Thursday, March 8, 2012

பெண்களே ஒன்று கூடுங்கள்! பேசியே முடிவைத் தேடுங்கள்!ம


மகளிர் தினமும் இன்றாமே
மகிழும் நிலையா? அன்றாமே!
புகலும் இன்றும் என்னநிலை
பொய்யர்கள் பேசும் மாயவலை

இடமே தனியே ஒதுக்கீடு
ஏனோ பலப்பல குறுக்கீடு
திடமே இல்லை யாருக்கும்
தினமே சொல்வது பேருக்காம்

எத்தனை ஆண்டுகள் போயிற்று
என்ன நடைமுறை ஆயிற்று
ஒத்த கருத்தும் இல்லையே
உதடு உதிர்ப்பது சொல்லையே

மக்கள் அவையே கூடுவதும்
(ஏ)மாற்றக்  கருத்தைத் தேடுவதும்
வெக்கக் கேடாம் சொன்னாலே
வேதனை வேதனை இந்நாளே

அந்தோ பாபம் இந்நாளை
அறியா மகளிர் தம்நாளை
வெந்தே தானேக் கழிக்கின்றார்
வீணே இறைவனைப் பழிக்கின்றார்

பெண்களே ஒன்று கூடுங்கள்
பேசியே முடிவைத் தேடுங்கள்
ஆண்களை நம்பின் மோசமே
அடைவீர் மேலும் நாசமே

விரைவில் உமக்கெனத் தனிக்கட்சி
விளைந்தால் மாறும் இக்காட்சி
குறையில் அதனைச் செய்வீரே
கொடுமை நீங்கும் உய்வீரே

சாதி வேண்டாம் உம்மிடையே
சமயம் வேண்டாம் உம்மிடையே
பீதி வேண்டாம் உம்மிடையே
பிரிவினை வேண்டாம் உம்மிடையே

நீதி கேட்டே வருகின்றீர்
நியாயம் கேட்டே வருகின்றீர்
வீதியில் இறங்கி நில்லுங்கள்
வெற்றியே முடிவாய்க் கொள்ளுங்கள்

            புலவர் சா இராமாநுசம்
  

Wednesday, March 7, 2012

வரும் வரலாற்றில் பெரியப் புகழ்த்தருமே!


செய்தீர் இதுவரை பாபம்தான்!-இனியும்
   செய்தால் தமிழர் கோபம்தான்!
எய்யும் அம்பென எழுந்திடுமே-நம்
   ஏக இந்தியா விழுந்திடுமே!
பொய்யில்! உண்மை அறிவீரே-ஓட்டு
  போடுவீர் இலங்கைக்கு எதிராக
ஐயா! மத்தியில் ஆள்வோரே-ஈழம்
   அமைந்திட தமிழர் வாழ்வாரே!

ஜெனிவா நாட்டில் கண்டணமே-நாடுகள்
    சேர்ந்து செப்பிட அக்கணமே
துணிவாய் அதனை ஆதரித்து-மேலும்
    துணையாய் இருக்க வேண்டுமென
கனிவாய் தொழுது சொல்லுகின்றோம்-பாபக்
    கழுவாய் இதுவென கொள்கின்றோம்
இனியார் எதுவும் சொன்னாலும்-நீர்
    இதனைச் செய்யின் பழிமாளும்


மூன்றாம் ஆண்டும் ஓடியதே-அங்கே
   முள்ளால் வேலி தோன்றியபின்
சான்றாம் கொடுமைக்கு அளவுண்டா-தினம்
   சாகவும் வாழவும் வழியின்றி
ஈன்றாள் ஈண்டான் இல்லாது-அந்தோ
   எத்தனை குழைந்தைகள்! விழியின்றி
ஒன்றா இரண்டா சொல்வதற்கு-இந்த
   உலகம் உணர்ந்து கொள்வதற்குஇந்தியக் குடியினர் தமிழினமே-என்ற
    எண்ணம் வைத்தால் உம்மனமே
சிந்திய உதிரம் காய்ந்திடுமே-வெறி
    சிங்களர் கொட்டம் ஓய்திடுமே
நிந்தனை பெற்றது மறைந்துவிடும்-ஏற்ற
   நேரம் இதுவென உணர்ந்துவிடும்
வந்தனை செய்வர் அனைவருமே-வரும்
   வரலாற்றில் பெரியப் புகழ்த்தருமே!

                     புலவர் சா இராமாநுசம்
  

Monday, March 5, 2012

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்...!


மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தன்னால் இயன்ற உதவிகள் செய்வீர்!
ஏழைகள் என்றும் இன்புடன் வாழவும்
பேழையுள் வைக்கும் பணமது கொண்டும்
அற்றார் அழிபசி தீர்தல் இன்றே
பெற்றான் பொருளை வைப்புழி என்றே
ஐயன் வள்ளுவர் அறைந்தார் அன்றே
பொய்யில்!உண்மை! உணர்வோம் நன்றே!

முன்னோர் உரைத்த முதுமொழி தன்னை
பொன்னே போல போற்றுவோம்! அன்னை
தன்நிகர் இல்லாத் தமிழ்மொழி போற்றி
இன்முகம் காட்டி இன்சொல் சாற்றி
மாற்றார் ஆயினும் மதித்து நடக்கும்
ஆற்றல் கொள்வீர்அன்பால் வெல்வீர்
இயற்கை தன்னின் இயல்பைக் காப்போம்
செயற்கை செய்யும் சிதைவை தடுப்போம்!

நல்லன கண்டு நாளும் செய்வோம்!
அல்லன செய்ய அஞ்சின்! உய்வோம்!
உடுக்கை இழந்தவன் கைபோல் சென்றே
இடுக்கண் களைவது நட்பாம் என்றே
வாழின் வையம் வாழ்த்திடும்! ஆமே!
சூழும் பெருமையும் வந்திடும்! தாமே!
கண்ணியம் கடமை கட்டுப் பாடனென
அண்ணா வழியில் அனைவரும் வாழ்வோம்இப்படி வாழின் என்றுமே பெருமை
ஒப்பிட இயலா! உரைப்பதோ அருமை!
எப்படி யேனும் வாழ்ந்தால் சரியென
தப்படி வைத்தால் தண்டணை உரியன
அறிவீர்! தெளிவீர்! ஆவன உணர்வீர்!
பெறுவீர் வெற்றி!பேதமை அகற்றி
ஒன்றே செய்யினும் நன்றே செய்க
நன்றே செய்யினும் இன்றே செய்க!

                  புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...