Saturday, January 5, 2013

பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை, பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல் ஆகும்!
பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் இதை,
   பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல்  ஆகும்!
அழுதுகிட்டே  மீன்பிடிக்கும்  மீனவன்  போல -அவன்
   அல்லலுக்கு  விடிவுண்டா  என்றும்  சால!

பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் இதை,
   பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல்  ஆகும்!

பொழுதுமுட்ட  குடிக்கின்றான்   கவலை  அகல இல்லம்
   போனபின்னர்  அவன்செயலை  எடுத்துப்   புகல!
விழுதுகளாம்  பிள்ளைகளும்  மனைவி  என்றே படும்
    வேதனையை  விளக்குவதும்  எளிதும்  அன்றே!

பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் இதை,
   பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல்  ஆகும்!


                                             
நஞ்சுண்ட  விவசாயி  கண்டோம்  இன்றே வரும்
    நாட்களிலே  நடக்குமிது  காணும் ஒன்றே!
பஞ்சுண்டு  நெய்வதற்கும்  ஆலை யுண்டே ஆனா
    பலநாளாய்  மூடியது   அரசின்  தொண்டே!

பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் இதை,
   பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல்  ஆகும்!


கஞ்சுண்டு  வாழ்வதற்கும்  தொட்டி  கட்ட அரசு
     கருணையுடன்  மானியமே  நம்முன்  நீட்ட!
நெஞ்சுண்டு  நன்றிமிக  வாழ்வோம்  நாமே பெரும்
      நிம்மதியாய்  அஞ்சலின்றி  நாளும்  தாமே!

பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் இதை,
   பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல்  ஆகும்!
                       
                          புலவர்  சா  இராமாநுசம்

Friday, January 4, 2013

இன்னும் எதற்கோ நடிக்கின்றாள்-தன் இதயம் திறக்க மறுக்கின்றாள்
தொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில் 
தொல்லையா இன்பம் தந்ததுவே 
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளைக் 
கண்முன் காணா ஏக்கந்தான் 
விளைந்தது மீண்டும் கனவுவர-அவள் 
விட்டுச் சென்றதை நினவுதர 
அலைந்தது அந்தோ மனம்வீணே-முக 
அழகில் காண்பது மிகநாணே 

என்னுள் அவளே இருந்தாலும்-நல் 
இருவிழி தந்திடும் மருந்தாலும் 
பொன்னுள் பதித்த மணிபோல-தினம் 
புலம்பும் நெஞ்சின் பிணிமாள 
மன்னும் உயிரும் உடலோடு-அவள் 
மறுத்தால வாழ்வே சுடுகாடே 
இன்னும் எதற்கோ நடிக்கின்றாள்-தன் 
இதயம் திறக்க மறுக்கின்றாள் 

எத்தனை காலம் ஆனாலும்-என் 
இளமை அழிந்து போனாலும் 
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம் 
செப்பிடும் வரையில் தூங்காது 
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான் 
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன் 
பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா 
பழியும் வருமே வாய்திறவாய் 

புலவர் சா இராமாநுசம்

           நீண்ட,  பழைய  நாட்குறிப்பு,  மீள்பதிவு
   

Wednesday, January 2, 2013

வடநாடுச் சென்றும் வாளாய் திரும்பிட

வடநாடுச்  சென்றும்  வாளாய்  திரும்பிட
கொடநாடும்  சென்றாராம்  இன்றும் திடமான
திட்டமின்றி!  மக்கள்  தினந்தோறும்  தேம்பியழ
வெட்டும்மின் வெட்டே விளம்பு

ஆள்வோர்க்கும்  துன்புண்டா ஆண்டோர்க்கும்  துன்புண்டா
மாள்வார்கள்  மக்கள்தான்  மாறாதா நாள்போதல்
சொல்லும்  தரமல்ல  சோகம்தான்  என்றுமினி
கொல்லும் நிலைதானே  கூறு

இப்படியே  போனாலே  என்செய்வோம்  சொல்லுங்கள்
ஒப்பிடவே  ஏதுண்டா? உண்மையிலே செப்பிடவே
பஞ்சம்  பசிப்பிணி   பரவிடுமே  ஊரெங்கும்
நெஞ்சம்  பதற  நிதம்

எங்கும்போர்  என்றேதான்  ஏங்கும்  நிலைதானே
பொங்கும் செயல்கண்டே  புண்படுமே தங்கமென
வாங்கும்  பொருளெல்லாம்  வானுயர  ஏறவிலை
தாங்கும்  நிலையுண்டா  தான்!

                    புலவர்  சா இராமாநுசம்

Monday, December 31, 2012

ஆங்கிலப் புத்தாண்டே வருக ! –வாழும் அனைவர்க்கும் ஆனந்தம் தருக
ஆங்கிலப்  புத்தாண்டே  வருக ! வாழும்
    அனைவர்க்கும்  ஆனந்தம்  தருக
ஏங்கியே  ஏழைகள்  வாழ குடிசை
    இல்லாமல்  வளமனைச்  சூழ
தாங்கிட  அன்னாரை நீயும் இன்பம்
    நிலையாக  தடையின்றிப்  பாயும்
தீங்கின்றி  கழியட்டும்  ஆண்டே மக்கள்
    தேவைகள்  நிறைவேற  ஈண்டே

இயற்கையின்  சீற்றங்கள்  கண்டே எங்கள்
   இதயமும்  உடைவது  உண்டே
செயற்கையால்  வருவதே  அறிவோம் இனி
   செய்வதை  ஆய்ந்துமே   செய்வோம்
இயற்கையின்   கோபத்தை  நீக்க எம்மின்
    இன்னல்கள்  இல்லாது  போக்க
முயற்சியும்  செய்வாய  ஆண்டே மக்கள்
    முன்னேற  தடையின்றி  ஈண்டே

உழவனும்  அழுகின்றான்  இங்கே அவன்
   உழைத்தாலும்  பலன்போதல்  எங்கே
தழைத்ததா   அவன்வாழ்வு  இல்லை தினம்
    தவித்தவன்  பெறுவதோ  தொல்லை
பிழைத்திட  பருவத்தில்  மாரி வந்து
   பெய்திடச்  தருவாயா  வாரி
செழித்திட  உலகமே  ஆண்டே உடன்
    செய்திட  வேண்டினோம்  ஈண்டே

இல்லாமை   நீங்கிட  வேண்டும் ஏழை
    இல்லாத   நிலையென்றும்  வேண்டும்
கல்லாதார்  இல்லாமை   வேண்டும் கல்வி
    கற்றாரை  மதித்திட  வேண்டும்
கொல்லமை  விரதமாய்  வேண்டும் நற்
    குணங்களும்  வளர்ந்திட  வேண்டும்
எல்லாரும்  வாழ்ந்திட ஆண்டே நீயும்
    ஏற்றது  செய்வாயா  ஈண்டே!

                 புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...