Saturday, October 13, 2012

பாயெடுத்து போட்டவுடன் துயின்ற நிலைதான்-நான் பலநாட்கள் ஆனதய்யா பரிவே யிலைதான்                புலவர் கல்லுரி விடுதியில் தங்கிய
           போது, இரவில் ஏற்பட்ட அனுபவம்.....!


பாயெடுத்து போட்டவுடன் துயின்ற நிலைதான்-நான்
          பலநாட்கள் ஆனதய்யா பரிவே யிலைதான்
  நோயெடுத்து போனதய்யா தூங்கா உடலும்-உடன்
          நோக்குகின்ற நேரத்தில் மறைந்தே விடலும்
  வாயெடுத்து  சொல்லுகின்ற கொடுமை யன்று-தினம்
           வாட்டுகின்றீ்ர் வருந்துகிறோம் தீரல் என்று
  தாயெடுத்து அணைக்காத குழந்தை போல-ஐயா
         தவிக்கின்றோம் மூடுமய்யா வாயை சா

  நித்தம்தான் வருகின்றீர் கண்டால் உடனே-ஏனோ
           நீங்கு கீன்றீர் விரைவாக உமது இடமே    
  சித்தம்தான் யாமறியோம் செய்யும் தொண்டே-முடிவாக
         செப்பினால்  நாங்களும் அதனைக் கண்டே
  தத்தம்தான் செய்திடுவோம் உயிரைக் கூட-வீண்
           தகராறு வேண்டாமே வயிறும் மூட
  இரத்தம்தான் தேவையெனில் எடுத்துக் சொல்லும்-வந்து
         இரவெல்லாம் வருவதை நிறுத்திக் கொள்ளும்


   மடித்தயிடம் மேலுறையின் சந்தும் பொந்தும்-நீங்கள்
            மறைந்துறையப் புகலிடமே உமக்குத் தந்தும்
   கடித்தயிடம் தெரியாமல்  துளியும் இரத்தம்-அட்டா
            கசியாமல் கடிப்பதுதான் விந்தை நித்தம்
    அடிக்கடியே வருகின்றீர் அந்தோ தொல்லை-மேலும்
            அடுக்கடுக்காய் வருகின்றீர் உண்டா எல்லை!
    படித்தியது போதுமினி க் காலி செய்வீர்-இன்றேல்
             பழிவந்து சேருமய்ய மூட்டை யாரே!


                                    புலவர் சா இராமாநுசம்

Thursday, October 11, 2012

மின்சாரக் வெட்டதனை குறைப்பீரம்மா-கட்டண மின்னுயர்வே வாட்டுவது, போதுமம்மா
மின்சார சுடுகாடு இனிமேவேண்டா-வீடே
     மின்னின்றி சுடுகாடாம் ஆமேஈண்டே
பொன்போல கட்டணமே விண்ணைமுட்ட-மற்ற
     பொருள்களின் விலையேற்றம் கண்ணீர்சொட்ட
என்செய்வர் மக்களும் அம்மாயம்மா-மேலும்
     அடிமேலே அடியா சும்மாசும்மா!
மின்சாரக் வெட்டதனை குறைப்பீரம்மா-கட்டண
     மின்னுயர்வே வாட்டுவது, போதுமம்மா!

நாதியின்றி வாழ்பவர் நாட்டிலின்றே-இன்று
    நடுத்தர குடும்பங்கள் பாவமன்றே!
வீதியிலே இறங்கிவர இயலாரென்றே-இந்த
    வேதனையா? எண்ணுங்கள்! செய்வீர்நன்றே!
பாதிக்கும் பலவகையில்! பாருமம்மா-அப்
    பாவிகளின் துயரத்தைத் தீருமம்மா!
நீதிக்கும் குரல்கொடுக்க துணியமாட்டார்-இரவு
     நிம்மதியும் இல்லாமல் உறங்கமாட்டார்!

பணக்காரர் இதுபற்றி  கவலைகொள்ளார்-இங்கே
    பரமயேழைக்கும் இலவசம்! தொல்லையில்லார்
கணக்காக செலவுதனை திட்டமிட்டும்-மாதக்
     கடைசியிலே கடன்வாங்கித் துயரப்பட்டும்
பிணமாக உயிரோடு நடக்கப்பலரும்-வாழும்
    பேதைகளாம் நடுத்தரமே! பொழுதாபுலரும்!?
குணமென்னும் குன்றேறி நின்றாரவரே!-அவர்
    கொதித்தாலே எதிர்வந்து நிற்பாரெவரே!

வெந்துவிட்ட  புண்ணிலே வேலும்பாயா-மேலும்
    வேண்டுமா?முதல்வரே! நாளும் ஆய!
நொந்துவிட்டார் ஏற்கனவே அறிவீர்நீரே-அந்த
     நோக்காடே தீரவில்லை! இதுவும்வேறே
வந்துவிட்டால் துயர்நீங்க வழியேயில்லை!-எதிர்
    வரலாற்றில் என்றென்றும் பழியேயெல்லை!
கந்துவட்டி மேலாகும் நாளுமுயர்வே-எம்மைக்
    கடங்காரன் ஆக்காதீர் கருணைகாட்டும்!

மௌனம்தான் சம்மதமே என்றார்போல-உங்கள்
    மௌனம்தான் பதிலின்று! நன்றாசால?
கவனந்தான் காட்டுவீர்! உடனேயிதிலே-நிலமை
   கட்டுமீறும் முன்பாக மாற்றமதிலே
சிவனென்றை இனிமேலும் இருத்தல்வேண்டா-மக்கள்
    சினம்தன்னை நனிமேலும் தூண்டவேண்டா
எவனென்ன சொல்வதெனும் எண்ணம்நீங்க-உடன்
   ஏதேனும் செய்வீராம் நாடும்ஓங்க!
    

                        புலவர் சா இராமாநுசம்

குறிப்பு - இன்றைய சூழ்நிலைக்கேற்ப கவிதையில்
         சில சொற்கள் மாற்றப்பட்ட மீளபதிவு!
   

Tuesday, October 9, 2012

பிணியிது! மருந்திது! செயல்படுவீர்!-தஞ்சைப் பெருநிலம் அழியவா வழிவிடுவீர்!?
ஒருநாள் வேலை நிறுத்தமே-நாம்
   உடனடி செய்வது பொறுத்தமே!
இதுநாள் வீணே போயிற்றே-தமிழ்
   இனமே விரைந்து செயலாற்றே!
வெறிநாய் கன்னடர் உணரட்டும்-படை
   வீரர்கள் அணியென திரளட்டும்!
வருநாள் உலகம் அறியட்டும்-இறுதி
    வாழ்வா சாவா? தெரியட்டும்!

கூடங் குளமாய் ஆகட்டும்-மக்கள்
   கொதித்து ஊர்வலம் போகட்டும்!
பாடம் அவர்களும் கற்கட்டும்-அதைப்
   பார்த்தே வடபுலம் மிரளட்டும்!
வேடம் கலைந்திட சிலரிங்கே-தலை
  வெட்கிக் குனிய வருமிங்கே
நாடகம் முடியும் அப்போதே-இதை
   நடத்துவோம்! உண்மை! தப்பாதே!

இனவழி அனைவரும் ஒன்றாக-நாம்
    இணைந்தால் போதும் நன்றாக!
மனவழி கட்சிகள் மறையட்டும்!-தமிழ்
   மரபைக் காத்திட பறைகொட்டும்
சினவழி முடிவு எடுக்காமல்-நன்கு
    சிந்தித்து எதையும் கெடுக்காமல்
அனைவ ஒன்றென செய்வீரே-பெரும்
    அறப்போர்! நடத்திடின் உய்விரே!

வணிகர் மாணவர் தொழிலாளி-உணவு
   வழங்கும் உழவர்! இன்னபிறர்
அணியென பெண்ணினம் எழுமானால்-உலக
    அரங்கில் அக்குரல் விழுமானால்
பணிந்திடும் மத்தியும் அப்போதே-நாள்
   பார்ப்பதா..?புறப்படும்! இப்போதே
பிணியிது! மருந்திது! செயல்படுவீர்!-தஞ்சைப்
    பெருநிலம் அழியவா வழிவிடுவீர்!?

                                    புலவர் சா இராமாநுசம்
Sunday, October 7, 2012

அந்தோ மறைந்தீர் அன்பர் மணியே -துயர் அஞ்சலி செய்திட கண்ணீர் வழியே
அந்தோ மறைந்தீர் அன்பர் மணியே -துயர்
  அஞ்சலி செய்திட  கண்ணீர் வழியே
சிந்திட துளிகளைச் சென்றீர்  எங்கே -உடன்
  செப்புவீர் நண்ப! செயலற்று இங்கே
வெந்திடப் பலரும் வேதனைத் தீயில் -உமக்கு
  விரைந்துமே திறந்ததேன் மரண வாயில்
தந்தனை உயிரை தவித்திட உறவே -யாரும்
   தாங்கிட இயலா உமது மறைவே!

பதிவர் திருவிழா  பாங்குற நடைபெற -அன்று
   பார்த்தவர் அனைவரும் பாராட்டி விடைபெற
மதிய உணவினை மாண்புற  அளித்தீர் வந்தவர்
    மலர்முகம் கண்டே உள்ளம் களித்தீர்
நிதியதில் உமதுப் பங்கும் உண்டே உம்
   நிகரில்  உழைப்பே மறவாத் தொண்டே
விதியென ஒன்றும்  உண்டென அறிவேன் அதன்
   விளைவென உணர்ந்தா ? ஆறுதல் பெறுவேன்

வந்தவர் எல்லாம் போவது உண்மை இது
   வாழ்வியல் ! உலகில் ! இயற்கைத் தன்மை
சிந்தனை எனக்குத் தோன்றிய போதும் நெஞ்சில்
   செப்பிட இயலா துயரே மோதும்
உந்தனை இழந்த உணர்வே மிஞ்சும் என்றும்
    உள்ளத்தில்  உமது  நினைவே துஞ்சும்
வந்தனை செய்வோம் வாழும் வரையில் பதிவர்
    வரலாற்றில் சிறப்பிடம் பெற்றீர் வலையில்!

                        புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...