Saturday, March 8, 2014

உலகப் பெண்கள் தினம்!


உலகப் பெண்கள் தினம்

உலகப் பெண்கள் தினம்பற்றி-மிக
உயர்ந்த மேடையில் பறைசாற்றி!
திலகம் அடடா அவரென்றே-நாம்
தினமும் போற்றுதல் மிகநன்றே!
ஆனால்,
மகளிர்க் கென்றே ஒதுக்கீடும்-ஏனாம்
மக்கள் அவையில் குறுக்கீடும்
சகல கட்சிகள் ஒன்றாகி-பெரும்
சாதனை நிகழ்த்த நன்றாக!
புகல என்னத் தடையங்கே-ஆண்டுகள்
போனது பலவே விடையொங்கே?
மகளிர் கென்றே தனிக்கட்சி-உடன்
மகளிர் தொடங்கின் வருமாட்சி!

தொடங்க வேண்டும் இக்கணமே-மெகா
தொடரும் முடியும அக்கணமே!
அடங்கும் ஆணின் ஆதிக்கம்-பெண்கள்
அணியெனத் திரண்டால சாதிக்கும்!
செய்வீரா--?

புலவர் ச இராமாநசம்மீள் பதிவு- 2011

Friday, March 7, 2014

என் முகநூலில் முகம் காட்டிய முத்துக்கள்!

ஒருவர், யாரிடமும் அளவின்றி உதவிகளை எதிர் பார்க்கக் கூடாது! அதுபோலவே, யாருக்கும் அளவின்றி உதவிகளைச் செய்யக் கூடாது!

உலகத்திலுள்ள , எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் (அருள்) காட்டி வாழ்கின்ற ஒருவனுக்கு தன் உயிரைக் காப்பதுபற்றி அச்சப்படத் தேவையில்லை!

மன்னுயிர் ஓம்பி அருள்வார்க் கில்பென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை- குறள்

உங்கள் குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டுமா! அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் வரவு எவ்வளவோ அதற்குள் உங்கள் செலவும் அடங்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்! வீண்செலவுகளே குடும்ப அமைதியைக் கெடுக்கும்

குடும்பத்தில் கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ, சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் அறவே கூடாது . அதனால்
இருவரிடையே உள்ள உறவு கெடும்! மேலும் குடும்பத்தில் அமைதி நிலவ, சகிப்புத் தன்மை ,விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகிய மூன்றும் இருவரிடத்தும் அவசியம் தேவை!

இன்று நாடெங்கும் நாள்தோறும் அரசியல், அல்லது இலக்கியம் சார்ந்த மேடைகளில் சொற்பொழிவு நடந்து கொண்டுதான் இருக்கின்றன! ஆனால் அச் சொற்பொழிவு எப்படி இருக்க வேண்டுமென்றால், கேட்கின்ற மக்கள் தம்மை மறந்து , அச் சொற்பொழிவில் மயங்கி ஈடுபாடு காட்டுவதாக இருக்க வேண்டும்! மேலும் அச் சொற்பொழிவை நேரில் கேட்காதவர்களும், தாம் கேட்க இயலாமல் போய்விட்டதே என்று ஏங்கி விரும்புவதாக இருக்க வேண்டும்

கேட்டார்ப் பிணிக்கும் தகைஅவாய்க் கேளாரும்
வேட்ப .மொழிவதாம் சொல்குறள்

ஆற்றின் நீர் ஓடிக்கொண்டே இருந்தால் தான் , நீர் தூய்மையாக இருக்கும்! தென்றல் மென்மையாக, வீசிக் கொண்டே இருந்தால் தான் இதமாக இருக்கும்! அதுபோல
மனிதருடைய உள்ளத்திலும் எழும் எண்ணங்களும் நேர்மையும், உண்மையும் கொண்டு, ஓடுகின்ற நீராக, வீசுகின்ற தென்றலாக இருப்பின் வாழ்வு தூய்மையாக
அமையும்!

                    புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, March 5, 2014

அதிகார போட்டியால் ஏழு பேரே –விடுதலை ஆகாமல் , தவிக்கின்றார்!! அறியும் ஊரே!


அதிகார போட்டியால் ஏழு பேரே –விடுதலை
ஆகாமல் , தவிக்கின்றார்!! அறியும் ஊரே!
இதுகாறும் பெற்றதுயர் போதா தென்றா –மேலும்
இவ்வாறு செய்வது! ஈகோ ! நன்றா!
மதுவுண்டு தள்ளாடும் மனிதர் போன்றே-சட்டம்
மயக்கத்தில் தள்ளாட , காணல் சான்றே!
எதுவுண்டு இந்நிலை மாற்றும் வழியே –வரும்
எதிர்காலம் தீர்காத இந்தப் பழியே!


                       புலவர்  சா  இராமாநுசம்

Monday, March 3, 2014

இனிய உறவுகளே! வணக்கம்!

 


இனிய உறவுகளே! வணக்கம்[

நேற்று காலை எனது இல்லதில் பத்துமணியளவில் ஒரு சிறிய பதிவர் சந்திப்பு நடந்தது! கலந்துரையாடியோர் பட்டியல்!

சீனு, பிரபகிருஷ்ணா, சிவகுமார், அரசன், டி.என்.முரளிதரன், வெற்றிவேல், பாலகணேஷ், புலவர் இராமாநுசம், சேட்டைக்காரன், கே.ஆர்.பி.செந்தில், மதுமதி, ஸ்கூல் பையன், ரூபக் ராம் ஆகியோர் ஆவர்!

பல, செய்திகளை பேசினோம் ! என்றாலும்,
குறிப்பாக சவுக்கு இணையதளத்தை முடக்கு மாறு நீதி மன்றமே ஆணையிட்டுள்ளதை கண்டு வந்த அனைவரும் தங்கள் கவலையை தெரிவித்தனர் !ஆரசியல் வாதிகளின் ஊழலையும் மற்ற ஊழலையும் அம்பலப்படுத்தும் (ஆதாரத்தோடு) சவுக்கு இணைய தளத்தை,தவறான செய்தி தந்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் யாருக்கும்
கருத்து வேறுபாடு இல்லை! அவ்வாறு செய்யாமல் இணைய
தளத்தை முடக்க முயல்வது சனநாயக நாட்டில் முறையல்ல என்பதே அனைவரின் கருத்தாக இருந்தது

அனைத்து ஊடகங்களும் அறவழியில் முறையாக
தங்கள் அச்சத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்!!!

செய்வீர்களா!!!?


              புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...