Saturday, June 21, 2014

கோட்டையை ஆள்வோர் மட்டுமே-இக் கொடுமையை நீக்க இயலாதே!இனிய உறவுகளே ! வணக்கம் !

நேற்று நான் எழுதிய பதிவைப் படித்து விட்டு தெருக்களில் குப்பைகள் சிதறியும் ,மண்டியும் கிடப்பதற்குக்
காரணம் ,அரசு மட்டுமல்ல ,மக்களின் பொறுப்பற்ற( சிலரின்) செயலும்
ஆகும் என்பதைப் பலரும் சுட்டியதன் விளைவே இக்கவிதை!

எண்ணிப் பாரும் நல்லோரே-நல்
இதயம் படைத்த பல்லோரே
கண்ணில் படுவது வீதியிலே-எங்கும்
காகித பிளாஸ்டிக் குப்பைகளே!
விண்ணில் காற்றில் பறந்திடுமே-வந்து
விரைவாய் முகத்தில் மோதிடுமே!
திண்ணிய முடிவும் எடுப்பீரா-குப்பை
தெருவில் போடவும் தடுப்பீரா!

வீட்டை சுத்தம் ஆக்குதும்-அள்ளி
வீதியில் குப்பையைத் தேக்குவதும்!
கேட்டை நாமே தேடுவதாம்-பிறர்
கேட்பினும் , அவரைச் சாடுவதாம்!
நாட்டைக் கெடுக்கும் நோயன்றோ-தொற்று
நோய்கள் பிறக்கும் தாயன்றோ!
கோட்டையை ஆள்வோர் மட்டுமே-இக்
கொடுமையை நீக்க இயலாதே!

தொட்டி இருக்கும் ஆனாலும்-கையில்
தூக்கிக் கொண்டு போனாலும்!
எட்டி நின்றே குப்பைகளை-தூக்கி
எறிந்து விட்டுச் செல்வாரே!
தட்டிக் கேட்பின் வைவாரே-அந்த
தவறே நாளும் செய்வாரே!
கொட்டிய குப்பையோ உதறிவிட-மிக
குறையின்றி வீதியில் சிதறிவிடும்!

சொன்னால் செய்பவர் சிலபேரே-எவர்
சொல்லினும் கேளார் பலபேரே!
தன்னால் உணர்பவர் இருப்பாரே-சிலர்
தனக்கென என்றும் போவரே!
முன்னாள் அனுபவம் பலவற்றை-இங்க
முறையாய் அதிலே சிலவற்றை!
என்னால் ஏதோ முடிந்தவரை-ஐயா
எழுதினேன் தருவீர் கருத்துரையே!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, June 18, 2014

தொற்று நோயும் வருமுன்னே-எண்ணி தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னைஎங்கு காணிலும் குப்பையடா-நம்
   எழில்மிகு சென்னை காட்சியடா
பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில்
    போடுவார் மேலும் எட்டியடா
தங்கும் மழையின் தண்ணீரும்-செல்ல
   தடைபட அந்தோ! மிகநாறும்
இங்கே எடுக்க ஆளில்லை-அதை
   எடுத்துச் சொல்லியும் பலனில்லை

பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
      பரவிக் கிடப்பது பெருந்தொல்லை
வேதனை  தீரும் வழிகாண்பீர்-எனில்
      வீணே நீரும் பழிபூண்பிர்
சோதனை போல கொசுக்கடியே-எடுத்து
      சொல்ல இயலா நெருக்கடியே
நாதம் இசைத்தே படைபோல-எமை
      நாடி வருமோர் தினம்போல

தொற்று நோயும்  வருமுன்னே-எண்ணிhd
     தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை
மற்றது பின்னர் ஆகட்டும்-குப்பை
     மலையென கிடப்பது போகட்டும்
குற்றம் சொல்வது  நோக்கமல-இது
     குத்தும் கவிதை ஆக்கமல
வெற்றுச் சொல்லும் இதுவல்ல-பட்ட
     வேதனை விளைவாம் இதுசொல்ல

அண்மை காலமாய் இவ்வாறே-ஏனோ
    அடிக்கடி நடப்பது எவ்வாறே
உண்மை எதுவோ வேண்டாமே-உரியோர்
    உணர்ந்தால் போதும் ஈண்டாமே
நன்மை ஒன்றே  உடன்தேவை-மா
     நகர ஆட்சிக்கு இப்பாவை
சொன்னேன் ஐயா! தவறில்லை-ஆவன
    செய்வீர் வேறு வழியில்லை!

       புலவர் சா இராமாநுசம்

மீள்பதிவு
 

Monday, June 16, 2014

பிறப்பு வாழ்வில் ஒருமுறைதன்-மேலும் இறப்பு வாழ்வில் ஒருமுறைதான்!பிறப்பு வாழ்வில் ஒருமுறைதன்-மேலும்
இறப்பு வாழ்வில் ஒருமுறைதான்!
இருப்பது நாமே எதுவரையில்-இதை
எவரும் அறியார் இதுவரையில்!
சிறப்பு பெறநாம் வாழ்ந்தோமா-என
சிந்தனை தன்னில் ஆழ்ந்தோமா!
வெறுப்பா மற்றவர் நமைநோக்க-பெரும்
வேதனை வந்து நமைத்தாக்க!

எண்ணிப் பாரீர் மனிதர்களாய்-பல்
இதயம் வாழ்த்த புனிதர்களாய்!
மண்ணில் வாழ்ந்த காலத்தே-பிறர்
மனதில் திகழ ஞாலத்தே!
கண்ணிய முடனே வாழ்ந்தோமா-நம்
கடமை அதுவென ஆய்ந்தோமா!
பண்ணிய பாபம் ஏதுமிலை-எனில்
பயப்பட வாழ்வில் எதுவுமிலை!

மரணம் நம்மைத் தேடிவர-கேட்ட
மக்கள் அனைவரும் ஓடிவர!
வரமே பெற்றோம் நாமென்றே-அங்கு
வந்தோர் வாழ்த்த மிகநன்றே!
கரமே குவித்துக் கண்ணீரை-அவர்
காணிக்கை யாக்க பண்ணீரேல்!
தரமாம் உமது வாழ்வாகும்-பெயர்
தரணியில் என்றும் நிலையாகும்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...