Thursday, March 24, 2016

கொள்கைகளை விற்றுவிட்டு கூட்டணியாம் இங்கே –அந்தோ கூறுபோட்டு சீட்டுகளை பிரிக்கின்றார் பங்கே!


கொள்கைகளை விற்றுவிட்டு கூட்டணியாம் இங்கே –அந்தோ
கூறுபோட்டு சீட்டுகளை பிரிக்கின்றார் பங்கே
எள்முனையும் மக்களுக்குச் சேவைசெய்யஅன் றாம் –கட்சிகள்
எண்ணுவது ! தேவையது ! பதவிசுகம் ஒன்றாம்!
உள்மனதில் ஓடுவது, இதுவென்றே அறிவீர் –மக்கள்
ஒன்றுபட்டு, தரமறிந்து வாக்குகளைத் தருவீர்!
முள்முனையில் கால்வைத்தால் என்னநிலை ஆகும்-என்றே
முன்கூட்டி சிந்தித்தால் துன்பமதும் போகும்!


புலவர் சா இராமாநுசம்

Friday, March 18, 2016

ஆறாது அன்னவரும் வெகுண்டு எழுவர்-தடுக்கும் ஆற்றலின்றி அரசுகளும் கவிழ்ந்து விழுவர்!



ஏறுவதும் இறங்குவதும் கண்ணா மூச்சே-இங்கே
எண்ணைவிலை ஆயிற்றே! பழகிப் போச்சே-ஆனால்
மாறாது விலைவாசி ஏறல் ஒன்றும் – வாழும்
மக்களுக்கே மாறாத துன்பம் என்றும்-பதில்
கூறுவதும் இல்லையாம் ஆள்வோர் தானே -மனம்
குமுறுவது நடுத்தர, ஏழைகள் முற்றும் வீணே!-ஒருநாள்
ஆறாது அன்னவரும் வெகுண்டு எழுவர்-தடுக்கும்
ஆற்றலின்றி அரசுகளும் கவிழ்ந்து விழுவர்
!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, March 16, 2016

திட்டம் இட்டே வாழ்வீரே-உரிய தேவைக்குச் செலவும் செய்வீரே!



திட்டம் இட்டே வாழ்வீரே-உரிய
தேவைக்குச் செலவும் செய்வீரே
பட்டம் பதவி எனத்தேடி-மனிதப்
பண்பை மறந்துப் பணம்நாடி
கொட்டம் போட வேண்டாமே-வெற்றிக்
கொடிகட்டிப் பறக்க ஈண்டாமே!
எட்டிக் கசத்தல் இயல்பன்றோ-இதை
எண்ணா செயல்தரும் துயரன்றோ


மற்றவர் தம்மின் குறைகண்டே-அவர்
மனமும்நோக அதை விண்டே
செற்றம் கொண்டிடச் செய்யாதீர்-தீயச்
சொற்களை அம்பென எய்யாதீர்
குற்றம் செய்யார் யாருண்டே-நாமும்
குறைகளை ஆயின் நிலைகொண்டே
சுற்றம் சூழ வாழ்வோமே!-சுயமாய்,
சிந்தனை தன்னில் ஆழ்வோமே

புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, March 15, 2016

மாதர்களே அணியாக திரளுங்கள் இன்றே-சாதி மதவெறியும் ஒழியட்டும்! போராட நன்றே!


காதலித்தார்! மணந்தாரே காலம் ஓடி- மாதம்
கடந்தய்யா எட்டுயென ! அதனபின் தேடி!
சாதலைத்தான் தந்ததய்யா சாதி வெறியே-வெட்டி
சாய்த்தாரே! ஐயகோ! இதுவா நெறியே!
வேதனைதான் என்றுமிது அழியா நோயா-பலர்
விழிகாண கொன்றாரே மனிதரிலே பேயா?
மாதர்களே அணியாக திரளுங்கள் இன்றே-சாதி
மதவெறியும் ஒழியட்டும்! போராட நன்றே!


புலவர் சா இராமாநுசம்

Monday, March 14, 2016

வானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க வழியில்லா மக்கள்தான் பரதேசி யிங்கே!



வானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க
வழியில்லா மக்கள்தான் பரதேசி யிங்கே!
ஏனென்று கேட்காத ஊடகங்க ளிங்கே - ஏதும்
எல்லையின்றி நடக்கின்ற நாடகங்க ளிங்கே!
தானென்று நடக்கின்ற அனைத்துமே யிங்கே- மக்கள்
தடுமாறி போகின்ற நிலைதானே! இங்கே!
தேனல்ல கொட்டுவதும் தேளாகும்! இங்கே –நாளும்
திகைப்போடு கேட்கின்றார் அரசுதான் எங்கே?


புலவர்  சா இராமாநுசம்

Saturday, March 12, 2016

வீணாக எதற்கிங்கே தேர்தல்வேண்டும்-நல்ல விலைதன்னில் வாங்கிடவே பதவித்துண்டும்!



வீணாக எதற்கிங்கே தேர்தல்வேண்டும்-நல்ல
விலைதன்னில் வாங்கிடவே பதவித்துண்டும்
காணாத காட்சியா நாமும்முன்னால்-வீண்
கதையல்ல காண்போமே இதனைப்பின்னால்
நாணாத உள்ளத்தை வளர்த்துவிட்டோம்-எது
நடந்தாலும் நமக்கென்ன என்றேகெட்டோம்
தூணாக நல்லோர்கள் வந்தால்தானே-வரும்
தூயதொரு ஆட்சியும் இன்றேல்வீணே


புலவர் சா இராமாநுசம்

Thursday, March 10, 2016

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே-கூட்டு எவரோடு எவரும் சேரட்டுமே!


என்னதான் நடக்கும் நடக்கட்டுமே-கூட்டு
எவரோடு எவரும் சேரட்டுமே
தன்னாலே வெளிவரும் மயங்காதே-ஓட்டு
தாக்கார்க்கு அளித்திடத் தயங்காதே
சொன்னாலும் அனைத்தையும் நம்பாதே-பின்னர்
சோகத்தில் ஐந்தாண்டு வெம்பாதே
முன்னாலே தெளிவாக சிந்திப்பீர்-தேர்தல்
முடிந்தபின்னர் யாரைத்தான் நிந்திப்பீர்!


காசுதனை வாங்கிட்டுப் போடாதீர்!-அதனால்
காலமெல்லாம் வறுமையிலே வாடாதீர்
மாசுதனை பழியாக ஏற்காதீர் –என்றும்
மறவாதீர்! வாக்குதனை விற்காதீர்
பேசுவது வாய்வார்த்தை சேவையாகும்-ஆனால்
பதவிவரின் பணமொன்றே தேவையாகும்
கூசுவது துளிகூட இல்லைநாக்கில்-பணத்தைக்
கோடிகளில் காண்பதுதான் உண்மைநோக்கில்

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...