Friday, January 24, 2014

எடுக்க வேண்டும் நடவடிக்கை-ஒன்றாய் எதிர்போம் கச்சத்தீவின் உடன்படிக்கை!மீண்டும் மீண்டும் வருகின்றான்-நம்
மீனவர் வலையை அறுக்கின்றான்!
தூண்டில் மீனாய் துடிக்கின்றார்-நாளும்
துயரக் கண்ணீர் வடிக்கின்றார்!
ஈண்டும் ஆட்சி மாறியதே-ஆனால்
எனினும் பழைய காட்சியதே!
வேண்டும் துணிவு! அதுவொன்றே-அவர்
வேதனை போக்கும் வழியின்றே!

எத்தனை தரம்தான் போவார்கள்-சிங்ளர்
எடுபிடி யாக ஆவார்கள்!
மொத்தமாய் போய்விடும் தன்மானம்-அங்கே
மேலும் போவது அவமானம்!
புத்தியில் அவருக்கு கோளாரே-புனித
புத்தரே சொல்லினும் கேளாரே!
எத்தராம் சிங்களர் திருந்திடவே-அங்கே
எதிர்க்க நம்படை நிறுத்திடுவீர்!

ஆறினால் சோறு பழஞ்சோறே-ஆளும்
அம்மா அவர்க்குக் கதியாரே!
கூறினால் மட்டும் போதாதே-அழுத்தம்
கொடுப்பீர் மத்திக்கி, இப்போதே!
மீறினால் வருமே போராட்டம்-என
மத்தியில் ஆள்வோர் உணரட்டும்!
மாறினால் அவர்கள் மாறட்டும்-இன்றேல்
மக்களை அரசே திரட்டட்டும்!

பிடித்த மீனையும் அள்ளுகின்றான்-படகை
பிணைத்து இழுத்துத் தள்ளுகின்றான்!
அடித்துச் சிறையிடல் தொடர்கதையா-இந்த
அவலம் மீனவன் தலைவிதியா!
தடுக்க மத்திக்கு வக்கில்லை-ஆளும்
தமிழக அரசே உடன்ஒல்லை!
எடுக்க வேண்டும் நடவடிக்கை-ஒன்றாய்
எதிர்போம் கச்சத்தீவின் உடன்படிக்கை!


புலவர் சா இராமாநுசம்

Tuesday, January 21, 2014

பாலுண்டே பழமுண்டே பொங்கல் வைக்க –புதிய பச்சரிசி உண்டா பொங்கல் வைக்க!புத்தாண்டே   நீவந்து  பிறந்து  விட்டாய் –பொங்கும்
      பொங்கலெனும்  தைமகளாய்  இல்லம்  தொட்டாய்!

வாழ்த்தியுனை   வரவேற்க  மனமே   இல்லை –இன்றே
        வரலாறு   காணாத  வறட்சி   தொல்லை!
ஆழ்தியெமை  சென்றதாம்  சென்ற  ஆண்டே –இங்கே
       ஆடுமாடும்    மேய்வதற்கா ? பயிரும்  ஈண்டே!

    
பாலுண்டே   பழமுண்டே  பொங்கல்  வைக்க –புதிய
    பச்சரிசி   உண்டா   பொங்கல்  வைக்க!
நாளுண்டு  வாழ்வதற்கு  உண்டா  உணவும் –வரும்
     நாள்தோறும் காண்போமே  துயரக்  கனவும்!

      
சாலையிலே  தொழிலாளி  முடங்கி  விட்டான் –நாள்
     முழுவதுமே  வேலையின்றி  துயரப்  பட்டான்!
ஆலையெலாம்  ஓடாது  புழுதி  படிய – மக்கள்
      அனைவருமே  ஓயாது  அழுது  மடிய!

சாலையோரம்  வாழ்பவனைப்  பார்க்கும்  போதும்-அவன்
      சாக்குப்பை  பாய்தண்ணில்  படுக்கும்  தீதும்!
மாலைமுதல்  காலைவரை  பனியில்  நடுங்க –காண்போர்
       மனமெல்லாம்  ஐயகோ!  துயரில்  ஒடுங்க!

தைபிறந்தால்  வழிபிறக்கும்  முன்னோர்  கூற்றே –அதை
       தைமகளே  இனியேனும்  நீயும்   ஏற்றே!
கைகொடுத்து  காப்பாற்ற   வேண்டும்    தாயே-செய்யின்
      கரம்கூப்பி  தொழுவோமே  தெய்வம்  நீயே!

வற்றாது  காவிரிநீர்  வருதல்  வேண்டும் –மேலும்
       வான்மழையும்   பருவத்தே  தருதல்   வேண்டும்!
கற்றார்க்கும்  ஏற்றபணி  கிடைக்க  வேண்டும் – நாளும்
       கல்லாமைப்  படிப்படியாய் அகல வேண்டும்!

மின்வெட்டு  முற்றிலுமே  நீங்கச்  செய்வாய் –ஏழை
      முகம்மலர  பசியின்றி   வாழச் செய்வாய்!
புண்பட்டுப்  போனோமே  சென்ற  ஆண்டே – நல்ல
     புகழ்பெற்றுப்   போவாயா  ?  இந்த  ஆண்டே!

உங்கள்  அனைவருக்கும்  என் அன்பான இனிய  புத்தாண்டு
பொங்கல் நல்  வாழ்த்துக்கள்!

                                  புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...