Saturday, June 21, 2014

கோட்டையை ஆள்வோர் மட்டுமே-இக் கொடுமையை நீக்க இயலாதே!



இனிய உறவுகளே ! வணக்கம் !

நேற்று நான் எழுதிய பதிவைப் படித்து விட்டு தெருக்களில் குப்பைகள் சிதறியும் ,மண்டியும் கிடப்பதற்குக்
காரணம் ,அரசு மட்டுமல்ல ,மக்களின் பொறுப்பற்ற( சிலரின்) செயலும்
ஆகும் என்பதைப் பலரும் சுட்டியதன் விளைவே இக்கவிதை!

எண்ணிப் பாரும் நல்லோரே-நல்
இதயம் படைத்த பல்லோரே
கண்ணில் படுவது வீதியிலே-எங்கும்
காகித பிளாஸ்டிக் குப்பைகளே!
விண்ணில் காற்றில் பறந்திடுமே-வந்து
விரைவாய் முகத்தில் மோதிடுமே!
திண்ணிய முடிவும் எடுப்பீரா-குப்பை
தெருவில் போடவும் தடுப்பீரா!

வீட்டை சுத்தம் ஆக்குதும்-அள்ளி
வீதியில் குப்பையைத் தேக்குவதும்!
கேட்டை நாமே தேடுவதாம்-பிறர்
கேட்பினும் , அவரைச் சாடுவதாம்!
நாட்டைக் கெடுக்கும் நோயன்றோ-தொற்று
நோய்கள் பிறக்கும் தாயன்றோ!
கோட்டையை ஆள்வோர் மட்டுமே-இக்
கொடுமையை நீக்க இயலாதே!

தொட்டி இருக்கும் ஆனாலும்-கையில்
தூக்கிக் கொண்டு போனாலும்!
எட்டி நின்றே குப்பைகளை-தூக்கி
எறிந்து விட்டுச் செல்வாரே!
தட்டிக் கேட்பின் வைவாரே-அந்த
தவறே நாளும் செய்வாரே!
கொட்டிய குப்பையோ உதறிவிட-மிக
குறையின்றி வீதியில் சிதறிவிடும்!

சொன்னால் செய்பவர் சிலபேரே-எவர்
சொல்லினும் கேளார் பலபேரே!
தன்னால் உணர்பவர் இருப்பாரே-சிலர்
தனக்கென என்றும் போவரே!
முன்னாள் அனுபவம் பலவற்றை-இங்க
முறையாய் அதிலே சிலவற்றை!
என்னால் ஏதோ முடிந்தவரை-ஐயா
எழுதினேன் தருவீர் கருத்துரையே!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, June 18, 2014

தொற்று நோயும் வருமுன்னே-எண்ணி தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை



எங்கு காணிலும் குப்பையடா-நம்
   எழில்மிகு சென்னை காட்சியடா
பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில்
    போடுவார் மேலும் எட்டியடா
தங்கும் மழையின் தண்ணீரும்-செல்ல
   தடைபட அந்தோ! மிகநாறும்
இங்கே எடுக்க ஆளில்லை-அதை
   எடுத்துச் சொல்லியும் பலனில்லை

பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
      பரவிக் கிடப்பது பெருந்தொல்லை
வேதனை  தீரும் வழிகாண்பீர்-எனில்
      வீணே நீரும் பழிபூண்பிர்
சோதனை போல கொசுக்கடியே-எடுத்து
      சொல்ல இயலா நெருக்கடியே
நாதம் இசைத்தே படைபோல-எமை
      நாடி வருமோர் தினம்போல

தொற்று நோயும்  வருமுன்னே-எண்ணிhd
     தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை
மற்றது பின்னர் ஆகட்டும்-குப்பை
     மலையென கிடப்பது போகட்டும்
குற்றம் சொல்வது  நோக்கமல-இது
     குத்தும் கவிதை ஆக்கமல
வெற்றுச் சொல்லும் இதுவல்ல-பட்ட
     வேதனை விளைவாம் இதுசொல்ல

அண்மை காலமாய் இவ்வாறே-ஏனோ
    அடிக்கடி நடப்பது எவ்வாறே
உண்மை எதுவோ வேண்டாமே-உரியோர்
    உணர்ந்தால் போதும் ஈண்டாமே
நன்மை ஒன்றே  உடன்தேவை-மா
     நகர ஆட்சிக்கு இப்பாவை
சொன்னேன் ஐயா! தவறில்லை-ஆவன
    செய்வீர் வேறு வழியில்லை!

       புலவர் சா இராமாநுசம்

மீள்பதிவு
 

Monday, June 16, 2014

பிறப்பு வாழ்வில் ஒருமுறைதன்-மேலும் இறப்பு வாழ்வில் ஒருமுறைதான்!



பிறப்பு வாழ்வில் ஒருமுறைதன்-மேலும்
இறப்பு வாழ்வில் ஒருமுறைதான்!
இருப்பது நாமே எதுவரையில்-இதை
எவரும் அறியார் இதுவரையில்!
சிறப்பு பெறநாம் வாழ்ந்தோமா-என
சிந்தனை தன்னில் ஆழ்ந்தோமா!
வெறுப்பா மற்றவர் நமைநோக்க-பெரும்
வேதனை வந்து நமைத்தாக்க!

எண்ணிப் பாரீர் மனிதர்களாய்-பல்
இதயம் வாழ்த்த புனிதர்களாய்!
மண்ணில் வாழ்ந்த காலத்தே-பிறர்
மனதில் திகழ ஞாலத்தே!
கண்ணிய முடனே வாழ்ந்தோமா-நம்
கடமை அதுவென ஆய்ந்தோமா!
பண்ணிய பாபம் ஏதுமிலை-எனில்
பயப்பட வாழ்வில் எதுவுமிலை!

மரணம் நம்மைத் தேடிவர-கேட்ட
மக்கள் அனைவரும் ஓடிவர!
வரமே பெற்றோம் நாமென்றே-அங்கு
வந்தோர் வாழ்த்த மிகநன்றே!
கரமே குவித்துக் கண்ணீரை-அவர்
காணிக்கை யாக்க பண்ணீரேல்!
தரமாம் உமது வாழ்வாகும்-பெயர்
தரணியில் என்றும் நிலையாகும்!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, June 11, 2014

முகநூல் துணுக்குகள்!




1 உறவுகளே! வணக்கம்!

உலகில் , மனிதனாகப் பிறந்த , ஒவ்வொருவரிடமும் குணமும்
உண்டு, குற்றமும் உண்டு . இரண்டின் கலவைதான் மனிதப் பிறவி
குற்றமே செய்யாதவர் ,குணமே இல்லாதவர் , என எவருமே இல்லை
ஆகவே, நாம் எவரோடு தொடர்பு வைப்பது ,என்றால் , அவரிடம் உள்ள
நல்ல குணங்களை ஆய்வு செய்தும், குற்றங்களை ஆய்வு செய்தும் ,அவற்றுள் எது அதிகமாக (குணம், குற்றம்) உள்ளதோ , அதனை ஏற்று
பழகுவது நன்று!

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.- குறள்


2 உறங்கிக் கிடக்கும் தமிழகமே! எழுவாயா! அன்றி, அழிவாயா!!!!?

முல்லைப் பெரியாறு என்றாலே , கட்சி வேறுபாடுகளை மறந்து
ஒரணியாய் திரள்கிறது கேரளம்! அதுபோலவே கர்நாடகமும் காவிரி
மேலாண்மைக் குழு அமைக்க எதிர்த்து ஒரணியாய் திரள்கிறது!! ஆனால் .......? தமிழகமோ !இங்குள்ள, கட்சிகளோ......

அவிழ்த்துக் கொட்டிய நெல்லிக்காய் மூட்டைபோல, சிதறி, உதிரிப் பூக்களாய் ஒட்டாமல் ஈகோ யுத்தம் நடத்துகின்றன! ஒன்றுபட வேண்டாமா ! நீரின்றி தமிழகம் பாலைவனம் ஆவதை தடுக்க, வேண்டாமா காலம் தாழ்த்துவது நன்றல்ல!
எனவே, மாண்புமிகு முதல்வர் அவர்களே, உரிய முயற்சி எடுத்து
அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து, ஒன்று படுத்தி அழைத்துச் சென்று பாரதப் பிரதமர் அவர்களை சந்தித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமுல் படுத்த ஆவன செய்ய வேண்டும் !




3 சொல்லுகின்ற பொருள் ,நல்லதோ, கெட்டதோ ,எதுவானாலும், அதனைச் சொல்லுகின்றவர் , உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ ,எவரானாலும்,நாம், அப்பொருளைப் பற்றி ஆராய்ந்து, அதன் உண்மைப் பொருளை உணர்வதுதான் அறிவாகும்!!

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்

4 எந்த ஒரு செயலையும் செய்ய முற்படும்போது அதனைப் பற்றி நன்கு ஆராய்ந்து.தகுதியான ஒருவனிடம் ஒப்படைக்க , வேண்டும்
அதாவது, இந்த, செயலை ,இப்படிப் பட்ட வழிகளின் மூலமாக,
இவன், செய்து முடிக்க வல்லவன் என ஆய்ந்து,அறிந்து அச்செயலை
அவனிடத்தில் விட வேண்டும்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்- குறள்


5 மாண்பு மிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு வாழ்த்தும் வேண்டுகோளும்!

ஐயா!
வரலாற்று ,சிறப்பு மிக்க வெற்றி பெற்று, பதவி
ஏற்றுள்ள தங்களை, வாழ்த்துகிறேன்! வணங்குகிறேன்! அத்துடன்,
இப் புலவனின் வேண்டு கோளாக ,ஒன்றை உங்களிடம் தாழ்மையோடு தெரிவித்துக் கொள்கிறேன்

திருமிகு, இராஜீவ் காந்தி படுகொலை பற்றிய வழக்கில்
குற்றவாளிகளாக கருதப்பட்டு ,பிறகு உச்ச நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில்
தமிழக ,மாண்பு மிகு முதல்வர் அவர்களால் விடுதலை செய்யப்பட்ட
எழுவரையும் முந்தைய மத்திய அரசு தடை விதித்து நிறுத்தி வைத்துள்ளது. இது, முறையற்ற , நியாமற்ற செயலாகும் . ஆகவே
தாங்கள் அருள் கூர்ந்து எழுவரையும் விடுதலை செய்ய , ஆணை யிட வேண்டுகிறோம்!

புலவர்  சா  இராமாநுசம்




-



Monday, June 9, 2014

பகல்கொள்ளை அடிக்கின்றார் தனியார் இன்றே- கல்விப் பணியென்ற பெயராலே நாளும் நன்றே!



பகல்கொள்ளை அடிக்கின்றார் தனியார் இன்றே- கல்விப்
பணியென்ற பெயராலே நாளும் நன்றே!
நகக்கண்ணில் ஊசிதனை ஏற்றல் போல –ஏழை
நடுத்தர குடும்பங்கள் கடனில் மாள!
அகந்தன்னில் பொருளாசை மிகுந்து போக –அரசு
அதிகார வர்கமிதை அறிந்தும் ஏக!
புகலின்றி வாடுதலும் கொடுமை அன்றோ –மக்கள்
புலம்புவதும் தீருகின்ற நாளும் என்றோ!

ஆங்கிலத்தை முதலீடாய் வைத்துக் கொண்டே –நடக்கும்
அநியாயம் இதுவென்றே எடுத்து விண்டே!
ஓங்குபுகழ் தமிழ்தன்னை ஒதுக்கித் தள்ளி –இதுவும்
ஒவ்வாது என்பாரின் உணர்வை எள்ளி!
தீங்குதனை அறியாது தேடிச் செல்வார் –கடலில்
திசையறியாக் கப்பலென! எவ்வண் வெல்வார்!
நீங்குவழி காணவில்லை! வணிகம் தானே –கல்வி
நிலையென்றால் ! அதற்காக வருந்தல் வீணே!


புலவர்  சா  இராமாநுசம்

Friday, May 30, 2014

பொற்றா மரையாக விளங்க வேண்டும் –அரசின் புகழுக்கே, சான்றாகும் ! அதுவே ஈண்டும்!





ஏழைபண  காரருக்கு  நீதி  ஒன்றே –என
    எண்ணிவிட இயலாத  நிலைதான்  இன்றே!
பேழைதனில்  உள்ளபணம் மாற்றி  விடுமே –அறப்
    பிழையன்றோ  இதனாலே  முற்றும்  கெடுமே!
கோழைகளாய்  வாய்மூட  குமுறும்  நெஞ்சம் –ஏழை
     குரலங்கே  எடுபடுமா!  அந்தோ  அஞ்சும்!
வாழவழி செய்திடுமா  புதிய  ஆட்சி –இனி
     வருங்கால நடைமுறைகள் வழங்கும்  சாட்சி!

     
வற்றாத  ஊற்றாக  ஊழல்  இங்கே –இனியும்
     வளர்ந்திட்டால் வந்திடிமா  வளமை அங்கே!
முற்றாக  ஒழித்திடவே  வழிகள்  தேடி –அதை
      முதற்பணியாய்  செய்வீரேல் நன்மை  கோடி!
உற்றாரா ! உறவினரா  உரிமை கொண்டே –எவர்
      உம்மிடமே வந்தாலும் மறுத்து  விண்டே!
பொற்றா மரையாக  விளங்க வேண்டும் –அரசின்
      புகழுக்கே, சான்றாகும் ! அதுவே  ஈண்டும்!

புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, May 28, 2014

முடிந்தது ஒருவகையாய் இங்கே எல்லாம்-இது முடியரசா ! குடியரசா ! காலம் சொல்லும்!




முடிந்தது  ஒருவகையாய்  இங்கே எல்லாம்-இது
   முடியரசா ! குடியராசா ! காலம்  சொல்லும்-பொழுது
விடிந்தாலும் வெளிச்சமது  மெல்ல  வருமே –அதற்குள்
    வேண்டாத  வாதங்கள்  தொல்லை  தருமே

மந்திரத்தால்  மாங்கயை  வீழ்த்தல்  ஆகா –ஏறிய
    விலைவாசி உடனடி  குறைந்து  போகா -உடன்
சிந்தித்து  செயல்படவும் ஆள  வந்தார் – மேலும்
    சிலமாதம் காத்திருக்க  வாக்குத்  தந்தார் !


 பழையகள்  புதியமொந்தை  ஆகா  தென்றே –நாட்டில்
     பரவலாக மக்கள்தான் பேச  நன்றே –அவர்
விழைவனவே எதுவென்று  அறிதல்  வேண்டும்- அரசு
     விரைவாக  செயல்திட்டம்  தீட்ட  வேண்டும்

ஊழலுக்கு  வழியேதும்  இல்லா  நிலையே– திட்டம்
     உருவானால் கையூட்டு தருவார்  இலையே!-அந்த
சூழலுக்கு ஏற்றபடி இருந்தால்  போதும் –திட்டம்
      செயல்பட்டால் வெளிப்படையாய்  குறையும் தீதும்


     
   
    
    
 

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...