Saturday, October 14, 2017

வேங்கடவனைப் போற்றும் பாடல்
   ஆதவன் எழுவான் அதிகாலை
      ஆயர் பாடியில்  அதுவேளை
    மாதவன்  குழலை  ஊதிடுவான்!
      மாடுகள்  அனைத்தும்   கூடிடவே
    ஒன்றாய்   கூடிய   ஆவினங்கள்
      ஊதிய  குழலின்  இசைகேட்டு
    நன்றாய்  மயங்கி  நின்றனவே
      நடந்து மெதுவாய் சென்றனவே!
 
   ஆயர்  பாடியில் மங்கையரும்
     ஆடவர்  பிள்ளைகள் அனைவருமே!
   மாயவன் இசையில் மயங்கினரே
     மகிழ்வுடன் பணியில் இயங்கினரே !
   சேயவன்   செய்த  குறும்புகளே
     செப்பிட இனிக்கும் கரும்புகளே!
   தூயவன்  திருமலை வேங்கடவா
     திருவடி தலைமேல்  தாங்கிடவா !

   ஆயிரம் ஆயிரம்  பக்தர்தினம் 
      ஆடிப் பாடி வருகின்றார்!
   பாயிரம்  பலபல பாடுகின்றார்
      பரமா நின்னருள்  தேடுகின்றார்!
   கோயிலைச்  சுற்றி  வருகின்றார்
     கோபுர தரிசனம் பெறுகின்றார்!
   வாயிலில் உள்ளே நுழைகின்றார்
     வரிசையில் நின்றிட விழைகின்றார்!
 
    எண்ணில் மக்கள் நாள்தோறும்
     ஏழாம் மலைகள் படியேறும்
   கண்ணுக் கெட்டிய தூரம்வரை
     கண்ணன் புகழே போற்றுமுரை
   பண்ணொடு இசைத்தே உய்கின்றார்
     பஜகோ விந்தமே செய்கின்றார்!
   விண்ணொடு மண்ணை அளந்தவனே
      வேங்கட உன்னடி தொழுகின்றேன்
        
              புலவர் சா இராமாநுசம்

Friday, October 13, 2017

ஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட முடியுமா பாட்டினிலேஏதேதோ  நடக்குது  நாட்டுனிலே –முழுதும்
   எழுதிட  முடியுமா  பாட்டினிலே-நடக்கும்
தீதேதோ  தெரியாது  வாழுகின்றோம்-போகும்
   திசைகாணாத் துயர்தன்னில்  வீழுகின்றோம்-மேலும்
போதாது விலைநாளும்  விண்ணைமுட்ட –மனம்
   புலம்பிட  மக்களும்  கண்கள்சொட்ட! –அதனை
ஒதாது இருந்திட  இயலவில்லை-ஏதோ
   உள்ளத்தை  வருத்திட வந்ததொல்லை
 
 
பகல்கொள்ளை அளவின்றி  பெருகிப் போச்சே-இரவு
    பயத்துடன் உறங்கிடும்  நிலையு மாச்சே!-வேறு,
புகலில்லை ! வழியின்றி!  வருந்த லாச்சே-நாடும்
    புலிவாழும்  காடாக!  மாற லாச்சே!-மேலும்
 நகலின்றி  அழுகையால் நாளும் போக-நோயால்
    நலம்மின்றி ஏழைகள் நொந்து சாக!-காணும்
 அகமின்றி ஆள்வோரே  எண்ணி பாரீர்- ஏழை
    அன்னாரைக் காப்பாற்றி வாழ்வு தாரீர்!
புலவர்  சா  இராமாநுசம்

Thursday, October 12, 2017

மாண்புமிகு முதல்வரே எண்ணிப் பாரீர்!மாண்புமிகு முதல்வரே எண்ணிப் பாரீர்-இன்றே
மனம்குமுறும் மக்கள்துயர் ஆய்ந்து காரீர்!
மீண்டுமிங்கே விலைவாசி உயர்ந்து போக-மேலும்
மின்சாரம் பெட்ரோல்விலை எமனாய் ஆக!
வேண்டிபலர் விண்ணப்பம் தந்தும் வீணே -ஏதும்
விடிவில்லை! முடிவதுவே! வேதனை தானே!
ஆண்டவனே !என்றிங்கே மக்கள் நாளும்-எண்ணி
அல்லல்படல்! விதியென்ப! இதுதான் போலும்!ஆற்றாது அழுகின்ற அவலம் நன்றா -இதுவும்
ஆளுகின்ற அரசுக்கு அழகாம் என்றா?
சாற்றாது சத்தமின்றி  கலங்க விட்டீர் –அந்தோ!
சரியல்ல! போராட தூண்டி விட்டீர்!
ஊற்றான ஊழலையே ஒழித்தால் போதும் -எதையும்
உயர்த்திடவே தேவையில்லை! நீங்கும் தீதும்!
மாற்றாகும் இவ்வழியே! செய்தல் வேண்டும் -என்றே
மன்றாடிக் கேட்கின்றோம் மீண்டும் மீண்டும்!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, October 10, 2017

படியில்லா உரையாடல் பேசயிங்கே விரைவில் பல்வேறு காட்சிகளும் ஆளயிங்கே!

படியில்லா உரையாடல் பேசயிங்கே விரைவில்
பல்வேறு காட்சிகளும் ஆளயிங்கே!
முடிவில்லா நாடகங்கள் நாளுமிங்கே –விரைவில்
முடிவுபெறும் நாளும்வரும் பாருமிங்கே!
வடிவில்லா பாத்திரங்கள் நடிக்கயிங்கே-விரைவில்
வந்திடுமாம் வடிவதற்கு காண்பீரிங்கே!
விடிவில்லா இரவுகளாம் இன்றேயிங்கே-விரைவில்
விளக்கமுற அறிவீர்கள தெளிவாயிங்கே!


புலவர் சா இராமாநுசம்

Monday, October 9, 2017

ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம் ஊரை ஆளச் சென்றீர்கள்!ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம்
   ஊரை ஆளச் சென்றீர்கள்!
கேட்டு வாங்கிப் போனீர்கள-பின்
   கேடே செய்வதாய் ஆனீர்கள்!
நாட்டு  நடப்பைப் பாருங்கள்-மிக
   நன்றா? ஒன்றா? கூறுங்கள்!
காட்டுக் கூச்சல் இன்றேதான்-தினம்
   கட்சிகள் செய்வது ஒன்றேதான்!

மக்கள் அவையே கூடுவதும்-உடன்
   மாநில அவையே கூடுவதும்
தக்கது எதுவும்  நடக்கவில்லை-உண்மைத்
   தகவலை  எவரும் கொடுப்பதில்லை
அக்கரை இல்லா ஊடகங்கள்-நடப்பது
  அனைத்தும்  இங்கே  நாடகங்கள்
துக்கமே உண்டா துளிகூட-காணும்
     தொடர்கதை ஆனது நாம்வாட

ஒவ்வொரு முறையும் நடக்குதய்யா-தினம்
     உண்மை! உண்மை! இதுபொய்யா
இவ்வகை நடப்பின் எவ்வாறே-நாடு
    ஏற்றம் பெறுமா? அறிவீரே!
செவ்வகை ஆட்சி நடைபெறுமா?-நன்கு
    சிந்தனை செய்யின் தடைபடுமா!
எவ்வகை நலமென அவைதன்னில்-பேசி
    எடுப்பதே முடிவு சரியெண்ணில்!
             
                    புலவர் சா இராமாநுசம்

Sunday, October 8, 2017

முகநூல் பதிவுகள்!அண்ணா தி மு க தற்போது
இரட்டை மாட்டு வண்டிபோல
ஆகிவிட்டது புதிய ஓட்டுனர் வந்து விட்டார்!
வண்டி இனி, எப்படி போகுமென பார்ப்போம்

இன்று தமிழ்நாட்டிலே முதல்வர் பதவிக்குத்தான் ஏகப்பட்ட
போட்டி! அடடா !பலபேர் அந்தக்
கனவிலேயே மிதக்கிறார்கள்! காரணம் அரசியலில் அமைச்சராக ,ஒரு தகுதி என்று ஏதும் இல்லை!கைநாட்டு கூட அமைச்சராகலாம்

உறவுகளே!
வரும் செய்திகளைப் பார்க்கும்
போது பி ஜே பி கட்சிக்குள் ஏதோ
குழப்பம் உள்ளது தெரிகிறது பிரதமர் மோடிக்கு
எதிராக குழு ஒன்று உருவாவதும் தெரிகிறது
விரைவில் மாற்றங்கள் வராது என்றாலும் அதற்கான வாய்ப்புகள்,அறுகுறிகள் தென்படுகின்றன!


நஞ்சுண்டவன் சாவான் என்று
சொன்னால்! நஞ்சுண்டவள்,,
சாவாளா என்று கேட்பவரை என்ன வென்று சொல்வது! அவள் மட்டுமல்ல, அவர்கள் ,அது ஆக அனத்தும் சாகும்!என்பது
தெரிந்தும் கேட்பது விதண்டா வாதம் தானே! இப்படித்தான் நாம் எழுதும் பதிவுகளில் மறுமொழியாக
சிலர் கேட்கிறார்கள்!


மைய, மாநில அரசுகள் , திட்டங்கள் தீட்டுவது நாட்டு
மக்களின் நன்மைக்கே என்பது தவறல்ல ! ஆனால் , அத்திட்டங்கள் நடைமுறையில் வெற்றியின்றி தோல்வி அடையுமானால் அதனை மாற்றிக் கொள்வதும் தவறல்ல ! அதனைஏதோ தங்கள் மானப் பிரச்சனை யா்க எண்ணுவது தான் தவறாகும்


புலவர்  சா  இராமாநுசம் 

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...