Sunday, September 13, 2015

 அ ன்பின் இனிய உறவுளே!
வணக்கம்! கடந்த ஒரு வாரமாக கடுமையான முதுகு வலி !உரிய சிகிச்சை
எடுத்துக்கொள்கிறேன்! இன்னும் சிலநாள் ஆகலாம் ! நலமுற்றதும் பதிவு வரும் !மன்னிக்க!

  புலவர்  சா  இராமாநுசம்

Sunday, September 6, 2015

மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு ஒரு வேண்டுகோள் !

மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு ஒரு வேண்டுகோள்

கீழ் வரும் செய்தி உண்மையானால் அது ,என் போன்ற(வயது83)
மூத்த குடிமக்களுக்கு சலுகையா தண்டணையா இது ,முறையா? நியாமா!
என் போன்றோர் குடும்பத்தோடு (ஒரேயிடத்தில்) செல்வதுதானே பாதுகாப்பாகும்! இதுவரை நடைமுறையில் இருந்த இதனை மாற்ற முற்படுவதால் என்ன பயன்! இருந்த சலுகையைப் பறிப்பதா முன்னேற்றம்
அது மட்டுமல்ல, படுக்கை வசதிகூட மூத்த குடி மக்களுக்கு முன்னுரிமையாக
கீழ் படுக்கை களை ஒதுக்கும் பழைய நடைமுறை வசதியும் சத்தமின்றி நீக்கப்
பட்டுள்ளது
எனவே , காரணமின்றி காரியமாற்றும் நீதியற்ற இம் முறைகளை
தடுத்து ஆவனசெய்ய வேண்டுகிறேன்
பாதிக்கப்படும் மூத்த குடிமக்கள் சார்பாக வேண்டும்
புலவர் சா இராமாநுசம்

 
                        நாளேடு  தந்த  செய்தி
டெல்லி : ரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்கள், முழு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற திட்டத்தை, அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு, ரயில்களில் தற்போது சலுகை கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்படுகிறது. குடும்பத்தினருடன் செல்லும்போதும், இந்த சலுகை, அவர்களுக்கு கிடைக்கிறது. அடுத்தாண்டு முதல், இந்த திட்டத்தில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. railway ticket counter இதன்படி, மூத்த குடிமக்கள், தங்கள் குடும்பத்தினருடன் ரயிலில் பயணம் செய்ய நேரிட்டால், தங்களுக்கான டிக்கெட்டை மட்டும் தனியாக எடுக்க வேண்டும். இப்படி எடுத்தால், சலுகை கட்டண வசதி கிடைக்கும். குடும்பத்தினருடன், தங்கள் பெயரையும் சேர்த்து, டிக்கெட் எடுத்தால், இந்த கட்டண சலுகையை பெற முடியாது. இதுகுறித்து, அனைத்து ரயில்வே மண்டலங்களின் தலைமை வர்த்தக மேலாளர்களுக்கு, கடந்த மாதம், 31 ஆம் தேதி, ரயில்வே வாரியம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது

Saturday, September 5, 2015

ஆசிரியர் தின வாழ்த்தும், வேண்டுகோளும்!


ஆசிரியர் தின வாழ்த்தும், வேண்டுகோளும்!

அன்னையொடு தந்தைக்கு அடுத்த நிலையில்- தூய
ஆசிரியர்! இருந்தார்கள்! அன்றை நிலையில்!-இன்று
என்னநிலை பள்ளியிலே எண்ணிப் பாரீர்-அந்தோ
இதயத்தில் இடிதாக்கும் துயரம் காணீர்!-மலரா
சின்ன மொட்டும் சீரழியும் அவலம்தானே-தினம்
செய்திவரல் அழியாத கொடுமை தானே!-உடன்
இன்னல்மிகு இச்செயலை நீக்க வேண்டும்-ஆசிரியர்
இறைவன்தான் எனப்போற்ற நடக்க ஈண்டும்!


குற்றத்தை நீக்குபவர் ஆசிரியர் என்றே –முன்னோர்
கூறியதை மறையாக ஏற்பீர் நன்றே!-செய்த
அற்றத்தை மறைத்தாலும் வாழ்நாள் முற்றும்- விட்டு
அகலாது நெஞ்சத்தில் தீயாய் பற்றும்!-ஏதும்
பற்றற்ற துறவியென நடந்து கொள்வீர்-நீங்கள்
பணியாற்ற பள்ளிக்கே நாளும் செல்வீர்!-மேலும்
கற்றவழி கல்விதனை கற்கச் செய்வீர்- கடமைமிக
கண்ணியம் கட்டுப்பாடு விளங்க உய்வீர்!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, September 2, 2015

இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே!


இனிய உறவுகளே !
இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும்
இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே!
நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே ! –இவன்
நான்பெற்ற இளையமகள் பெற்ற சேயே!
அன்றெந்தன், துணைவியவள் விட்டுச் சென்றாள்-பெற்ற
அன்னையென அன்புதர மகளே ! நின்றாள்
ஒன்றென்ன பெற்றமகன் வாழ்க என்றே- வலை
உறவுகளே! வாழ்த்துங்கள்! இவனை நன்றே


உலகத்தில் ,உத்தமனாய் அவன்வாழ வேண்டும்! –கண்டே,
உள்ளத்தில் உவகைமிக உருவாக யாண்டும்!
திலகமென , படிப்போடு , பண்பாடும் கற்றே-பலரும்
தெரிவிக்கும் பாராட்டே, பட்டமென பெற்றே,
அன்புமிக அடக்கமொடு வளர்ந்திடவே, வாழ்த்தி!-வலை
அன்பர்களே! கரம்கூப்பி சிரம்தன்னைத் தாழ்த்தி
இன்புமிக உறவுகளே! நான்வேண்டு கின்றேன்!-என்றும்
இதயத்தில் வாழ்வோரே உமைத்தூண்டு கின்றேன்!

நன்றி! வணக்கம்!
புலவர் சா இராமாநுசம்

Tuesday, September 1, 2015

உழுவாரே உலகத்து அச்சாணி என்றே-நன்கு உணர்ந்திட்ட பாரதப் பிரதமரும் இன்றே!


உழுவாரே உலகத்து அச்சாணி என்றே-நன்கு
உணர்ந்திட்ட பாரதப் பிரதமரும் இன்றே!
வழுவான சட்டத்தைத் திரும்பவேப் பெற்றார்-உழவர்
வாழ்ந்திட ! மனமாற புகழ்தன்னை உற்றார்!
அழுவாராய் ஓயாது கண்ணீர் விட்டே-கடல்
அலைப்பட்ட துரும்பாக அல்லல் பட்டே!
எழுவாரா என்றநிலை முன்பே உண்டாம்- அவர்
ஏற்றமுற , யாதுவழி ஆய்தல் தொண்டாம்!


நம்நாடு விவசாய நாடும் அன்றோ!-ஆனால்
நாடாள எவர்வரினும் உணர்தல் என்றோ?
தும்போடு ஓடவிட்டு வாலைப் பற்றி – மாட்டை
துரத்துகின்ற நிலைவிட்டு சட்ட மியற்றி!
தெம்போடு பாடுபட மத்திய அரசும்-திட்டம்
தீட்டியதை செயல்படுத்த மாநில அரசும்!
தம்நாடு இதுவென்றே உழவர் எழுவார்-எவரும்
தம்நிகர் இல்லையென நாளும் உழுவார்

புலவர் சா இராமாநுசம்

Monday, August 31, 2015

தாழ்விலா இன்பம் தளிர்திடச் செய்வோம்-இந்த தரணியில் மனித நேயத்தால் உய்வோம்!


இறப்பும் பிறப்பும் இயற்கையின் நியதி-என்றே
எண்ணிடில் வாரா மரணமாம் பீதி!
உறங்கலும் விழித்தலும் போன்றதே என்றே –எடுத்தே
உரைத்தவர் வள்ளுவப் பெருந்தகை அன்றே!
சிறப்பினைக் கொண்டது மானிடப் பிறப்பே- எதையும்
சிந்தித்து செயல்படின் தேவையில் துறப்பே!
அறப்பணி ஆற்றுவீர் அன்பினைப் போற்றுவீர்-மக்கள்
அறிந்திட மனித நேயத்தைச் சாற்றுவீர்!


வாழ்வும் வீழ்வும் வருவதே நம்மால் –வாழ்வில்
வாரா அணுவும் மாற்றார் தம்மால்!
ஊழ்வினை எனினும் முயன்றால் போமென-எடுத்தே
உரைத்தவர் வள்ளுவப் பெருந்தகை ஆமென!
சூழ்வினை சூழ்ந்து சொல்வதை ஆய்ந்தே-எதையும்
சொல்வதும் செய்வதும் ஒன்றென வாழ்ந்தே!
தாழ்விலா இன்பம் தளிர்திடச் செய்வோம்-இந்த
தரணியில் மனித நேயத்தால் உய்வோம்!

புலவர் சா இராமாநுசம்

Saturday, August 29, 2015

பெண்ணே எரிந்து போனாயே-உயிர் பிரிந்து எங்கே போனாயோ?




                    பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி கடந்த 2011ம் ஆண்டு தீக்குளித்து  உயிர்நீத்த செங்காடியின் 4ம் ஆண்டு நினைவு தினம்!  செங்கொடியின்  நினைவஞ்சலியாக அன்று  நான் எழுதிய கவிதை                      

           மீள்பதிவு!

பெண்ணே எரிந்து போனாயே-உயிர்
   
பிரிந்து எங்கே போனாயோ!
விண்ணே நீயும் சென்றாயா-ஓடி
   
வேலூர் சிறையில் நின்றாயா!
கண்ணீர் வற்ற அழுகின்றார்-மக்கள்
   
கதறி துயரில் விழுகின்றார்!
 
எண்ணீர் மத்தியில் ஆள்வோரே-இனியே
   
எத்தனை உயிர்கள் மாள்வாரே!

 
வஞ்சம்  மட்டுமே உருவாக-மூவர்
     
வாழ்வைப் பறிக்கும் கருவாக!
 
நெஞ்சம் இரங்கா நிலைநன்றா-உயிரும்
    
நீங்கின் மீண்டும் வருமொன்றா!
 
தஞ்சம் அடைந்த  பறவைக்கும்-தனது
    
தசையைத் தந்தவன் தமிழனடா!
 
பஞ்சில் நெருப்பைக் கொட்டாதீர்-தீயும்
     
பற்றி எரியும் திட்டாதீர்!

 
முடிவை ஆவர்கள் எடுக்கட்டும்-நாமே
    
முடங்கியா விடுவோம் ஆகட்டும்!
 
அடங்கி நடக்கும் தமிழனுக்கு-பிறரை
    
அடக்கவும் தெரியும் தமிழனுக்கு!
 
திடமாய் முடிவு  எடுப்பாராம்-அவரே
    
தினமும் அறப்போர் தொடுப்பாராம்!
 
விடவே மாட்டோம் என்பாரா-வீணில்
    
விடத்தை அவரே தின்பாரா !

 
இனிமேல்  உயிர்பலி வேணாவே-இன்று
   
இழந்தோம் செங்கொடி வீணாவே!
 
குனியோம் எவர்கும் குட்டகுட்ட-என்ன
   
கோழையா நாமே தரைமுட்ட!
 
கனிவாய்ச் சொல்லியும் பயனில்லை-உயிரைக்
   
காக்க தமிழரே உடன்ஒல்லை!
 
துணிவாய் தொடங்கும் அறப்போரே-மூவரின்
   
தூக்குக்  கயிற்றை அறுப்பீரே!

புலவர்  சா  இராமாநுசம்


இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...