  கனியும்

கோழையா? அல்ல!  நாமே
     கொள்கையில்  உறுதி  தாமே!
ஏழைகள் வடித்த கண்ணீர்
       எரிந்திடும்  தீயாய்  ஆமே
பேழையுள்  பாம்பா ! அல்ல
       பிணைத்திட  தாம்பு  மல்ல
தாழையுள்  நாக  மென்றே
      தனியீழம்  பெறுவோம்  நன்றே!

               புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...