Saturday, September 2, 2017

இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே!இனிய உறவுகளே !
இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும்
இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே!
நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே ! –இவன்
நான்பெற்ற இளையமகள் பெற்ற சேயே!
அன்றெந்தன், துணைவியவள் விட்டுச் சென்றாள்-பெற்ற
அன்னையென அன்புதர மகளே ! நின்றாள்
ஒன்றென்ன பெற்றமகன் வாழ்க என்றே- வலை
உறவுகளே! வாழ்த்துங்கள்! இவனை நன்றே


உலகத்தில் ,உத்தமனாய் அவன்வாழ வேண்டும்! –கண்டே,
உள்ளத்தில் உவகைமிக உருவாக யாண்டும்!
திலகமென , படிப்போடு , பண்பாடும் கற்றே-பலரும்
தெரிவிக்கும் பாராட்டே, பட்டமென பெற்றே,
அன்புமிக அடக்கமொடு வளர்ந்திடவே, வாழ்த்தி!-வலை
அன்பர்களே! கரம்கூப்பி சிரம்தன்னைத் தாழ்த்தி
இன்புமிக உறவுகளே! நான்வேண்டு கின்றேன்!-என்றும்
இதயத்தில் வாழ்வோரே உமைத்தூண்டு கின்றேன்!

நன்றி! வணக்கம்!
புலவர் சா இராமாநுச

Thursday, August 31, 2017

பிறந்த இடம்விட்டுப் போனாலும் உமையெல்லாம் மறந்து விடுவேனா மறுபடியும் வருவேனே!நித்தம் ஒருகவிதை  நிலையாக  எழுதிவிட
சித்தம்  இருந்தாலும்  செயல்படுத்த  இயலவில்லை!
முதுமை  முன்னாட   முதுகுவலி பின்னாட
பதுமை  ஆகிவிட்டேன்  பதிவெழுதா  நிலைபட்டேன்!

மோனை  எதுகையென  முறையாக  எழுதியவன்
சேனை இழந்தரசாய் செயலற்றுப்  போய்விட்டேன்!
தும்பிக்கை இழந்ததொரு  யானையெனத் துயர்பட்டே
நம்பிக்கைப் போயிற்றாம் நல்லோரே ! மன்னிப்பீர்!

படிப்பவரும்  குறைந்துவிட்டார் பலபேரைக்  காணவில்லை
துடிப்பாக மறுமொழிகள் தொடுப்பவரும்   காணவில்லை!
உடலுக்கே  சோதனைதான் உள்ளத்தில் வேதனைதான்
கடலுக்கே அலைபோல  கவலையிலே  மனமோயா!

மாற்றுவழி  தேடினேன் முகநூலால்  தேற்றினேன்
சாற்றினேன் அதன்வழியே ஆற்றியது ஓரளவும்!
உம்மை மறபேனா ?  ஓடிவந்தேன் இங்கேயும்
எம்மை  மறந்தாரை  யாம்மறக்க  மாட்டோமால்!

சிந்தனையின்  துளிகளெனச்  சிலவரிகள் எழுதினாலும்
வந்தவர்கள்  பலநூறாம் வருகின்றார்  தினந்தோறும்!
விந்தையதில்  என்னவெனில் விரிவாக  சொல்வதெனில்
சந்தையது அப்பப்பா ! சந்தித்தேன் அங்கேதான்!

வலைதன்னில்  காணாத  பலபேரும்   அங்கே
நிலைகொண்டு எழுதியே  பெற்றார்கள்  பங்கே
பிறந்த  இடம்விட்டுப்  போனாலும்  உமையெல்லாம்
மறந்து விடுவேனா  மறுபடியும்  வருவேனே!
                       புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, August 30, 2017

இறைவா எங்கே இருக் கின்ராய்-வீணில் ஏனோ எம்மை வதைக்கின்ராய்
இறைவா எங்கே இருக் கின்ராய்-வீணில்
ஏனோ எம்மை வதைக்கின்ராய்
மறைவாய் அவரும் இருந்து கொண்டே-குறைமிகு
மாண்பிலா இருவர்தமை விண்டே
திரையார் பொம்மையின் ஆட்ட மென்றே-இங்கே
தினமே ஆளும் அரசுமொன்றே
விரைவாய் நீங்கிட கருணை  வைத்து-காணும்
வேதனைப் போக்கிட வருவாயா


புலவர் சா இராமாநுசம்

Monday, August 28, 2017

கீழோ ராயினும் தாழஉரை கேடோ! குறையோ! அல்ல! நிறை!நினைத்து நினைத்துப் பார்க்கின்றேன்
     நினைவில் ஏனோ வரவில்லை!
அனைத்தும் மனதில் மறைந்தனவே
    அறிவில் குழப்பம்  நிறைந்தனவே!
தினைத்துணை  அளவே செய்நன்றி
    தேடிச் செய்யின் மனமொன்றி!
பனைத்துணை யாகக் கொள்வாரே
    பயனறி உணரும் நல்லோரே!

அடுத்தவர் வாழ்வில் குறைகண்டே
     அன்னவர் நோக அதைவிண்டே!
தொடுத்திடும் சொற்கள் அம்பாக
     தொடர்ந்து அதுவே துன்பாக!
கெடுத்திட வேண்டுமா நல்லுறவை
     கேடென தடுப்பீர் அம்முறிவை!
விடுத்திட வேண்டும் அக்குணமே
     வேதனை குறையும் அக்கணமே!

கீழோ ராயினும் தாழஉரை
   கேடோ! குறையோ! அல்ல! நிறை!
வீழ்வே அறியா பெரும்பேறே
   விளைவு அதனால் நற்பேரே!
பேழையில் உள்ள பணத்தாலே
   பெருமையும் வாரா குணத்தாலே!
ஏழைகள் பசிப்பிணி போக்கிடுவீர்
   இணையில் இன்பம் தேக்கிடுவீர்!

மக்கள் தொண்டு ஒன்றேதான்
   மகேசன் தொண்டு என்றேதான்!
தக்கது என்றே சொன்னாரே
   தன்நிகர் இல்லா அண்ணாவே!
எள்ளல் வேண்டா எவர்மாட்டும்
   இனிமை ஒன்றே மகிழ்வூட்டம்!
சொல்லல் யார்க்கும் எளிதன்றோ
   சொன்னதை செய்தல் அரிதன்றோ!

                  புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...