Saturday, September 27, 2014

ஆயிரம் ஆயிரம் பக்தர்தினம் ஆடிப் பாடி வருகின்றார்!புரட்டாசி-இரண்டாம் சனிக்கிழமை

ஆதவன் எழுவான் அதிகாலை
ஆயர் பாடியில் அதுவேளை
மாதவன் குழலை ஊதிடுவான்!
மாடுகள் அனைத்தும் கூடிடவே
ஒன்றாய்க் கூடிய ஆவினங்கள்
ஊதிய குழலின் இசைகேட்டு
நன்றாய் மயங்கி நின்றனவே
நடந்து மெதுவாய்ச் சென்றனவே!


ஆயர் பாடியில் மங்கையரும்
ஆடவர் பிள்ளைகள் அனைவருமே!
மாயவன் இசையில் மயங்கினரே
மகிழ்வுடன் பணியில் இயங்கினரே !
சேயவன் செய்தக் குறும்புகளே
செப்பிட இனிக்கும் கரும்புகளே!
தூயவன் திருமலை வேங்கடவா
திருவடி தலைமேல் தாங்கிடவா !

ஆயிரம் ஆயிரம் பக்தர்தினம்
ஆடிப் பாடி வருகின்றார்!
பாயிரம் பலபல பாடுகின்றார்
பரமா நின்னருள் தேடுகின்றார்!
கோயிலைச் சுற்றி வருகின்றார்
கோபுர தரிசனம் பெறுகின்றார்!
வாயிலில் உள்ளே நுழைகின்றார்
வரிசையில் நின்றிட விழைகின்றார்!

எண்ணில் மக்கள் நாள்தோறும்
ஏழாம் மலைகள் படியேறும்
கண்ணுக் கெட்டிய தூரம்வரை
கண்ணன் புகழேப் போற்றுமுரை
பண்ணொடு இசைத்தே உய்கின்றார்
பஜகோ விந்தமே செய்கின்றார்!
விண்ணொடு மண்ணை அளந்தவனே
வேங்கட உன்னடித் தொழுகின்றேன்

புலவர் சா இராமாநுசம்
(மீள்பதிவு)

Thursday, September 25, 2014

கந்துவட்டி மேலாகும் நாளு முயர்வே-எம்மைக் கடங்காரன் ஆக்காதீர் கருணை காட்டும்!மின்சார சுடுகாடு இனிமே வேண்டா-வீடே
மின்னின்றி சுடுகாடாம் ஆமே ஈண்டே
பொன்போல கட்டணமே விண்ணை முட்ட-மற்ற
பொருள்களின் விலையேற்றம் கண்ணீர் சொட்ட
என்செய்வர் மக்களுமே அம்மா யம்மா -மேலும்
அடிமேலே அடியா சும்மா சும்மா!
மின்சாரக் கட்டணத்தை குறைப்பீ ரம்மா-அடிக்கடி
மின்கட்டே வாட்டுவது, போது மம்மா!


நாதியின்றி வாழ்பவர் நாட்டி லின்றே-இன்று
நடுத்தர குடும்பங்கள் பாவ மன்றே
வீதியிலே இறங்கிவர இயலா ரென்றே-இந்த
வேதனையா? எண்ணுங்கள்! செய்வீர் நன்றே!
பாதிக்கும் பலவகையில்! பாரு மம்மா-அந்த
பாவிகளின் துயரத்தைத் தீரு மம்மா!
நீதிக்கும் குரல்கொடுக்க துணிய மாட்டார்-இரவு
நிம்மதியும் இல்லாமல் உறங்க மாட்டார்!

பணக்காரர் இதுபற்றி கவலை கொள்ளார்-இங்கே
ஏழைக்கோ ! இலவசம்! தொல்லை யில்லார்
கணக்காக செலவுதனை திட்ட மிட்டும்-மாதக்
கடைசியிலே கடன்வாங்கித் துயரப் பட்டும்
பிணமாக உயிரோடு நடக்கப் பலரும்-வாழும்
பேதைகளாம் நடுத்தரமே! பொழுதா புலரும்!?
குணமென்னும் குன்றேறி நின்றா ரவரே!-அவர்
கொதித்தாலே எதிர்வந்து நிற்பா ரெவரே!

வெந்துவிட்ட புண்ணிலே வேலும் பாயா-மேலும்
வேண்டுமா?முதல்வரே! நாளும் ஆய!
நொந்துவிட்டார் ஏற்கனவே அறிவீர் நீரே-அந்த
நோக்காடே தீரவில்லை! இதுவும் வேறே
 வந்துவிட்டால் துயர்நீங்க வழியே யில்லை!-எதிர்
வரலாற்றில் என்றென்றும் பழியே யெல்லை!
கந்துவட்டி மேலாகும் நாளு முயர்வே-எம்மைக்
கடங்காரன் ஆக்காதீர் கருணை காட்டும்!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, September 23, 2014

வலையில் பலபேர் எழுதவில்லை –அவரே வாராக் காரணம் தெரியவில்லை!வலையில் பலபேர் எழுதவில்லை –அவரே
வாராக் காரணம் தெரியவில்லை-தாமரை,
இலையில் நீரென வருகின்றார்- பதிவும்
இருப்பதாய் ஒப்புக்கு தருகின்றார்- சிலர்
நிலையில் மாற்றம் நன்றல்ல-காலம்
நிலையில் ! அறிவோம்! இன்றல்ல-எனினும்,
வலையில் எழுதியே வளர்ந்தோமே –அதை
வளர்த்திடும் பணியில் தளர்ந்தோமே!


நன்றி மறப்பது நன்றல்ல-நமக்கே
நவின்றது வள்ளுவன் இன்றல்ல-முகநூல்
சென்றது அணுவும் தவறல்ல-கருத்தைச்
செப்பிட அதுவும் வேறல்ல-ஆனால்
நின்றது வலைவழி வருவதுமே-என
நினைத்திட, பதிவிதும் தருவதுமே!-கடன்
என்றதே என்னுள் மனசாட்சி-அதனால்
எழுதினேன்! எழுதுதல், மிகமாட்சி!

புலவர் சா இராமாநுசம்

Monday, September 22, 2014

ஏனோ தொடங்கினேன் வலைப்பூவே-மேலும் எதற்குத் தொடங்கினேன் முகநூலே!ஏனோ தொடங்கினேன் வலைப்பூவே-மேலும்
எதற்குத் தொடங்கினேன் முகநூலே!
தானேப் புயலென வாட்டிடவும் –துன்பம்
தந்துமே நெஞ்சை ஆட்டிடவும்!
நானேன் தவிக்க ஆனதுவே –கொல்லும்
நஞ்சென நினைவுகள் போனதுவே!
தேனே என்றது அக்காலம் –முதுமை
தீயெனச் சுட்டிட இக்காலம்!


ஆடிய கால்கள் ஓய்வதில்லை –தமிழ்
அன்னையின் அருளோ தேய்வதில்லை!
பாடிய வாயும் மூடாதாம் –பொங்கிப்
பரவும் நினைவுகள் வாடாதாம்!
கூடிய வரையில் எழுதிடுவேன் –மரபே,
கொள்கையாக் கொண்டே தொழுதிடுவேன்!
வாடியப் பயிருக்கு வான்மழையே-நீங்கள்
வழங்கிடும் மறுமொழி தான்மழையே!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...