Saturday, August 30, 2014

வேங்கடவன் நினைவு! விளைவு! வேண்டுதல் புனைவு!

இன்று சனிக்கிழமை அல்லவா...!வேங்கடவன்  நினைவு!


ஏழுமலை வாசா எனையாளும் பெருமானே
எண்ணற் றோர் பலர் கூடி-நாளும்
வாழும் வழிநாடி வருகின்றார் உனைத் தேடி
வரிசையிலே நிற்பதும்! காணக்கண் -கோடி
சூழும் இடர்தம்மை சுடர்கண்ட பனியாக்கி-வரும்
சோதனைகள் இல்லாது சுகமாக அருள்நோக்கி
பாழும் மனமெல்லாம் பதப்படுத்த தூண்டுகிறேன்
பரந்தாமா !உன்பாதம் பணிந்துநான் வேண்டுகிறேன்

புலவர் சா இராமாநுசம்

Tuesday, August 26, 2014

முன்னர் முகநூலில் மொழிந்தவை!

உறவுகளே! வணக்கம்!
இன்று , தந்தையர் தினமாம்! பலரும் எழுதுகின்றார்கள் !
பெற்றவள் தாய் என்றால் , பெற்றவன் தந்தைதானே! அவர்கள்
பெற்றது( மகனோ,மகளோ ) யாரானாலும், அது உண்மைதானே!
எனவே ,அவர்களைப் வாழ்த்துவதோ , நன்றி சொல்லுவதோ
முறைதானே!
இங்கே , வள்ளுவர் கூட தந்தையர் தினம் பற்றி சொல்லியுள்ளதைப் பார்போமா!!!
தந்தைக்குத் தள்ளாமைத் தோன்றும் போது , கனோ, மகளோ
தாங்கிப்பிடித்து உதவேண்டுமென்று சொல்லாமல், இத், தந்தை, இப்படிப்பட்ட மக்களைப் பொறுவதற்கு என்ன தவம் செய்தானோ என்று , மற்றவர்(உலகத்தவர்) பேசும் படியாக இருத்தல் வேண்டும்
என்பதை, கடமை என்று கூட சொல்லாமல், உதவி என்றே சொல்லியுள்ளது வியக்கத் தக்கதல்லவா!

மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லென்னும் சொல்- குறள்

சொல்லுகின்ற பொருள் ,நல்லதோ, கெட்டதோ ,எதுவானாலும், அதனைச் சொல்லுகின்றவர் , உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ ,எவரானாலும்,நாம், அப்பொருளைப் பற்றி ஆராய்ந்து, அதன் உண்மைப் பொருளை உணர்வதுதான் அறிவாகும்!!

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவுகுறள்

எந்த ஒரு செயலையும் செய்ய முற்படும்போது அதனைப் பற்றி நன்கு ஆராய்ந்து.தகுதியான ஒருவனிடம் ஒப்படைக்க , வேண்டும்
அதாவது, இந்த, செயலை ,இப்படிப் பட்ட வழிகளின் மூலமாக,
இவன், செய்து முடிக்க வல்லவன் என ஆய்ந்து,அறிந்து அச்செயலை
அவனிடத்தில் விட வேண்டும்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்- குறள்

உறவுகளே!
உலகில் பொருள்!(காசு)இல்லாமல் எவரும் வாழ முடியாது என்பது, அனைவரும் அறிந்ததே! அதனால் அனைவரும் வாழ்வு வளம்காண அதனைத் தேடத்தான் வேண்டும்! சிலரை, ஓடிஓடி சம்பாதிக்கிறான் என்றுகூட சொல்வதுண்டு!
ஆனால், அச்செல்வத்தை நீங்கள தேடவேண்டிய அவசிமில்லை! அந்த செல்வமே நீங்கள் இருக்கும் இடத்தின் வழியைக் கேட்டு தானே வரும்! எப்பொழுது தெரியுமா! நீங்கள செய்யும் எந்த தொழிலையும் சோம்பலின்றி , ஊக்கத்தோடு உழைத்தால் போதும் என்பதாம்.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை . (குறள்)
அதர்--வழி, உழை--இடம்

புலவர்  சா  இராமாநுசம்Sunday, August 24, 2014

காந்தியவாதி சசிபெருமாள் உண்ணாவிரதம்!


காந்தியவாதி சசிபெருமாள் உண்ணாவிரதம்!

உண்ணாமல் இருக்கின்றார் ஒருவர் இங்கே
உயிர்நாளும் ஊசலாட காண்பார் எங்கே?
மண்ணாள வந்தோரோ மாற மாட்டார்
மதுவிலக்கு கொண்டுவர திட்டம் தீட்டார்!
எண்ணாது எதற்காக விரதம் ஐயா
இருக்கின்றீர் கைவிட வேண்டும் ஐயா!
கண்ணான ஓருயிரும் போகும் முன்னே
கருணைவிழி திறக்காதா ? விளைவு என்னே!

கரம்குவித்து வேண்டுகிறோம் முடித்துக் கொள்வீர்
காந்தீய வாதிநீர் ! ஒருநாள் வெல்வீர்!
அறவழியில் போராட்டம் போதும் இதுவே
அண்ணல்வழி கொண்டீர்கள் ஒழியும் மதுவே!
தரமழிக்கும் குடிப்பழக்கம் ஒழியும் நாளே
தமிழ்நாட்டுத் தாய்குலமே வாழும் நாளே!
சிரம்தாழ்த்தி வேண்டுகிறேன் மீண்டும் மீண்டும்!
சிந்தித்து கைவிடவே வேண்டும் வேண்டும்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...