Saturday, July 15, 2017

நல்லவர்கள் வரவேண்டும் பொதுவாழ்வைத் தேடி-அந்த நாள்வந்தால் வரவேற்பர் மக்களெலாம் கூடிகோடிகோடி கோடியென வரிப்பணமும் வீணே-ஏதும்
கொள்கையிலா கட்சிகளாய் இன்றிருத்தல் தானே
தேடிதேடி வீடுதோறும் வாக்குத்தர கேட்டார்-இன்று
தேம்பியழும் மக்கள்தானே நம்பியதைப் போட்டார்

பெரியதென்ன சிறியதென்ன ஊழல்தன்னில் அளவே-என
பேசுவதால் பலனுண்டா அத்தனையும் களவே
புரியாத மக்களென நினைத்துவிடில் தவறே-அதுவும்
புரிந்துவிடும் தேர்தல்வரின் உணர்திடுவர் அவரே

நிலையான கொள்கையென யாருக்கும் இல்லை-இன்று
நிறம்மாறும் பச்சேந்தி கட்சிகளே தொல்லை
விலையாகும் அரசியலே விளையாடும் இங்கே-எனில்
விலைவாசி ஏற்றத்தைத் தடுப்பவர்தான் எங்கே

பதவிக்கே வந்துவிட்டால் பேசுவதும் ஒன்றாம்-பதவி
பறிபோனால் பேசுவதோ மாறான ஒன்றாம்
முதலுக்கே தேவையில்லா அரசியலும் தொழிலாம்- சற்று
முயன்றாலே போதுமவர் வாழ்வேநல் எழிலாம்

நல்லவர்கள் வரவேண்டும் பொதுவாழ்வைத் தேடி-அந்த
நாள்வந்தால் வரவேற்பர் மக்களெலாம் கூடி
அல்லவர்கள் மீண்டும்வரின் இந்நிலையே என்றும்-இந்த
அவலந்தான் முடியாத தொடராக நின்றும்

புலவர் சா இராமாநுசம்

Friday, July 14, 2017

வடக்கிருந்து வருகிறதே ஊதக் காற்றும்-ஏதும் வாய்திறவா தமிழரசே உண்மை சாற்றும்

நடக்கிறதா  அரசுயென   தெரிய வில்லை-நாட்டில்
  நடப்பதென்ன  ஒன்றுமே   புரிய வில்லை!
முடங்கியதோ செயல் படுதல்  என்றே-குழப்பம்
  மனமுழுதும் தோன்றிவிட ஏனோ!  ஒன்றே
படச்சுருளாய் ஒடுதய்யா எண்ணத் திரையில்-நின்று
   பாழுமனம் தேடுதய்யா அந்தோ குறையில்
வடக்கிருந்து  வருகிறதே  ஊதக்   காற்றும்-ஏதும்
    வாய்திறவா தமிழரசே உண்மை  சாற்றும்

புலவர் சா  இராமாநுசம்

Thursday, July 13, 2017

உண்ணும உணவும் மறந் தாச்சே-அந்த உணவின் சுவையும் துறந் தாச்சேஏனோ தொடங்கினேன் வலைப் பூவே-பலவும்
    எழுதிட நாளும் களைப் பாவே
    தேனாய் இனித்தது தொடக் கத்தில்-ஏதும்
    தேடுத லின்றி இதயத் தில்
    தானாய் வந்தது அலை போல-இன்று
    தவியாய் தவிக்குதே சிலை போல
    வானாய் விரிந்திட சிந்தனை கள்-கவிதை
    வடித்தால் வருஞ்சில நிந்தனை கள்  

    உண்ணும உணவும் மறந் தாச்சே-அந்த
    உணவின் சுவையும் துறந் தாச்சே
    எண்ண மெல்லாம் வலைப் பூவே-பொழுதும்
    எழுதத் தூண்டின தலைப்  பூவே
    போதை கொண்டவன் நிலை யுற்றேன்-நாளும்
    புலம்பும் பயித்திய  நிலை பெற்றேன்
    பொழுதும் சாய்ந்தே போன துவே-களைப்பில்
    புலவன் குரலும் ஓய்ந்த துவே

    பாதி இரவில் எழுந் திடுவேன்-உடன்
    பரக்க பரக்க எழுதி டுவேன்
    வீதியில் ஒசைவந்த வுடன்-அடடா
    விடிந்த உணரவும் வந்தி டிமே
    தேதி கேட்டால தெரி யாதே-அன்றைய
    தினத்தின் பெயரும் தெரி யாதே
    காதில் அழைப்பது விழுந் தாலும-என்
    கவன மதிலே செல்வ தில்லை

    படுத்த படிய சிந்திப் பேன்-என்
    பக்கத் தில் பேனா தாளுமே
    தொடுக்க நெஞ்சில் இரு வரிகள்-வந்து
    தோன்றும் ஆனல் நிறை  வில்லை
    அடுத்த வரிகள் காணா தாம்-அந்தோ
    அலையும் நெஞ்சே வீணா தாம்
    எடுத்த பாடல் முடியா தாம்- எனினும்
    ஏனோ  இதயம் ஒயா தாம்

    அப்பா  வேதனை ஆம்  அப்பா-தினம்
    ஆனது என் நிலை பாரப்பா
    தப்பா-?  தொடங்கின வலைப் பூவே-நெஞ்சம்
    தவிக்க எண்ணம் சலிப் பாவே
    ஒப்பா யிருந்ததே என் னுள்ளம்-தேடி
    ஓடுமா சிந்தனை பெரு வெள்ளம்
    இப்பா போதும் முடி யப்பா-சோர்வு
    எழவே தொடரா படி யப்பா

              புலவர் சா இராமாநுசம்

Wednesday, July 12, 2017

நித்தம்தான் வருகின்றீர் கண்டால் உடனே-ஏனோ நீங்கு கீன்றீர் விரைவாக உமது இடமே!புலவர் கல்லுரி விடுதியில் தங்கிய
           போது, இரவில் ஏற்பட்ட அனுபவம்.....!


பாயெடுத்து போட்டவுடன் துயின்ற நிலைதான்-நான்
          பலநாட்கள் ஆனதய்யா பரிவே யிலைதான்!
  நோயெடுத்து போனதய்யா தூங்கா உடலும்-உடன்
          நோக்குகின்ற நேரத்தில் மறைந்தே விடலும்!
  வாயெடுத்து  சொல்லுகின்ற கொடுமை யன்று-தினம்
           வாட்டுகின்றீ்ர் வருந்துகிறோம் தீரல் என்றே!
  தாயெடுத்து அணைக்காதக் குழந்தை போல-ஐயா
         தவிக்கின்றோம் மூடுமய்யா வாயை சால!


  நித்தம்தான் வருகின்றீர் கண்டால் உடனே-ஏனோ
           நீங்கு கீன்றீர் விரைவாக உமது இடமே!  
  சித்தம்தான் யாமறியோம் செய்யும் தொண்டே-முடிவாக
         செப்பினால்  நாங்களும் அதனைக் கண்டே!
  தத்தம்தான் செய்திடுவோம் உயிரைக் கூட-வீண்
           தகராறு வேண்டாமே! வயிறும் மூட!
  இரத்தம்தான் தேவையெனில் எடுத்துக் சொல்லும்-வந்து
         இரவெல்லாம் வருவதை நிறுத்திக் கொள்ளும்!


   மடித்தயிடம் மேலுறையின் சந்தும் பொந்தும்-நீங்கள்
            மறைந்துறையப் புகலிடமே உமக்குத் தந்தும்
   கடித்தயிடம் தெரியாமல்  துளியும் இரத்தம்-அடடா!
            கசியாமல் கடிப்பதுதான் விந்தை நித்தம்!
    அடிக்கடியே வருகின்றீர் அந்தோ தொல்லை-மேலும்
            அடுக்கடுக்காய் வருகின்றீர் உண்டா எல்லை!
    படித்தியது போதுமினி க் காலி செய்வீர்-இன்றேல்
             பழிவந்து சேருமய்ய மூட்டை யாரே!

புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, July 11, 2017

உண்மை! தமிழா எண்ணிப்பார் –இந்த உலகில் நமையார் மன்னிப்பார்!
சூடும் சுரணையும்  நமக்கில்லை –சேர்ந்து
      சொல்லியும்  மத்தியில் கேட்பதில்லை
வாடும் மீனவர்  வாழ்வில்லை -நாளும்
      வருந்தும் அவன்குரல்  மாறவில்லை
கேடும்  செய்தவன் நாட்டிற்கே –நாம்
       கேட்டும் போவதாய் ஏட்டிற்கே
நாடும் அறிந்திட சொல்கின்றார் – தெரு
      நாயென நம்குரல் கொள்கின்றார்
              
உண்மை! தமிழா  எண்ணிப்பார் –இந்த
      உலகில் நமையார் மன்னிப்பார்
கண்ணை  விற்று ஓவியமா – என்ற
      கதைதான் மத்தியின்  காவியமா
விண்ணை முட்டும்  பெருமைதனை –அற
     வழியில் தமிழன் அருமைதனை
 திண்ணை விட்டு  எழுவாயா –வடக்கு
      திசையை நோக்கியே தொழுவாயா!
         
பதவி ஆசைகள்  போகட்டும் –ஆட்சி
    பரம்பரை  சொத்தெனல்  ஏகட்டும்
உதவி அல்லவே  உரிமையென –அதை
    உணர்ந்து செயல்படின் பெருமையென
நிதமே நடந்து கொண்டாலே –வெற்றி
     நிலைபெறும் உம்முடை  தொண்டாலே
இதுவே ! இன்றே! உள்ளவழி – எனில்
     இழிவே ! என்றும் மாறாப்பழி!
 
புலவர்  சா  இராமாநுசம்

Monday, July 10, 2017

பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா பழியும் வருமே வாய்திறவாய்
தொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில் 
தொல்லையா இன்பம் தந்ததுவே 
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளைக் 
கண்முன் காணா ஏக்கந்தான் 
விளைந்தது மீண்டும் கனவுவர-அவள் 
விட்டுச் சென்றதை நினவுதர 
அலைந்தது அந்தோ மனம்வீணே-முக 
அழகில் காண்பது மிகநாணே 

என்னுள் அவளே இருந்தாலும்-நல் 
இருவிழி தந்திடும் மருந்தாலும் 
பொன்னுள் பதித்த மணிபோல-தினம் 
புலம்பும் நெஞ்சின் பிணிமாள 
மன்னும் உயிரும் உடலோடு-அவள் 
மறுத்தால வாழ்வே சுடுகாடே 
 
எத்தனை காலம் ஆனாலும்-என் 
இளமை அழிந்து போனாலும் 
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம் 
செப்பிடும் வரையில் தூங்காது 
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான் 
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன் 
பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா 
பழியும் வருமே வாய்திறவாய் 

 


புலவர் சா இராமாநுசம்


Sunday, July 9, 2017

நிம்மதி நிம்மதி நிம்மதியே-நீயும் நிலையென இருப்பது எவ்விடமே


நிம்மதி  நிம்மதி நிம்மதியே-நீயும்
 நிலையென இருப்பது எவ்விடமே
எம்மதி கலங்கிப்  புலம்பிடவே-வரும்
   எண்ணங்கள் அறியா!  கலங்கிடவே
தம்மதி  இழந்தவர்  பலபேரே-தேடியே
  தவித்துமே  அலுத்தவர்  சிலபேரே
சம்மதம் இதவென  சொல்லிவிடு-உனக்கு
  சரியெனப் பட்டால் சாகவிடு

உனக்கே நிம்மதி இல்லையோ-ஐயம்
   உதிக்கிது என்னுள் !போக்கிடுவாய்
தனக்கு  மிஞ்சினால் தானமென-செல்லும்
    தத்துவம் தன்னை  நோக்கிடுவாய்
ஆண்டவர்   மனதிலும்  நீயில்லை-இன்று
     ஆள்வோர்  மனதிலும்  நீயில்லை
தாண்டவம் ஆடிடும்  நிம்மதியே-இதுவே
    தவறென பாடுது  என்மதியே!
 புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...