Saturday, December 3, 2011

உணர்வை அணுவேனும் கொண்டாயா?கரைந்தே உண்டிடும்
காக்கையைப் போலவே
விரைந்து ஏதேனும் செய்தாயா-அந்த
விவேகம் தனையேனும் எய்தாயா?

தன்னினம் காத்திட
தன்குரல் எழுப்புமே
உன்னினம் காத்திடச் செய்தாயா-பறவை
உணர்வை அணுவேனும் எய்தாயா?

கூட்டுள குஞ்சுக்கும்
கொத்திடும் அலகாலே
ஊட்டிடும் அன்பினைக் கற்றாயா-பறவை
உணர்வை அணுவேனும் பெற்றாயா?

கன்றதைக் காணாது
கத்திடும் தாய்பசு
ஒன்றது பாசத்தைக் கண்டாயா- அந்த
உணர்வை அணுவேனும் கொண்டாயா?

வளர்த்திடும் நாய்கூட
வாலாட்டி நன்றியாம்
உளத்தினைக் காட்டுமே கண்டாயா- அந்த
உணர்வை அணுவேனும் கொண்டாயா?

தட்டினால் மாடுகள்
தானாகப் பாதையில்
ஒட்டியே செல்லுமே கண்டாயா- அந்த
உணர்வை அணுவேனும் கொண்டாயா?

           புலவர் சா இராமாநுசம் 

Friday, December 2, 2011

தீதும் நன்றும் பிறர் தம்மால்திரைகடல் ஓடு என் றாரே
   திரவியம் தேடு  என் றாரே
குறையிலா வழியில் அதைப் பெற்றே
   கொள்கையாய் அறவழி தனைக் கற்றே
நிறைவுற அளவுடன் நீதி சேர்ப்பீர்
   நிம்மதி அதனால் வரும் பார்ப்பீர்
கறையிலா கரமென புகழ்ப் பெறுவீர்
   கண்ணியம் கடமை என வாழ்வீர்

வையம் தன்னில் வாழ் வாங்கும்
   வாழின்! வாழ்வில் பெய ரோங்கும்
செய்யும் எதையும்  தெளி வாகச்
   செய்யின் வருவது களி வாகப்
பொய்யோ புரட்டோ செய் யாமல்
   போலியாய் வேடம் போடா மல்
ஐயன் வழிதனில் செல் வீரே
   அன்பால் உலகை வெல் வீரே!

தீதும் நன்றும் பிறர் தம்மால்
   தேடி வாரா! வருதோ நம்மாலே
நோதலும் தணிதலும் அவ் வாறே
   நவின்றனர் முன்னோர் இவ் வாறே
சாதலின் இன்னா திலை யென்றே
   சாற்றிய வள்ளுவர் சொல் ஒன்றே
ஈதல் இயலா நிலை என்றால்
  இனிதாம் அதுவும் மிக என்றார்!

எல்லா மக்களுக்கும் நலம் ஆமே
   என்றும் பணிவாம் குணம் தாமே
செல்வர் கதுவே பெருஞ் செல்வம்
   செப்பிடும் குறளாம் திருச் செல்வம்
நல்லா ரவரென புகழ் பெற்றே
   நாளும் நாளும் வளம் உற்றே
பல்லார் மாட்டும் பண் பாலே
  பழகிட வேண்டும் அன் பாலே

                              புலவர்  சா இராமாநுசம்

Wednesday, November 30, 2011

கவிதனில் உயர்ந்த கம்பனைப் பாரீர்கவிதனில் உயர்ந்த கம்பனைப் பாரீர்
      கற்பனை வளமது கற்றிட வாரீர்!
புவிதனில் பலரும் படித்திட அவரே
      புலமைக்கும் நிகரென உண்டா? எவரே
செவிதனில் இசையென விழுகிற சந்தம்
     செம்மொழி உளவரை அதற்கிலை அந்தம்
நவிலவும் எளிய நற்றமிழ் சொற்கள்
      நாவலர் சுவைக்கும் கற்கண்டாம் கற்கள்!

ஆயிர மாயிரம் பாடலைப் பாடி
      அரியநல் உவமைகள் ஆய்வுற நாடி
பாயிரம் தம்மொடு அமைந்த காவியம்!
       பண்பினை விளக்கும் பைந்தமிழ் ஓவியம்!
தாயென போற்றும் தமிழ்மொழி தன்னில்
       தன்னிக ரற்றுத் தழைப்பதை எண்ணில்
வாயினில் விளக்கிட வார்த்தைகள் இன்றே!
       வாழும் இலக்கியம் தனிலிதும் ஒன்றே

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும்
      கவிதை வரையும் வல்லமை புரியும்!
உம்பரும் போற்றும் உன்னதக் கதையே
      ஒருவனுக் கொருத்தியாம் சாற்றும், இதையே
அன்பர்கள் ஆய்ந்து குறைநிறை காண்பதும்
      அடிக்கடிப் பட்டி மன்றங்கள் பூண்பதும்
இன்புற நடைபெறும் ஏற்புடை நிகழ்ச்சியே!
      எல்லையில் கம்பனின் கற்பனை புகழ்ச்சியே

தலைமுறை பலவும் தாண்டிய போதும்
      தன்னிலை தன்னில் அழிவிலா தேதும்
நிலைபெற நின்றே இன்றும் வாழும்
      நிகரில் இலக்கிய மணத்தொடு சூழும்
கலைமிக கற்பனைக் களஞ்சியம் என்றே
     கற்பவர் கற்றவர் போற்றிட நன்றே
மலையென மக்கள் மனதில் தங்கிட
     மறையாது என்றும் மகிழ்ச்சி பொங்கிடும்

                        புலவர் சா இராமாநுசம்

Monday, November 28, 2011

சொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    எவரலும் காக்க இயலாது! அன்னோன்
கெடுப்பாரும் இன்றியே தானேதான் கெடுவான்
    கெட்டவன் அந்தோ! துயரமே படுவான்
துடுப்பதை இழந்திட்ட பரிதாப தோணி
    துணையின்றி தனியாக உள்ளமே நாணி
விடுப்பானே ஆண்டிடும் உரிமையைக் கூட
    வேதனை மண்டியே மனதினில் ஓட

தம்மிற் பெரியாரைத் தமராகக் கொண்டே
    தன்னரசை நாள்தோறும் நடத்திடக் கண்டே
விம்மிதம் கொள்வாரே மக்களும் அவன்பால்
    விருப்பியே புகழ்வாரே வியந்துமே அன்பால்
இம்மென்றால் சிறைவாசம் ஏன்னெறால் வனவாசம்
    இல்லாது ஆள்கின்ற மன்னர்பால் விசுவாசம்
உம்மென்று இல்லாமல் உவகையில் காட்டுவார்
    ஒருவருக் கொருவர் உற்சாகம் ஊட்டுவார்

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல வேந்தன்
    சரியாக நீதியில் ஆண்டிட மாந்தர்
அமரின்றி அனைவரும் அமைதியில் வாழ்வார்
    ஆண்டவன் அவனென்று ஆனந்தம் சூழ்வார்
தமரென்றே எல்லோரும் தம்முள்ளே உறவே
    தக்கது என்பாரே! அறியாராம் கரவே
இமயோரும் காணத இன்பத்தைப் பெறுவர்
    இறைவாநீ என்றுமே மன்னனை தொழுவர்!

பல்லோரின் பகையாலே பாதகம் இல்லை
      பலமிக்க  மன்னர்க்கு வாராது தொல்லை
நல்லோரின் துணையின்றி நாடாள முயலா
      நல்லது கெட்டது அறிந்திட இயலா
வல்லவ ரானாலும் வழிதவறிப் போக
      வாய்ப்புண்டு அதனாலே தீமைகள் ஆக
சொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே
      பெரிதென்று அறிவீரே அதற்கில்லை இணையே!
        
                       புலவர் சா இராமாநுசம்

Sunday, November 27, 2011

வாரீர் உலகத் தமிழர்களே


 இன்றவர் பிறந்த ஒருநாளாம்-நல்
     ஈழ மக்கள் திருநாளாம்!
குன்றென கொண்ட மனத்திண்மை-அவர்
    குமுறும் எரிமலை நனிஉண்மை!
என்றுமே அவர்தான் மாவீரர்-மிக
    இனவெறி சிங்களக்கொடும் பாவிநீர்
ஒன்றே ஒன்றாம்  உணர்வீரே-அவர்
    ஒருநாள் மீண்டும் வருவாரே

வீரம் என்றும் அழிவதில்லை-மா
     வீரர் அழிந்தது மெய்யில்லை!
நேரம் வரும்போ துலகறியும்-அந்த
      நிலமை எதிர்நாள்! அதுதெரியும்!
ஆரம் சூட்டி வரவேற்கும்-மா
    அகிலம் போற்ற புகழ்சேர்க்கும்
வாரீர் உலகத் தமிழர்களே-மா
     வீரரை வாழ்த்துவோம் வாழ்கயென
     
          புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...