Friday, April 11, 2014

செய்தி! அறிவிப்பு!
உறவுகளே! கடுமையான முதுகுவலி ! மருத்துவர் அறிவித்த படி
இம்மாதம் முழுவதும் ஓய்வு தேவைப்படுகிறது! பொறுத்தருள்க!
நலமடைந்ததும் சந்திப்போம்

வணக்கம்!


புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, April 9, 2014

ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று ஆனார் இளங்கோ அடிகளெனஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று
   ஆனார் இளங்கோ அடிகளென
காட்சியை எண்ணிப் பார்பீரே-மாறிக்
   கட்சிக்கு கட்சிப் போவீரே
மாட்சியா சற்று நில்லுங்கள் உங்கள்
   மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் 
சாட்சியா வேண்டும் மேன்மேலும்-நாளும்
   சண்டைகள் தேவையா இனிமேலும்

சேவை செய்ய என்கின்றீர்-பதவியில்
   சென்றதும் என்ன செய்கின்றீர்
தேவை உமக்கெதோ தேடுகின்றீர்-ஆனால்
   தேர்தல் வந்தால் ஒடுகின்றீர்
சாவைத் தடுத்திட ஆகாதாம்-என்றும்
   சாதிச் சமயம் போகாதாம்
பாவைக் கூத்தே நாள்தோறும்-நடக்க
   பாவம் மக்கள் ஊர்தோறும்

நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து
   நாளும் மக்கள் அதைப்பேசி
நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
   நீங்கா வேதனை மனதூன்றி
பஞ்சென அடிபட வாழ்கின்றார்-கடும்
   பற்றாக் குறையில் வீழ்கின்றார்
வெஞ்சினம் அவர்பெறின் என்னாகும்?-உடன்
   விலையைக் குறைப்பீர் ஆள்வோரே!

                              புலவர்  சா இராமாநுசம்

Monday, April 7, 2014

என் முகநூலில் அகம் பதித்த முத்துக்கள்

மனிதன், தன் நன்மைக்காக இயற்கையோடு போராடி வெற்றி கண்டாலும், அவன் வெற்றி கெள்ளமுடியாத பல
சக்திகள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன !உதாரணமாக
கொழுந்து விட்டு எரியும் தீயை வேண்டுமானால் அணைத்துவிடலாம். குமிறி வெடிக்கும் எரிமலையை அணைக்க முடியுமா!? அது , தானேதானே அடங்க வேண்டும்

வெள்ளம்கூட முதலில் பள்ளம் இருகுமிடம் நோக்கித்தானே பாயும் அதுதானே இயற்கை! அது நிரம்பிய
பிறகுதானே மேடு நோக்கித் திரும்பும் ! நம் வாழ்க்கையும் அப்படித்தான்! நம்முடைய வாழ்க்கையில் வரும் மேடு, பள்ளங்களுக்கு ஏற்பவே ,வெற்றிகளும், தோல்விகளும் அமையும்!
வாழ்வில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வுக்கும் உள்ளத்தில் தோன்றும் எண்ணம் தான் முதல் காரணமாகிறது! அதன் பிறகே அது செயல் வடிவம் பெறுகிறது! எனவே எண்ணம் தூயதாக இருக்குமானால் ,செயலும் தூயதாகவே அமையும்

நெருப்பு வெளியில் இருந்தால்தான் நீரைச் சூடாக்க முடியும்! அதுவே நீருக்குள் சென்றால் அதுவே அவிந்து தானே போகும்! அதுபோலத்தான் மனிதர்களும், தம் தகுதிக்குரிய ,இடத்தில் இருந்தால்தான் அவர்களின் சக்தியை
வெளிப்படுத்த இயலும்! மீறினால் நெருப்பின் கதிதான் அவர்களுக்கும் வரும்!

யாரோ ஒருவன் உயிருக்குப் பயந்து நம்மிடம் அடைக்கலமாகிறான்! துரத்தி வரும் கூட்டம் வந்து கேட்டா,இங்கில்லையே என்று பொய் சொல்லி காப்பாற்றுகிறோம் என்றால் இது பொய்யா!!!
அல்ல! என்கிறார் வள்ளுவர்! அது பொய்தான் என்றாலும்
உண்மையின் இடத்தில் வைக்கலாம் என்கிறார் ! போனால்
வராத உயிரைக் காக்க ,சொன்னதும் மேலும் , அவர் தனக்கு
ஏதும் நன்மை கருதி சொல்லாததும் எண்ணி ஆய்வு செய்தால்
உண்மைக்கு ஒப்பாகும் அது என்பதே கீழ் வரும் குறள் தரும் பொருளாகும்

பொய்மையும் வாய்மை இடத்த புரைநீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

அறம் என்றால் என்ன!? பொருள் உள்ளவன் இல்லாதவனுக்குக்
கொடுத்து , உதவுதல் ஆகும்! இது பொதுவான கருத்து. அப்படிபொருள்
இல்லாதவன் அறமே (தருமம்) செய்ய இயலாதா என்றால் , வள்ளுவர்
இயலும் என்கிறார்! எப்படி!?

யாரும் எந்த நிலையிலும், வாழ்க்கையில் பொய்யே சொல்லாமல்
வாழ்ந்து வந்தால் அறம் செய்யாமையைக் காட்டிலும் நன்மை தரும்
என்பதாம் .

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று1

புலவர்   சா  இராமாநுசம் 

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...