Saturday, October 31, 2015

நினைவும் கனவும்!


நினைவு!

கரைதாண்டி வாராத அலைபோல நினைவே-நெஞ்சக்
கண்மூட முயன்றாலும் கலையாத கனவே
தரைபட்ட மீனாக துடித்திடுவாய் ஏனோ-உரிய
தடமாறி தடுமாறி தவித்திடுவாய் தானோ
சிறைபட்ட பறவையென சிலநேரம் கிடப்பாய்-உயர்
சிந்தனையின் வயப்பட்டே கவிதைகளைப் படைப்பாய்
குறைபட்டும், குறைசொல்லும், குறையெதற்காம்! தேவை-நற்
குணங்காணும் வழிச்சென்று செய்திடுவாய் சேவை


புலவர் சா இராமாநுசம்

Thursday, October 29, 2015

வெண் மதியும் வீசும் தென்றலும்!


மதி!
விண்மீது தவழ்கின்ற வெண்மதியைப் பாராய்-இரு
விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய்!
மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை
மழைமேகம் சிலபோது மறைக்கின்ற தாலே!
கண்பட்டே விட்டதென கலங்கிடவும் நெஞ்சம்-அந்த
கருமேகம் விளையாடி போவதென்ன கொஞ்சம்!
தண்ணென்ற குளுமைதனைத் தருகின்ற நிலவே-நாளும்
தருகின்ற கற்பனைகள் சொல்வதெனில் பலவே!


தென்றல்!
தவழ்ந்தோடி வருகின்ற தென்றலெனும் காற்றே-மேனி
தழுவுகின்ற காரணத்தால் இன்பமது ஊற்றே!
உவந்தோடிப் பெருகிடவும் கரைகாண வெள்ளம்-நன்கு
உருவாகி உணர்வாகப் பாயுதுபார் உள்ளம்!
சிவந்த்தோடும் வெட்கத்தில் காதலியின் முகமோ-உனை
செப்பிடவும் ஒப்பிடவும் காதலிக்கும் அகமோ!
தவழ்ந்தாடி வருகின்றாய் தென்றலெனும் சேயோ-இன்பத்
தமிழ்போல எமைநாடி தொடுகின்ற தாயோ!

 
புலவர் சா இராமாநுசம்


Thursday, October 22, 2015

தீண்டாமை இழிசொல்லாம்! இன்னும் நாட்டில்-எரிக்கும் தீயாக இருப்பதனைக் கண்டோம் ஏட்டில்!



உயிரோடு எரிக்கப் பட்ட இளம் குழந்தைகள் கொடுமை! கவிதை! மீள்பதிவு!
கீழே (இன்றும் பொருந்தும்)

தீண்டாமை இழிசொல்லாம்! இன்னும் நாட்டில்-எரிக்கும்
தீயாக இருப்பதனைக் கண்டோம் ஏட்டில்
வேண்டாமைஅதுவென்றே காந்தி, பெரியார்-மிக
வீறுகொண்டு எதிர்த்திட்ட பெருமைக் குரியார்
பூண்டோடு ஒழிந்ததெனப் பெருமைப் பட்டோம்-அது
போகவில்லை!அறிந்தோமே! சிறுமைப் பட்டோம்
மாண்டானே,கோகில்ராஜ் ! சாதி! வெறியில்-அந்தோ
மாறாதா!? இந்நிலையே! நீதி! நெறியில்!


ஆதிக்க மனப்பான்மை ஒழிய வில்லை-நாட்டில்
ஆங்காங்கே தோன்றினால் வருமே தொல்லை
நீதிக்கே புறம்பாக நடத்தல் நன்றா-பேதம்
நீக்குவோம் ஒற்றுமை காணும் ஒன்றாய்
சாதிக்கு இனியிங்கே இடமே இல்லை-நம்முள்
சமத்துவம் மலர்ந்திட வேண்டும் ஒல்லை
போதிக்க இனியாரும் தோன்ற மாட்டார்-சாதிப்
போராட்டம் வளர்க்கவும் ஆர்வம் காட்டார்

ஒன்றேதான் குலமென்றார் தேவன் என்றார்-என்றே
உரைத்திட்ட அறிஞரும் விண்ணே சென்றார்
நன்றேதான் அதுவென்றே ஏற்றுக் கொண்டோம்-நமே
நாடெங்கும் கொள்கையாய் பரப்பி விண்டோம்
இன்றேதான் தெரிகிறது தொற்று நோயே-சாதி
இழிவின்னும் அழியாத நச்சுப் பேயே
என்றேதான் ஒழியுமோ? இந்தக் கொடுமை!-நெஞ்சம்
ஏங்கிட நீங்குமா சாதி மடமை!

 புலவர் சா இராமாநுசம்

Tuesday, October 20, 2015

வலைவழிப் பலரும் வந்தீர்கள் –என்னை வாழ்த்தியே அன்பைத் தந்தீர்கள்!



வலைவழிப் பலரும் வந்தீர்கள் –என்னை
வாழ்த்தியே அன்பைத் தந்தீர்கள்
இலைநிகர் அதற்கென மகிழ்கின்றேன்-நாளும்
இருகரம் கூப்பித் தொழுகின்றேன்
அலைபடும் கடற்கரை மணலாக-எரியும்
அணல்தனை அணைக்கும் புனலாக
நிலையென உம்முடை வரவுகளே-தேயா
நிலவெனக் கண்டேன் உறவுகளே


அன்பினை அடக்கிட தாளில்லை-என்றே
ஐயன் சொன்னது தவறில்லை
என்பினை போர்த்திடும் தோலாக-உம்மோர்
இன்னுரை அனத்தும் பாலாக
என்னுயிர் வளர்த்திடும் எருவாக –நெஞ்சில்
எழுவன,கவிதைக் கருவாக
இன்பினை மேலும் தருவீரே –என்னுடை
இதயத்து நன்றி பெறுவீரே!

புலவர் சா இராமாநுசம்

Monday, October 19, 2015

இன்றேதான் என்னுடைய பிறந்த நாளாம் இணையவழி வாழ்த்தநீர் சிறந்த நாளாம்!


இன்றேதான் என்னுடைய பிறந்த நாளாம்
இணையவழி வாழ்த்தநீர் சிறந்த நாளாம்
ஒன்றேதான் உறவுகளே அன்புப் பரிசாம்
உள்ளத்தில் இன்பமதைக் கொட்டும் முரசாம்
என்றேதான் இதயமதில் எண்ணம் கொண்டே
இயன்றவரை கருத்துக்களை வலையில் விண்டே
நன்றேதான் வாழுவரை பதிவைத் தருவேன்
நல்லோரே! உம்முடைய வலைக்கும் வருவேன்


எத்தனையோ எழுதிவிட நினைத்த போதும்
இயலாத நிலைதந்து முதுமை மோதும்
சித்தமதில் தோன்றுவன சிதறிப் போகும்
செயலிழந்த மனநிலையால் துயரே ஆகும்
பெத்தமனம் பிள்ளைகளின் அன்பைத் தானே
பெருமைமிக எதிர்நோக்கும் அதுபோல் நானே
இத்தனைநாள் நான்வாழ மருந்தாம் நீரே
இனிமேலும் வளர்கின்ற உறவாம் நீரே!

புலவர் சா இராமாநுசம்

Saturday, October 17, 2015

ஏழரை நாட்டுச் சனிபோல-இன்றும் ஏறின பெட்ரோல் விலைசால!


ஏழரை நாட்டுச் சனிபோல-இன்றும்
ஏறின பெட்ரோல் விலைசால!
ஏழைகள், நடுத்தர வர்க்கம்தான்-அவரே
என்றும் காண்பது நரகம்தான்!
வாழைக்கு கூற்றம் காய்போல-நாமே
வழங்கிய வாக்கும் அதுபோல!
கோழைகள் ஆனோம் பயனென்ன!?-இந்தக்
கொடுமைக்கு விடிவு இனியென்ன?


பால்விலை ஏறிற்று என்செய்தோம்-அதனால்
பதறியும் கதறியும் பயனுண்டா!
தோல்வியே என்றும் தொடர்கதையே-சுமையாம்
தோளொடு நடப்பது தலைவிதியே!
பேருந்து கட்டணம் ஏறிற்றே-மக்கள்
பேசியும் புலம்பியும் மாறிற்றா?
பேருந்து கண்டதும் ஓடுகின்றோம்-இடமே
பிடித்திட முயன்று தேடுகின்றோம்!

மின்விசைக் கட்டணம் விண்முட்ட-துயரம்
மேலும் தேளாய் நமைகொட்ட!
என்வினை இதுவோ என்றேங்கி-தினமே
இல்லறம் நடத்தக் கடன்வாங்கி!
தன்வினை ஆற்ற இயலாமல்-நாமும்
தவிப்போம் ஏதும் முயலாமல்!
பொன்நிகர் வாக்கை இனியேனும்-நீரே
போடுமுன் சிந்திக்கத் துளியேனும்!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, October 13, 2015

நல்முறையில் புதுக்கோட்டை சென்று வந்தேன்-நிகழ்வு நடந்த முறை அனத்துமே இனிக்கும் செந்தேன்!





நல்முறையில்  புதுக்கோட்டை  சென்று  வந்தேன்-நிகழ்வு
     நடந்த  முறை  அனத்துமே  இனிக்கும்   செந்தேன்!
வல்லமையே கொண்டவராம் இளையோர்  அணியே-நேரில்
      வந்தவர்கள் அறிவார்கள்  அவர்தம்   பணியே!
சொல்லரியப்  புகழ்பெற்றார் முத்து   நிலவன்-சற்றும்
     சுயநலமே ஏதுமில்லா, உழைத்த   தலைவன்!
இல்லைநிகர் இல்லையென வந்தோர்   தம்மை- தூய
     இதயமுடன் வரவேற்றார் வணங்கி  எம்மை!

நாவிற்கு, இனியசுவை நல்கும்  விருந்தே-பலரும்
      நவின்றிட்ட  சொற்பொழிவும்   நல்ல மருந்தே!
காவிற்கு அழகூட்டும்  மலர்கள்  போன்றே –மிகவும்
     கனிவுடனே பணிசெய்த  தொண்டர்  சான்றே!
பாவிற்குள் அடங்காத  பெருமை  ஆகும்- முற்றும்
      பகர்ந்திடவே! இயலாத  அருமை  ஆகும்!
நோவிற்கு ஆளாகி  இருந்த  போதும் – வருகின்ற
      நோக்கம்தான் குறியாக  மனதில்  மோதும்!

அகம்கண்டு  முகம்காணா  பலரைக்  கண்டேன்-மேலும்
        அவரோடு  உரையாடி மகிழ்வே  கொண்டேன்!
இகம்தன்னில்  பிறந்ததிட்ட  பயனைப்  பெற்றேன்-நாளும்
         இணையத்தால்  இத்தைய  உறவை உற்றேன்!
நகத்தோடு இணைந்திட்ட  சதைபோல்  இன்றே-புதுகை
     நடத்திட்ட பதிவர்விழா  குறையில்  ஒன்றே!
சுகத்தோடு   அனைவருமே  இல்லம்  சென்றார்-பன்முறை
     சொல்கின்றேன்   வணக்கமென  நன்றி !  நன்றி!

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...