Thursday, April 30, 2015

வருக வருக மேதினமே - உழைக்கும் வர்க்கம் போற்றிட மேதினமே!வருக வருக மேதினமே - உழைக்கும்
வர்க்கம் போற்றிட மேதினமே
தருக பல்வகை தொழிலோங்க - ஏதும்
தடையின்றி பற்றா குறைநீங்க
பெருகச் செய்வாய் உற்பத்தி - சாதி
பேதத்தை நீக்கும நற்புத்தி
கருக ஆண்டான் அடிமையென - நச்சுக்
கருத்தும் அகற்றிய மேதினமே


செய்யும் தொழிலே தெய்வமென் - முன்னோர்
செப்பிய வழியே செய்வோமென
நெய்யும் தொழிலை நிகழ்துமவன் - நாளும்
நிலைத்திட வறுமை அகத்திலவன்
பெய்யும் மழையென எதிர்நோக்க - உழவன்
பெய்யா நிலையில் துயர்தாக்க
உய்யச் செய்தாய் அன்னவரை - இந்த
உலகம் போற்றிட மேதினமே

போதிய அளவு உழைத்தாலும் - எதிர்த்து
பேசிட உள்ளம் நினைத்தாலும்
பீதியே வந்திடும் முன்னாலே - அவன்
பேச்சும் அடங்கிடும் தன்னாலே
ஊதிய உயர்வு கேட்டாலே - உடன்
உதைக்க வருவான் அடியாளே
மேதினி தன்னில் மேதினமே - அவர்
மேன்மைக்கு காரணம் இத்தினமே

வல்லான் வகுத்ததே வாய்காலாய் - நாளும்
வாட்டி மிதித்திடும் பேய்க்காலாய்
கல்லா கற்றார் பேதமில்லை - வேலைக்
கருத்தாய் செய்தும் பெருந்தொல்லை
இல்லார் மாற்று வழியொன்றே - அவர்
எண்ணிடப் திறந்தது விழிநன்றே
எல்லாத் தொழிலும் செய்பவர்கள் - ஒன்றாய்
இணைந்திட செய்தாய் மேதினமே.

புலவர் சா.இராமாநுசம்

Wednesday, April 29, 2015

மனிதா மனிதா ஒடாதே மதுவே கதியெனத் தேடாதே!


மனிதா மனிதா ஒடாதே
மதுவே கதியெனத் தேடாதே
இனிதாய் இருக்கும் தொடக்கத்தில்
இறுதி உயிரின் அடக்கத்தில்
நனிதாய் ஏதும் வேண்டாவே
நஞ்சாம் மதுவைத் தீண்டாவே
கனிதான் வாழ்கை அறிவாயே
கடமை அதுவெனப் புரிவாயே


குடியைக் கெடுப்பது குடியாகும்
குடும்ப அமைதிக்கு வெடியாகும்
விடியா இரவாய் வாழ்வாகும்
வேதனை நீங்கா சூழ்வாகும்
கொடிய குணங்களின் தாயாகும்
குற்றமே தீரா நோயாகும்
கடிவாய் உணர்ந்து இக்கணமே
காண்பாய் இன்பம் அக்கணமே

புலவர் சா இராமாநுசம்

Monday, April 27, 2015

அப்பாவித் தமிழர்களைச் சுட்டுக் கென்றாய் அடப்பாவி ஆந்திரனே திருடன் என்றாய்


நான், உடல்  நலன்  பெற வேண்டி,  விரும்பி  வாழ்த்திய, வலையுலக,முகநூல் உறவுகள்  அனைவருக்கும் முதற்கண்  என் நன்றியைத்  தெரிவித்துக்  கொண்டு பின்  வரும்  பதிவை காணிக்கை
ஆக்குகிறேன்.வணக்கம்!

அப்பாவித்  தமிழர்களைச்  சுட்டுக்  கென்றாய்
   அடப்பாவி ஆந்திரனே  திருடன்  என்றாய்
தப்பானக்  கணக்கதுவே அறிந்து  கொள்வாய்
    தப்பிக்க பொய்கதையே  கட்டிச்  சொல்வாய்
இப்போதும் கேட்கின்றோம்  எய்தோர்  யாராம்
    எதற்காக அம்புதனை கொய்தீர்  நீராம்
துப்பேது அதைச்சொல்ல தகுதி  யின்றே
    துரோகிகளை மறைப்பதற்கா கொன்றீர் இன்றே

ஒப்பாது இவ்வுலகக்  கொடுமை!  இதனை
    உணர்ந்தீரா?  இனியேனும் மாற்ற  அதனை
செப்பாது  பொய்யேதும் செய்த  பாவம்
    செம்மையுற ஏற்றவழி ஆய்ந்து மேவும்
எப்போதும்  தீராத  பழியாம்  இதுவே
    என்றெண்ணி செயல்படுவீர்! இன்றேல் அதுவே
துப்பாக்கி ஆகியுமைச் சுட்டு  விடுமே
    துரோகிகளின் கடத்தல்தான்  பெருக! கெடுமே

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...