Thursday, December 28, 2017

கவிதனில் உயர்ந்த கம்பனைப் பாரீர் கற்பனை வளமது கற்றிட வாரீர்!கவிதனில் உயர்ந்த கம்பனைப் பாரீர்
      கற்பனை வளமது கற்றிட வாரீர்!
புவிதனில் பலரும் படித்திட அவரே
      புலமைக்கும் நிகரென உண்டா? எவரே
செவிதனில் இசையென விழுகிற சந்தம்
     செம்மொழி உளவரை அதற்கிலை அந்தம்
நவிலவும் எளிய நற்றமிழ் சொற்கள்
      நாவலர் சுவைக்கும் கற்கண்டாம் கற்கள்!

ஆயிர மாயிரம் பாடலைப் பாடி
      அரியநல் உவமைகள் ஆய்வுற நாடி
பாயிரம் தம்மொடு அமைந்த காவியம்!
       பண்பினை விளக்கும் பைந்தமிழ் ஓவியம்!
தாயென போற்றும் தமிழ்மொழி தன்னில்
       தன்னிக ரற்றுத் தழைப்பதை எண்ணில்
வாயினில் விளக்கிட வார்த்தைகள் இன்றே!
       வாழும் இலக்கியம் தனிலிதும் ஒன்றே

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும்
      கவிதை வரையும் வல்லமை புரியும்!
உம்பரும் போற்றும் உன்னதக் கதையே
      ஒருவனுக் கொருத்தியாம் சாற்றும், இதையே
அன்பர்கள் ஆய்ந்து குறைநிறை காண்பதும்
      அடிக்கடிப் பட்டி மன்றங்கள் பூண்பதும்
இன்புற நடைபெறும் ஏற்புடை நிகழ்ச்சியே!
      எல்லையில் கம்பனின் கற்பனை புகழ்ச்சியே

தலைமுறை பலவும் தாண்டிய போதும்
      தன்னிலை தன்னில் அழிவிலா தேதும்
நிலைபெற நின்றே இன்றும் வாழும்
      நிகரில் இலக்கிய மணத்தொடு சூழும்
கலைமிக கற்பனைக் களஞ்சியம் என்றே
     கற்பவர் கற்றவர் போற்றிட நன்றே
மலையென மக்கள் மனதில் தங்கிட
     மறையாது என்றும் மகிழ்ச்சி பொங்கிடும்

                        புலவர் சா இராமாநுசம்

Sunday, December 24, 2017

சின்னத்தை வைத்துவெற்றி பெறுவோம் என்றே-எண்ணி செப்பியவர் வாயினிலே மண்ணாம் இன்றேசின்னத்தை வைத்துவெற்றி பெறுவோம் என்றே-எண்ணி
செப்பியவர் வாயினிலே மண்ணாம் இன்றே
கன்னத்தில் கைவைத்து கவலைப் படவும்-அந்தோ
கலங்கிடுவோர் உள்ளத்தை ஏக்கம் தொடவும்
எண்ணத்தை இனியேனும் மாற்றிக் கொள்ளல்-எதிர்நாள்
ஏற்றதென கட்சிகளே அனைத்தும் உள்ளல்
திண்ணமுற காட்டுகின்ற காட்சி தானே-இடைத்
தேர்தலிலே ஆர்கேநகர் சாட்சி தானே


புலவர் சா இராமாநுசம்

Friday, December 22, 2017

மேதினி திரளுமே அவரின் பின்னால்-நாளும் மேன்மேலும் வளருமே புகழும் தன்னால்!

ஏதிலார் குற்றத்தை ஆய்தல் போல -வாழ்வில்
எவனொருவன் தன்குற்றம் ஆய்ந்து சால
தீதிலா வாழ்வுதனை நடத்தல் நன்றாம்-அதுவே
திருக்குறள் சொல்லும் நீதி ஒன்றாம்
ஓதிய வள்ளுவன் உரையைக் கொண்டே-தமது
ஊர்மெச்சி பாராட்ட செய்யின் தொண்டே
மேதினி திரளுமே அவரின் பின்னால்-நாளும்
மேன்மேலும் வளருமே புகழும் தன்னால்


புலவர் சா இராமாநுசம்

Monday, December 18, 2017

எருமாட்டின் மீதுமழைப் பெய்தல் போல- ஏன் இருக்கின்றீர்! வெறுக்கின்றார் ! மக்கள் சால!எங்கேயா அரசாங்கம்?  இருக்கு  தென்றே –பலர்
    எண்ணமிட இடைத்தேர்தல் தன்னில் சென்றே
பங்காற்ற அமைசர்களோ கொடுமை  காணீர்-ஏழைப் 
  படும்துயரை சொல்லியழும் கண்ணீர்  பாரீர்
தங்காயம் வாடாமல் காரில்  போகும் – கட்சித்
     தலைவர்களே! எண்ணுமிது!  வீணா ! ஆகும்!
பொங்காத மக்களையும் பொங்கச் சொல்லும் –எனில்
     புரிந்துடனே தீர்க்கவழி தன்னை  உள்ளும்!
    
 எருமாட்டின்  மீதுமழைப் பெய்தல்  போல- ஏன்
     இருக்கின்றீர்! வெறுக்கின்றார் ! மக்கள் சால!
திருநாட்டில் யாராலே இந்தப்  நிலமை-பதுக்கல்
     திருடனுக்கே அரசேதான் கொடுக்கும்  வளமை
வருநாளில் எப்பொருளும்  வாங்க  இயலா-ஏழை
     வாடுகின்றான்! தேடுகின்றான் !வழியே புயாலய்
உருவானால் என்செய்வீர்! போவீர் எங்கே – இதை
     உணராது இருப்பீரேல் நடக்கும்  இங்கே!
 
அளவின்றி  விலைவாசி  உயர நாளும்- ஆட்சி
    அதிகாரம் சுயநலமே  குறியாய்  ஆளும்
வளமான வாதிகளாய்  வலமே வருவீர்- மக்கள்
     வாய்மூடி யிருந்தாலும் பாடம் பெறுவீர்!
களமாகும் வருகின்ற தேர்தல் காட்டும்-  உடன்
     கைகொடுக்க  ஏற்றதொரு திட்டம் தீட்டும்!
உளமறிய உண்மையிது! உணர்தல்  நன்றே!-ஏதோ
      உரைத்திட்டேன் வேதனையை நானும்  இன்றே!
                            புலவர்  சா இராமாநுசம்

Friday, December 15, 2017

எதிலும் தெளிவே காணோம்!-விலை ஏற்றம் உயர்வே! நாணோம்!
போகப் போகத் தெரியும் –தாமரைப்
பூவின் வாசம் புரியும்
ஏகம் இந்தியா என்றே- நிலை,
இருக்குமா ! இல்லையா !நன்றே!
சோகம் தீரும் என்றார்!-உறுதி
சொல்லி அவரும் நின்றார்!
தாகம் தீர வில்லை-மேலும்
தருவ தென்னவோ தெல்லை!

பானை சோறு பதமே- நாம்
பார்கு மந்த விதமே
ஆன தய்ய நன்றே!-நடக்கும்
ஆட்சி முறையும் இன்றே!
போன போக்கு போன்றே-நீரும்
போவ தேனோ இன்றே
கானல் நீரா ஐய்யா-மக்கள்
கண்ட கனவு பொய்யா

எதிலும் தெளிவே காணோம்!-விலை
ஏற்றம் உயர்வே! நாணோம்!
பதிலும் முறையாய் இல்லை-போகும்
பாதை நீங்காத் தொல்லை!
மதில்மேல் பூனை ஆக- மக்கள்
மனமே மயங்கிப் போக,
விதியே இதுதான் போலும்-என்ற
வேதனை நாளும் மூளும்!

புலவர் சா இராமாநுசம்

Monday, December 11, 2017

முகநூலில் வந்தன!ஒக்கி’ புயலில் சிக்கி குமரி மாவட்டம், நீரோடி கிராமத்தில் மட்டும் 36 மீனவர்கள் இறந்துள்ளதாக பதாகை வைக்கப்பட்டுள்ளது. என்ற செய்தி அறிந்து
உள்ளம் மிகவும் வருந்துகிறது அவர்கள் ஆன்மா
சாந்தி பெற இறைவனை வேண்டுகிறேன் உடனடியாக அரசு அவர்கள் குடும்பம் நலமுற வாழ ஆவன செய்ய வேண்டுகிறோம்

ஓகி புயலால் மராட்டியத்தில் தவிக்கும் தமிழக மீனவ மக்களுக்கு கேரள அரசு உதவி!-செய்தி!ஆனால் தமிழக அரசோ இங்கே இடைத்
தேர்தலில் , தாரை தப்பட்டை ஒலிக்க ஒட்டு வேட்டை ஆடுகிறது இதைவிட கேவலம் உண்டா

உறவுகளே!
சன் டி வி ஒளிபரப்பும் இரண்டு தொடர்களுக்கு(விநாயகர், அழகு) பரிசு தினமும் ஆயிரம் நேயர்களுக்கு தருவதாக ஒலிபரப்புவதை அறிவீர்கள்! ஆனால் இதுவரை யாரும் பெற்றதாகத்
தெரியவில்லை! உங்களில் யாரேனும் பெற்றிருந்தால் இங்கே குறிப்பிட வேண்டுகிறேன்

ஆசை என்பது அளவற்றது !
நடந்து போறவன் சைக்கில்
வாங்க ஆசைப்படுவான் சைக்கில் போறவன் மோட்டார் சைக்கில் வாங்க ஆசைப்படுவான் மோட்டார் சைக்கில்காரன் கார் வாங்க ஆசைப்படுவான் ! இதுபோலத்தான் அனைத்தும்
ஆசை என்பது ஒரு மெகாத் தொடரைப் போல வளர்ந்து கொண்டே போகும்!

நடிகர் விஷாலின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது அவருக்கு நல்லதே! அதனால்
அவருக்கு மிகப் பெரிய விளம்பரத்தை, ஆளும் அரசு
தேடிக் கொடுத்துள்ளது !அவரை நிற்க விட்டிருந்தால்
பத்தோடு ஒன்றாக ஆகி யிருப்பார்

உறவுகளே!
முகநூலில் சில(ஆண்,பெண்) பதிவர்கள் தங்கள் பதிவுகளோடு தங்கள்
புகைப் படங்களையும் பெரும்பாலும் வெளியிட்டு கொள்வது தேவைதான என்பதை அன்புகூர்ந்து சிந்திக்க வேண்டுகிறேன்

நடிகர் விஷாலின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது தவறுமட்டுமல்லஅதில் ,மத்திய,மாநில அரசுகளின் சதியும் அடங்கியுள்ளதது என்பதும் ஆகும்! மேலும் ஆளும் கட்சி வெற்றி பெற பல்வேறு வழிமுறைகள் கையாளப்படும்!

உறவுகளே
குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்க்கும் என்பது போல
ஆர் -கே நகர் தேர்தலில் யாரோ நடிகர் விஷாலை போட்டுயிட வைத்துள்ளார்கள்! பார்ப்போம்!

புலவர்  சா  இராமாநுசம்

Friday, December 8, 2017

பத்தரைப் பொன்னே கவிப்பெண்ணே-தீராப் பழியும் வருமுன் வாயின்னே!தொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில் 
தொலையா இன்பம் தந்ததுவே 
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளைக் 
கண்முன் காணா ஏக்கந்தான் 
விளைந்தது மீண்டும் கனவுவர-அவளோ
விட்டுச் சென்றதை நினவுதர 
அலைந்தது அந்தோ மனம்வீணே-முகத்தின்
அழகில் காண்பது மிகநாணே 

என்னுள் அவளே இருந்தாலும்-எனது
இருவிழி தந்திடும் மருந்தாலும் 
பொன்னுள் பதித்த மணிபோல-தினமே
புலம்பும் நெஞ்சின் பிணிமாள 
மன்னும் உயிரும் உடலோடு-அவளும்
மறுத்தால வாழ்வே சுடுகாடே 
இன்னும் எதற்கோ நடிக்கின்றாள்-தன் னுடை
இதயம் திறக்க மறுக்கின்றாள் 

எத்தனை காலம் ஆனாலும்-என்னின்
இளமை அழிந்து போனாலும் 
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம் 
செப்பிடும் வரையில் தூங்காது 
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான் 
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன் 
பத்தரைப் பொன்னே  கவிப்பெண்ணே-தீராப்
பழியும் வருமுன்  வாயின்னே

புலவர் சா இராமாநுசம்

Tuesday, December 5, 2017

எங்கே போனாய் நிம்மதியே-உனையே எண்ணிக் கலங்குது என்மதியே!எங்கே போனாய் நிம்மதியே-உனையே
    எண்ணிக் கலங்குது என்மதியே
அங்கே இங்கே உனைத்தேடி-நானும்
    அலைந்தும் மறைந்தாய் நீஓடி

உழுது உண்ணும் உழவன்தான்-வாழ்வில்
     உன்னைக் காணா தழுவான்தான்
தொழுது வணங்க வேண்டியவன்-பட்ட
     துயரம் நீக்கிட  போனாயா

சங்கு ஊதினால் ஓடுகின்றான்-ஒருவன்
     சாலையில் தாரைப் போடுகின்றான்
மங்கும் அன்னவர் வாழ்வதனை-நீயும்
     மாற்றிட வாவது போனாயா

நெய்யும் தொழிலுக்கு நிகரில்லை—என்றே
     நினைத்தவன் வாழ்விலும் நீயில்லை
பொய்யும் புரட்டுமே வாழ்வாக-பணத்தில்
     புரளுவோன் வாழ்விலும் நீயில்லை

பொருளைச் சேர்க்கத் தொடங்கியதும்-விட்டுப்
     போனது போவது நிம்மதியே
அருளைத் தேடியே அலைபவனும்-பாபம்
     அடைந்த உண்டா நிம்மதியே

பெற்றவர் மனதிலும் நீயில்லை-அன்னார்
      பிள்ளைகள் மனதிலும் நீயில்லை
கற்றவர் மனதிலும் நீயில்லை-கல்வியே
      கல்லார் மனதிலும் நீயில்லை

எல்லார் வாழ்விலும் இல்லாவாய்-நீயும்
     இருப்பின் பொருள்தரா சொல்லாவாய்
பல்லார்  மனதிலும் இவ்வாறே-இன்றிப்
     பறந்தால் வாழ்வது எவ்வாறே

ஆண்டவர் வாழ்விலும் நீயில்லை-இன்றே
     ஆள்பவர் வாழ்விலும் நீயில்லை
மாண்டவர்  வாழ்வொடு போனாயோ-பொருளே
     மாறிட நிம்மதி  ஆனாயோ

                         புலவர் சா இராமாநுசம்

Sunday, December 3, 2017

அன்பின் இனிய வலையுலக உறவுகளே!

அன்பின் இனிய வலையுலக உறவுகளே!
         வணக்கம் கணகில!
   வயதால் மட்டுமே மூத்த வலைப்பதிவராகிய  நான் உங்கள் பார்வைக்கு
பணிவன்போடு வைக்கும் ஒருசில கருத்துகள்!
   இன்றைய  வலையுலகம் ஆரோக்கியமாக இயங்கவில்லை என்பது , என்
கருத்து! இனம் காணமுடியாத ஒருவகைப்  போட்டி ,மனப்பான்மை உள்ளுக்குள் உருவாகி வருகிறது! இதனைக்  கூர்ந்து பார்தால்  உண்மை தெரியும்  மேலும் அதிகம் விளக்கினால் அதுவே தீமை தரலாம்
     ஆனால் ஒன்றை இங்கே அழுத்தமாக செல்வதெனில் அதற்கு!!!!!!!
    காரணம் தமிழ்மணத்தில் வைக்கப் பட்டுள்ள ரேங்குப் பட்டியலும்
மதிப்பெண்  பட்டையும்தான் என்பது  தெளிவாகத் தெரிகிறது
    என்னுடைய ரேங் பனிரெண்டில் இருந்த போதும் நான் கவலைப் பட்டதில்லை இன்று நான்கில் இருப்பது  கண்டு மகிழவும்  இல்லை
     அது மட்டுமல்ல,!வலைப்பதி ஆனாலும் ,முகநூல் ஆனாலும் என்
கருத்துகளை எழுதுவதில்  மட்டுமே நான் கருத்தாக இருப்பேன்
      இன்று  வலைப்பதிவில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்
சுருங்கி விட்டது என்பது பலரும் அறிந்த உண்மை!
      உள்ள சிலரும் விலகி செல்லாமல் இருக்க வழிகாண வேண்டும்
      சிந்திப்போம் செயல்படுத்துவோம்!
         உங்கள்  கருதென்ன!!!?
புலவர்  சா  இராமாநுசம்

Friday, December 1, 2017

பட்டே அறிவது பட்டறிவு-எதையும் பகுத்து அறிவதும் பகுத்தறிவேபட்டே அறிவது பட்டறிவு-எதையும்
   பகுத்து அறிவதும் பகுத்தறிவே !
தொட்டால் நெருப்புச் சுடுமென்றே-குழந்தை
  தொட்டு அறிவது  பட்டறிவு
விட்டால் குழந்தை தொடுமென்றே-நாமும்
  விளங்கிக் கொள்ளல் பகுத்தறிவு
கெட்டார் பெறுவதும் பட்டறிவே-எதனால்
   கெட்டோம் அறிவது பகுத்தறிவு

ஆய்ந்துப் பார்த்தல் பகுத்தறிவு-தந்திடும்
   அநுபவம் அனைத்தும் பட்டறிவே
மாய்ந்து போமுன் மனிதர்களே—இதையும்
   மனதில் கொள்வீர் புனிதர்களே
வாய்ந்தது துன்ப வாழ்வென்றே-நாளும்
   வருந்தி நிற்றல் தீர்வன்றே
ஓய்ந்து போகா உளம்பெற்றே-பகுத்து
   உணரின் வாழ்வீர் நலம்பெற்றே

சொன்னவர் யாராய் இருந்தாலும்-அவரே
    சொன்னது எதுவாய் இருந்தாலும்
சின்னவர் பெரியவர் என்பதில்லை-அதையும்
     சித்திக்க முயல்வது தவறில்லை
என்னவோ எதுவென மயங்காதீர்-பகுத்து
     எண்ணியே ஆய தயங்காதீர்
இன்னார் இனியர் பாராதீர்-எதையும்
     எண்ணாமல் என்றும் கூறாதீர்

சித்தர் பாடல் பட்டறிவாம் -முன்னோர்
    செப்பிடின் அதையும் கேட்டறிவோம்
புத்தர் கண்டதும் பட்டறிவாம்-அவரின்
    போதனை அனத்தும் அதன்விளைவாம்
உத்தமர் காந்தியின் பட்டறிவே-சுதந்திர
    உரிமைக்கு விதையென நாமறிவோம்
எத்தகை செயலுக்கும் பட்டறிவே-ஆமென
    என்றும் ஆய்தல் பகுத்தறிவே!

                  புலவர் சா இராமாநுசம்

Monday, November 27, 2017

தேர்தல் விளையாட்டும் நடைபெறும் கூத்துகளும்நீயா நானா விளையாட்டே-தேர்தல்
நெருங்க நெருங்கத் தமிழ்நாட்டில்-ஆயின்
காயா பழமா விளையாட்டே-அந்தோ
கண்கிறோ மிந்த தமிழ்நாட்டில்!-மேலும்
தாயா பிள்ளையா இருந்தாரும்-இங்கே
தனியாய் தனியாய்ப் பிரிந்தாரும்!-சாடும்
வாயா போயா விளையாட்டும் -மேலும்
வளர்ந்து நாளும் களைகட்டும்!

மட்டைப் பந்து விளையாட்டே-அது
மட்டுமா சிறந்த விளையாட்டே!-ஏனோ
திட்ட மிட்டே ஆடுகின்றார்-பொருள்
தேடிட சூதையும் நாடுகின்றார்!-அதுவே
வெட்ட வெளிச்சம் ஆனபின்பும்-எதற்கு
வீணே நீயா நானென்றல்!-அவரே
இட்டம் போல ஆடட்டும் -இனி
எப்படி யேனும் போகட்டும்!

எங்கும் எதிலும் இதுவேதான்-உலகு
எங்கும் காணல் இதுவேதான்!-மனதில்
பொங்கும் உணர்வே இதுவேதான்-தினம்
போட்டியில் பார்ப்பது இதுவேதான்!-ஏதும்
தங்குத் தடையே இல்லாமல்-நாளும்
தயங்கி எதுவும் சொல்லாமல்!-கண்டதை
இங்கே நானும் எழுதுவ-என்னுள்
இருப்பதும் நீயா நானேதான்

புலவர் சா இராமாநுசம்

Friday, November 24, 2017

தங்கத்தால் ஆகாதச் செயலைக் கூட-வரும் தடைமுற்றும் தூளாகி விரைந்து ஓடதங்கத்தால் ஆகாதச் செயலைக் கூட-வரும்
தடைமுற்றும் தூளாகி விரைந்து ஓட
சங்கத்தால் ஆகுமென முன்னோர் சாற்ற-அவையே
சரியென்றே கொண்டதுடன் பின்னோர் போற்ற
அங்கங்கே தொழில்தோறும் சங்கம் தோன்ற-இன்றே
அடிப்படை உரிமைகள் மனதில் ஊன்ற
சிங்கத்தைப் போன்றின்று நடக்கக் காண்பூர்-உம்மின்
சிந்தையிலும் அதுபோன்றே உறுதி பூண்பீர்


புலவர் சா இராமாநுசம்

Thursday, November 23, 2017

விருந்துண்டு வாழ்கின்ற வயதா? இல்லை!-நாளும் விட்டுவிட்டு வருகிறது! நோயின் தொல்லை!விருந்துண்டு வாழ்கின்ற வயதா? இல்லை!-நாளும்
    விட்டுவிட்டு வருகிறது! நோயின் தொல்லை!
மருந்துண்டு வாழ்கின்ற வாழ்க்கை தானே!-ஆயின்
    மனத்தளவில் என்றென்றும் இளைஞன் நானே!
இருந்துண்டு இயன்றவரை ஏதோ பதிவை- நாளும்
     எழுதிகிறேன்! வலைதன்னில்! வாட்ட, முதுமை
பெருந்தொண்டு செய்திட தடையாம் ஆமே!-எனவே
    பொறுத்திடுவீர்  தக்கோரே! வருக! வருக!

புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, November 22, 2017

பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –ஆளுநர் பார்வையிடும் அதிகாரம்! அதுபோல் ஆகும்!பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் ஆளுநர்
   பார்வையிடும் அதிகாரம்! அதுபோல்  ஆகும்!

தொழுதுகெட்ட ஆட்சி-போல எதையும் தாங்கும்-ஏழை
    தொல்லைகளோ குறையாது ! எவ்வண்  நீங்கும்
 அழுதுகிட்டே  மீன்பிடிக்கும்  மீனவன்  சாக -அவன்
    அல்லல்பட கண்டாலும் காணா தாக

பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் ஆளுநர்    பார்வையிடும் அதிகாரம்! அதுபோல்  ஆகும்!

பொழுதுமுட்ட  குடிக்கின்றான்   கவலை  அகல இல்லம்
   போனபின்னர்  அவன்செயலை  எடுத்துப்   புகல!
விழுதுகளாம்  பிள்ளைகளும்  மனைவி  என்றே படும்
    வேதனையை  விளக்குவதும்  எளிதும்  அன்றே!

பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் ஆளுநர்    பார்வையிடும் அதிகாரம்! அதுபோல்  ஆகும்!
                                             
நஞ்சுண்ட  விவசாயி  கண்டோம்  இன்றே வரும்
    நாட்களிலே  நடக்குமிது  காணும் ஒன்றே!
பஞ்சுண்டு  நெய்வதற்கும்  ஆலை யுண்டே ஆனா
    பலநாளாய்  மூடியது   அரசின்  தொண்டே!

பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் ஆளுநர்    பார்வையிடும் அதிகாரம்! அதுபோல்  ஆகும்!
 
 
  

                       
                          புலவர்  சா  இராமாநுசம்

Monday, November 20, 2017

முகநூல் பதிவுகள்யானை வரும் பின்னே! மணி ஓசை வரும் முன்னே! இது பழமொழி! அதுபோலத் தான் தமிழகத்தில் ஆளுநர் ஆய்வு நடக்கிறது ,இதிலே என்ன வியப்பு இருக்கிறது ஒத்திகை தானே

உறவுகளே!
வள்ளுவர் கூட பொய் சொல்ல லாம் என்று சொல்கிறாரே! உண்மைதான்! ஆனால், எப்பொழுது
என்றால், ஒருவன் தான் சொல்லும் பொய்யானது யாருக்கும் தீமை தராதவகையில் பெரும் நன்மையை தரும் என்றால் தவறல்ல! என்பதே மேலும் அதாவது உண்மை ஆகாது,!ஆனால் அதனை உண்மையின் இடத்தில் வைத்து ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார்

ராஜீவ் கொலைவழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரே கருணை காட்டுமாறு
சோனியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தை ,கண்டு மனித நேயத்தோடு,சோனியா அவ ர்கள் மன்னிக் வேண்டுகிறோம்

உறவுகளே
தேசபிதா என்று மக்களால் போற்றப் பட்ட அண்ணல் மகாத்மா காந்தி அவர்களைச் சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு கோவில் கட்டுவதாக, வந்துள்ள செய்தி உண்மை என்றால், இந்த நாடு
எங்கே போகிறது! ஆளும் மத்திய அரசு இதனை
தடுத்து நிறுத்த வேண்டாமா!!!!?

ஆளுநரின் செயல் வரம்பு மீறியதாக இருந்தாலும் ஆளும்
அரசோ அமைதியாக இருப்பதும், அமைச்சரே ஒருவர் அதில் கலந்து கொள்வதும் சனநாயகத்தில் கேலிக் கூத்தாகும் ! இது, மத்திய அரசுக்கு அழகல்ல! இதைவிட ஆளுநர் ஆட்சியை அமுல்படுத்துவது நன்று

ஒருவன் சூழ்நிலையின் காரணமாக படிக்க முடியாமல் போனாலும்
நன்கு கற்றவர்களால் சொல்லப்படும் செய்திகளைக் கேட்டு , அறிவு
பெறுவதே போதுமானதாகும்! அதுவே தளர்ச்சி யுற்ற காலத்தில் ஊன்றுகோல் போல அவனுக்குப் பயன் படும் என்பதாம்!

உறவுகளே!
திருப்பதிக்குச் சென்று மொட்டையைக் கண்டாயா
என்று கேட்பதற்கும், செயலலிதாவின் மர்ம மரணத்தை விசாரிக்க நீதிபதி ஒருவரை நியமித்து இருப்பதற்கும் பலன் என்னமோ ஒன்றுதான்!

புலவர் சா  இராமாநுசம்

Friday, November 17, 2017

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் உரிமைக்கு தீங்குயெனில் பொறுக்க வேண்டாம்!ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
   உரிமைக்கு தீங்குயெனில் பொறுக்க வேண்டாம்!
ஆதாரம் இல்லாமல் பேச  வேண்டாம்
   அவதூறு செய்வாரின் உறவே வேண்டாம்!
யாதானும் வாழும்வழி காண வேண்டாம்
    என்றென்றும் பகைமையே பூண வேண்டாம்!
தீதாகப் பொருள்தேடி சேர்த்தல் வேண்டாம்
    திட்டமிட்டு வாழ்வதை மறக்க வேண்டாம்!


வளங்காணக் கடன்பட்டு வருந்த வேண்டாம்
    வரவுக்கு மேல்செலவுச் செய்தல் வேண்டாம்!
களவான மனங்கொண்டுப் பழக வேண்டாம்
    கருணையின்றி பிறர்நோகப் பேசல் வேண்டாம்!
உளமின்றி வெறுப்போடு உதவல் வேண்டாம்
    உதட்டளவு வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம்!
அளவின்றி யாரோடும் பழக வேண்டாம்
     ஆசைகளை பல்வகையில் பெருக்க வேண்டாம்!


கோழையெனப் பிறர்சொல்ல நடக்க வேண்டாம்
     குறைகளைய எள்ளவும் தயங்க வேண்டாம்!
ஏழையெனில் இரங்காத மனமே வேண்டாம்
     ஏமாற்றிப் பிழைக்கின்ற பிழப்பே வேண்டாம்!
பேழையுள் பணம்போல உறங்க வேண்டாம்
    பிறருக்கு பயன்படத் தயங்க வேண்டாம்!
தாழையின் பாம்பாக இருக்க வேண்டாம்
     தரமில்லா மனிதர்க்கு இணங்க வேண்டாம்!

                                       புலவர் சா இராமாநுசம்

Tuesday, November 14, 2017

குழந்தைகள் தினப் பாடல்சின்னஞ் சிறுக்குழவி
  சிங்கார இளங்குழவி
கன்னம் குழிவிழவும்
  களுக்கென்று நீசிரிப்பின்
அன்னை முகமாகும்
  அன்றலரும் தாமரைபோல்
தன்னை மறந்ததவளும்
   தாலாட்டு பாடுவளாம்

பூவின் இதழ்போல
   பொக்கை வாய்விரிய
நாவின் சுவைஅறிய
   நறுந் தேனைதடவிட
பாவின் பண்போல
   பைந்தமிழ் சுவைபோல
காவின் எழில்போல
   களிப்பாயே தேன்சுவையில்

கண்ணே நீ உறங்கு
  கற்கண்டே நீ உறங்கு
விண்ணில் தவழ்கின்ற
  வெண்மதியே நீ உறங்கு
வண்ண மங்காமல்
  வரைந்த நல்ஓவியமே
மண்ணை வளமாக்கும்
   மழைத்துளி யேநீயுறங்கு

கொஞ்சும் மழலைக்கோர்
   குழல்இசையும் ஈடாமோ
பஞ்சின் மெல்லியசீர்
    பாதத்தில் நீ நடப்பின்
அஞ்சிடும் அன்ன மனம்
    அடிதவறி விழுவா யென
நெஞ்சிலே சுமந்திடுவாள்
   நீவளரும் வரையவளே

       புலவர் சா இராமாநுசம்

 

Monday, November 13, 2017

ஒன்றே செய்யினும் நன்றே செய்க நன்றே செய்யினும் இன்றே செய்க!மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தன்னால் இயன்ற உதவிகள் செய்வீர்!
ஏழைகள் என்றும் இன்புடன் வாழவும்
பேழையுள் வைக்கும் பணமது கொண்டும்
அற்றார் அழிபசி தீர்தல் இன்றே
பெற்றான் பொருளை வைப்புழி என்றே
ஐயன் வள்ளுவர் அறைந்தார் அன்றே
பொய்யில்!உண்மை! உணர்வோம் நன்றே!

முன்னோர் உரைத்த முதுமொழி தன்னை
பொன்னே போல போற்றுவோம்! அன்னை
தன்நிகர் இல்லாத் தமிழ்மொழி போற்றி
இன்முகம் காட்டி இன்சொல் சாற்றி
மாற்றார் ஆயினும் மதித்து நடக்கும்
ஆற்றல் கொள்வீர்அன்பால் வெல்வீர்
இயற்கை தன்னின் இயல்பைக் காப்போம்
செயற்கை செய்யும் சிதைவை தடுப்போம்!

நல்லன கண்டு நாளும் செய்வோம்!
அல்லன செய்ய அஞ்சின்! உய்வோம்!
உடுக்கை இழந்தவன் கைபோல் சென்றே
இடுக்கண் களைவது நட்பாம் என்றே
வாழின் வையம் வாழ்த்திடும்! ஆமே!
சூழும் பெருமையும் வந்திடும்! தாமே!
கண்ணியம் கடமை கட்டுப் பாடனென
அண்ணா வழியில் அனைவரும் வாழ்வோம்இப்படி வாழின் என்றுமே பெருமை
ஒப்பிட இயலா! உரைப்பதோ அருமை!
எப்படி யேனும் வாழ்ந்தால் சரியென
தப்படி வைத்தால் தண்டணை உரியன
அறிவீர்! தெளிவீர்! ஆவன உணர்வீர்!
பெறுவீர் வெற்றி!பேதமை அகற்றி
ஒன்றே செய்யினும் நன்றே செய்க
நன்றே செய்யினும் இன்றே செய்க!

                  புலவர் சா இராமாநுசம்

Thursday, November 9, 2017

நிழலிங்கே நிஜமெங்கே நிலமை ஆச்சே –நாட்டில் நிகழ்கின்ற நடைமுறைகள் அனைத்தும் போச்சே!நிழலிங்கே நிஜமெங்கே நிலமை ஆச்சே –நாட்டில்
நிகழ்கின்ற நடைமுறைகள் அனைத்தும் போச்சே!
விழலுக்கே நீர்பாய்ச்சி வீணாய்ப் போனோம் –புலம்பி
விம்முவதில் பயனில்லை! சிலையே ஆனோம்!
தழலுக்கு சுடுவதுதான் இயல்பு தாமே –தெரிந்தும்
தடம்மாறி வீழ்ந்ததுவும் அந்தோ நாமே!
சுழலுக்குள் சிக்கிவிட்ட கதைதான் இன்றே-கவிதை
சொல்லுவது புரிந்தாலே போதும் நன்றே!ஓட்டென்றால் நம்முடைய உரிமைச் சீட்டே –அதை
உணராது பலவகையில் வீணாய்ப் போட்டே!
நாட்டைத்தான் கெடுத்தவர்கள் நாமே ஆகும் –தேர்தல்
நாடகத்தில் இன்றுவரை! துயரா போகும்!
கோட்டைதான் குறிக்கோளாய் கொள்கை என்றே-ஆட்சிக்
கோலோச்ச கட்சிகளும் கூடி நின்றே!
காட்டைத்தான் வீடாக்கி விட்டார்! நாளும் –ஏழை
கண்ணீரைத் துடைப்பதற்கா இல்லை  மேலும்

பட்டதுயர் போதுமினி படவும் இயலா – நம்மின்
பகுத்தறிவு அணுவளவும் என்றும் முயலா!
இட்டபடி ஆள்வோரே வருவா ராக-நீங்கா
இன்னல்தான் நிலையென்ற நிலமை போக!
திட்டமிட்டு செயல்படுவோர் ஆட்சி வருமா –மக்கள்
தேவைகண்டு சேவைசெய்யும் திருநாள் தருமா!
குட்டதலை குனிவதுவோ! இனியும் வேண்டாம்-நிமிர
குறைதீரும்! காலமது கனியும்! ஈண்டாம்!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, November 8, 2017

சிங்கார சொல்தானே மனித உரிமை-அதை செப்பிட ஒப்பிட உண்டோ உரிமை !எங்கேயோ கேட்டகுரல் மனித உரிமை-உலகு
எங்கெனும் தேடியும் காணல்அருமை
இங்கேயா அதைத்தேடி அலைய முடியும்-நம்
இறையாண்மை ஆராய பொழுதே விடியும்
மங்காது நடக்குதே மக்களவையே-அங்கு
மார்தட்டி தோள்தட்டி கேட்டல் எவையே
சிங்கார சொல்தானே மனித உரிமை-அதை
செப்பிட ஒப்பிட உண்டோ உரிமை

இல்லாத ஒன்றினை எதற்கு நானே-கவிதை
எழுதிட வேண்டுமா முற்றும் விணே
சொல்லாதீர் நானிதை சொன்னதாக-மீறி
சொன்னாலே வாழ்வினில் அமைதிபோக
பொல்லாத விளைவென்னை தேடிவருமே-வீண்
பொல்லாங்கு நாள்தோறும் நாடிவருமே
நல்லோரே இதுதானே மனித உரிமை-நீங்கள்
நம்பங்கள் அதுதானே எனகுப் பெருமை

புலவர் சா இராமாநுசம்

Monday, November 6, 2017

முகநூல் தந்த முத்துக்கள் மூன்று  மதி!

விண்மீது தவழ்கின்ற வெணமதியைப் பாராய்-இரு
   விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய்!
மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை
   மழைமேகம் சிலபோது மறைக்கின்ற தாலே!
கண்பட்டே விட்டதென கலங்கிடவும் நெஞ்சம்-அந்த
   கருமேகம் விளையாடி போவதென்ன கொஞ்சம்!
தண்ணென்ற குளுமைதனைத் தருகின்ற நிலவே-நாளும்
   தருகின்ற கற்பனைகள் சொல்வதெனில் பலவே!

            தென்றல்!

தவழ்ந்தோடி வருகின்ற தென்றலெனும் காற்றே-மேனி
   தழுவுகின்ற காரணத்தால் இன்பமது ஊற்றே!
உவந்தோடிப் பெருகிடவும் கரைகாண வெள்ளம்-நன்கு
  உருவாகி உணர்வாகப் பாயுதுபார் உள்ளம்!
சிவந்த்தோடும் வெட்கத்தில் காதலியின் முகமோ-உனை
   செப்பிடவும் ஒப்பிடவும் காதலிக்கும் அகமோ!
தவழ்ந்தாடி வருகின்றாய் தென்றலெனும் சேயோ-இன்பத்
   தமிழ்போல எமைநாடி தொடுகின்ற தாயோ!

          நினைவு!


கரைதாண்டி வாராத அலைபோல நினைவே-நெஞ்சக்
   கண்மூட முயன்றாலும் கலையாத கனவே
தரைபட்ட மீனாக துடித்திடுவாய் ஏனோ-உரிய
   தடமாறி தடுமாறி தவித்திடுவாய் தானோ
சிறைபட்ட பறவையென சிலநேரம் கிடப்பாய்-உயர்
   சிந்தனையின் வயப்பட்டே கவிதைகளைப் படைப்பாய்
குறைபட்டும், குறைசொல்லும், குறையெதற்காம்! தேவை-நற்
   குணங்காணும் வழிச்சென்று செய்திடுவாய் சேவை

               புலவர் சா இராமாநுசம்

Saturday, November 4, 2017

சிந்தனை செய்வீர் மானிடரே-இதை செவியில் ஏற்றால் ஏனிடரே!
சொந்தம் என்றே ஏதுமிலை –சிலர்
   சொல்லும் சொற்களில் பொருளில்லை
பந்தம்  பாசம் எல்லாமே-பெரும்
    பணமும் வந்தால் சொல்லாமே
அந்தம் ஆகிடும் அறிவீரே-இந்த
    அவனியில் நடப்பதாம் புரிவீரே
சிந்தனை செய்வீர் மானிடரே-இதை
    செவியில் ஏற்றால் ஏனிடரே

பிறந்த உடனே அழுகின்றோம்-இனி
   பிறவா நிலைதர தொழுகின்றோம்
இறந்தால் மண்ணொடு கலக்கின்றோம்-அது
   இயற்கை என்றே உரைக்கின்றோம்
சிறந்தார் இவரெனச் செப்பிடவே-நம்
   செயலைக் கூறியே ஒப்பிடவே
மறைந்தார் அடடா இன்றென்றே-மக்கள்
    மதிக்க மறைதல் நன்றின்றே


வந்தவர் அனைவரும் போவதுவே-இயற்கை
    வகுத்த நிலையென ஆனதுவே
நிந்தனை பேசிட ஏதுமில்லை-இங்கே
    நிலையென இருப்பவர் எவருமில்லை
சந்தையில் கூடும் கூட்டமென-மனித
    சரித்திரம் கலைந்து ஓட்டமென
மந்தையுள் மாடென வாழ்கின்றோம்-தேடி
    மரணம் வரவும் வீழ்கின்றோம்


இதுதான் வாழ்க்கை இன்றுவரை-இதில்
    ஏற்றமும் தாழ்வும் வருமேமுறை
எதுதான் வாழ்வென அறிவோமே-அதில்
    ஏற்புடை தன்னை ஏற்போமே
மதிதான் நல்வழி கண்டிடவும்-நம்
   மனமே அவ்வழி விண்டிடவும்
விதிதான் வலிதென ஆயாதீர்-வரும்
   வினையெனச் சொல்லி ஓயாதீர்

                       புலவர் சா இராமாநுசம்

Wednesday, November 1, 2017

இதுவென் பதிவே கணக்கென அறியேன் புதுமலர் போன்றே பூத்திட காத்திட !
இதுவென்  பதிவே  கணக்கென அறியேன்
புதுமலர்  போன்றே  பூத்திட  காத்திட
மதுநிகர்  மறுமொழி தந்தெனை  வாழ்த்திட
நிதியெனத்  தந்தவர்  நீங்களே ஆகும் !

என்னிரு  கரங்களை  என்றும்  கூப்பியே
மன்னிய  உலகில்  மன்னும்  வரையில்
எண்ணியே  தொழுவேன்   இணையில்  உறவுமை
கண்ணின்  மணியெனக்  கருதியே வாழ்வேன்  !

சுயநலம்  கருதா  சொந்தங்கள்  நீரே
பயனெதிர்  பாரா  பண்பினர்  நீரே
நயமது மிக்க நண்பினர்  நீரே
செயல்பட  என்னைச்  செய்தவர்  நீரே !

எண்பதைத் தாண்டியே ஆறென இருப்பதும்
உண்பதும்  உறங்கலும்  உம்மிடை இருப்பதும்
என்புடை தோலென  என்னெடு  இருப்பதும்
அன்புடை  உம்மோர்  ஆதர   வன்றோ !

இனியும்  வாழந்திட  என்வலை  வருவீர்
கனியென  இனித்திடக்  கருத்தினைத் தருவீர்
பனிமலர்  போன்றே  குளுமையும்  தோன்ற
நனிமிகு  நாட்களும்! வாழ்வேன்  நன்றி!நன்றி!
                        
புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...