Showing posts with label கவிதை புனைவு. Show all posts
Showing posts with label கவிதை புனைவு. Show all posts

Saturday, January 13, 2018

போயிற்று போயிற்று மார்கழியே-எங்கும் புகைசூழ ஆயிற்றி மார்கழியே



போயிற்று போயிற்று மார்கழியே-எங்கும்
புகைசூழ ஆயிற்றி மார்கழியே
ஓயாத பனிமூட்டம் மார்கழியே-அத்துடன்
ஒன்றேன கலந்திட மார்கழியே
தாயாக தைமகள் நாளைவர-இங்கே
தந்திட வேண்டினோம் ! இன்பம்தர
வாயார வாழ்த்தியே வணங்கிமிக-நாங்கள்
வரவேற்று மகிழ்வோடு பாடுகின்றோம்


புலவர் சா இராமாநுசம்

Thursday, October 5, 2017

கோடி தரினும் மயங்காதே-ஏற்ற கொள்கையைக் காக்க தயங்காதே!



ஓடி உதைத்து விளையாடு!-தமிழ்
 உணர்வை ஊட்டி நீயாடு!
பாடுபட்டே பொருள் தேடு-நல்ல
பண்பை என்றும் நீநாடு!
பீடுபெறுமே உன் வாழ்வு -உண்மைப்
பேசிடின் பெறுவாய் நல்வாழ்வு
கோடி தரினும் மயங்காதே-ஏற்ற
கொள்கையைக் காக்க தயங்காதே!

இயற்கையை பேணிக் காப்பாயே-நன்கு
எண்ணி எதையும் செய்வாயே!
செயற்கையைத் தேடி அலையாதே-நம்
செந்தமிழ் பேச மறக்காதே!
முயற்சி ஒன்றேத் திருவினையாம்-நீ
முயன்றால் வெற்றி அவ்வினையாம்
அயர்ச்சிக் கொள்ளா வேண்டாமே-வீணே
அலட்டிக் கொள்ளவும் வேண்டாமே!

ஒவ்வொரு நாளும் விளையாடு!-பழுது
உரிமைக்கு வந்தால் போராடு!
எவ்வழி நல்வழி அதைநாடு-பிறர்
ஏய்க வந்தால் நீசாடு
இவ்வழிப் போற்றி விளையாடு-எனில்
என்றும் வாரா ஒருகேடு
செவ்வழி இவையே நலங்காண-பிறர்
செப்பும் பெருமை உளம்பூண
 
                     புலவர் சா இராமாநுசம்

Wednesday, July 26, 2017

நீங்காது மனதினிலே அலைபோல் மோத!





நீங்காது மனதினிலே அலைபோல் மோத
நிலையின்றி பல்வகையும் நினைவில் ஓத
தூங்காத விழியிரண்டும் துணையாய் நின்றே
தொலையாத இரவுதனை தொலைத்தேன் நன்றே
தாங்காது தவிப்பதும் எத்தனை நாளோ
தடமறியா என்நெஞ்சை அறுக்கும் வாளோ
ஏங்காது வாழ்கின்ற நாளும் வருமா
எல்லையின்றி ஓர்முடிவை விரைவில் தருமா


புலவர் சா இராமாநுசம்

Monday, April 14, 2014

இத்தரை மீதினில் சித்திரைப் பெண்ணே!




 உறவுகளே! எழுத இயலாத நிலை!  ஆனாலும் இன்று ஏதேனும்
தரவேண்டும் என்ற  ஆசை! எப்போதோ  எழுதியது


            இத்தரை மீதினில்
            சித்திரைப் பெண்ணே
            எத்தனை முறையம்மா வந்தாய்-நீ
            என்னென்ன புதுமைகள் தந்தாய்

            எண்ணிப் பதினொரு
            இன்னுயிர் தோழியர்
            நண்ணிப் புடைசூழப் பின்னே-நீ
            நடந்து வருவதும் என்னே

            ஆண்டுக் கொருமுறை
            மீண்டும் வருமுன்னை
            வேண்டுவார் பற்பல நன்மை-அது
            ஈண்டுள மக்களின் தன்மை

            இல்லாமை நீங்கிட
            ஏழ்மை மறந்திட
            வெள்ளாமைத் தந்திடு வாயே-உயிர்
            கொல்லாமைத் தந்திடு வாயே

            ஏரிக்குள மெல்லாம்
            எங்கும் நிரம்பிட
            வாரி வழங்கிடு வாயா-வான்
            மாரி வழங்கிடு வாயா

             புலவர் சா இராமாநுசம்

Wednesday, December 25, 2013

ஏசுவே மீண்டும் வாரும் இங்குள்ள நிலையைப் பாரும்






ஏசுவே மீண்டும் வாரும்
   இங்குள்ள  நிலையைப்  பாரும்
பேசுவ அனைத்தும்  பொய்யே
   பிழைப்பென! காண்பீர்  மெய்யே!
கூசுவ அரசியல்  போக்கே!
    குறைகண்டே  விரைந்தே நீக்க!
தூசிவ! துடைக்க  வாரும்!
    துயர்போக எம்மைக்  காரும்!

கருணையின்  வடிவம்  நீயாய்
   காப்பதில் அன்புப்  தாயாய்
பெருமையும் பெற்றவர்  ஆக,
    பேசுதல் நிலையாய்ப்  போக!
உருவமே பெற்று  வருவீர்
    உலகினைக்  காத்தே அருள்வீர்!
தருணமே  இதுதான்!  ஆகும்!
    தவறிடின் ! அழிந்து போகும்!

             புலவர்  சா  இராமாநுசம்

Friday, November 15, 2013

ஆடுகின்றார்! ஆடுகின்றார்! நாடகம் –ஈழ ஆதரவுப் பேராலே நாடகம்





ஆடுகின்றார்! ஆடுகின்றார்! நாடகம் –ஈழ
    ஆதரவுப்  பேராலே  நாடகம்
போடுகின்றார் போடுகின்றார்! நாடகம் –ஈழப்
    போராளிப் பேராலே  நாடகம்
தேடுகின்றார் தேடுகின்றார்!  ஓட்டே! –வரும்
     தேர்தலிலே  வெற்றிபெறக் கேட்டே
கேடுதரும்  அரசியலே! போபோ!-தட்டிக்
    கேட்பவர்க்கு வைப்பதென்ன ஆப்போ

ஒருவருக்கும்  உணர்வில்லை ! இங்கே!- இதில்
    உள்நோக்கம் இருப்பதாலே எங்கே?
வருவதில்லை ஒருநாளும்  வெற்றி – வெறும்
    வாய்வார்த்தை தந்திடுமா  பெற்றி
உருவமின்றி நிழல்தேடும்  தன்மை –இன்று
   உள்ளநிலை! உணர்வீராம்! உண்மை!
பெருமையில்லை கட்சிகளே இன்றே –எடுத்துப்
    பேசுவதே செயலாதல் என்றே!?

               புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, November 12, 2013

எங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா!



எங்கு காணிலும் குப்பையடா-நம்
   எழில்மிகு சென்னை காட்சியடா
பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில்
    போடுவார் மேலும் எட்டியடா
தங்கும் மழையின் தண்ணீரும்-செல்ல
   தடைபட அந்தோ! மிகநாறும்
இங்கே எடுக்க ஆளில்லை-அதை
   எடுத்துச் சொல்லியும் பலனில்லை

பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
      பரவிக் கிடப்பது பெருந்தொல்லை
வேதனை  தீரும் வழிகாண்பீர்-எனில்
      வீணே நீரும் பழிபூண்பிர்
சோதனை போல கொசுக்கடியே-எடுத்து
      சொல்ல இயலா நெருக்கடியே
நாதம் இசைத்தே படைபோல-எமை
      நாடி வருமோர் தினம்போல

தொற்று நோயும்  வருமுன்னே-எண்ணி
     தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை
மற்றது பின்னர் ஆகட்டும்-குப்பை
     மலையென கிடப்பது போகட்டும்
குற்றம் சொல்வது  நோக்கமல-இது
     குத்தும் கவிதை ஆக்கமல
வெற்றுச் சொல்லும் இதுவல்ல-பட்ட
     வேதனை விளைவாம் இதுசொல்ல

அண்மை காலமாய் இவ்வாறே-ஏனோ
    அடிக்கடி நடப்பது எவ்வாறே
உண்மை எதுவோ வேண்டாமே-உரியோர்
    உணர்ந்தால் போதும் ஈண்டாமே
நன்மை ஒன்றே  உடன்தேவை-மா
     நகர ஆட்சிக்கு இப்பாவை
சொன்னேன் ஐயா! தவறில்லை-ஆவன
    செய்வீர் வேறு வழியில்லை!

       புலவர் சா இராமாநுசம்

Friday, October 25, 2013

எங்கேயா அரசாங்கம்? இருக்கு தென்றே –பலர் எண்ணுகின்ற நிலைதானே நாட்டி லின்றே!





எங்கேயா அரசாங்கம்?  இருக்கு  தென்றே –பலர்
    எண்ணுகின்ற நிலைதானே நாட்டி  லின்றே!
வெங்காயம் விலைகூட விண்ணை முட்டும்-ஏழை
    வேதனையைச் சொல்லியழ கண்ணீர் சொட்டும்!
தங்காயம் வாடாமல் காரில்  போகும் – கட்சித்
     தலைவர்களே! எண்ணுமிது!  வீணா ! ஆகும்!
பொங்காத மக்களையும் பொங்கச் சொல்லும் –எனில்
     புரிந்துடனே தீர்க்கவழி தன்னை  உள்ளும்!
    
 எருமாட்டின்  மீதுமழைப் பெய்தால்  போல- ஏன்
     இருக்கின்றீர்! வெறுக்கின்றார் ! மக்கள் சால!
திருநாட்டில் யாராலே இந்தப்  பஞ்சம்-பதுக்கல்
     திருடனுக்கே அரசேதான் கொடுக்கும்  தஞ்சம்!
வருநாளில் எப்பொருளும்  வாங்க  இயலா-ஏழை
     வாடுகின்றான்! தேடுகின்றான் !வழியும் புயால
உருவானால் என்செய்வீர்! போவீர் எங்கே – இதை
     உணராது இருப்பீரேல் நடக்கும்  இங்கே!

அளவின்றி  விலைவாசி  உயர நாளும்- ஆட்சி
    அதிகாரம் சுயநலமே  குறியாய்  ஆளும்
வளமான வாதிகளாய்  வலமே வருவீர்- மக்கள்
     வாய்மூடி யிருந்தாலும் பாடம் பெறுவீர்!
களமாகும் வருகின்ற தேர்தல் காட்டும்-  உடன்
     கைகொடுக்க  ஏற்றதொரு திட்டம் தீட்டும்!
உளமறிய உண்மையிது! உணர்தல்  நன்றே!-ஏதோ
      உரைத்திட்டேன் வேதனையை நானும்  இன்றே!

                            புலவர்  சா இராமாநுசம்
    
    

Wednesday, January 30, 2013

முத்துகுமார் இறந்த போது மனம் வருந்தி எழுதிய கவிதை !


நேற்றே வந்திருக்க வேண்டிய கவிதை தாமதத்திற்கு மன்னிக்க

இன்று நினைவு நாள் அஞ்சலி

முத்துகுமார் இறந்த போது மனம் வருந்தி எழுதிய கவிதை 

ஓயாத அழுகுரலே ஈழ மண்ணில்-தினம்
ஒலிக்கின்ற நிலைகண்டு அந்தோ கண்ணில்
காயாது வந்ததன்று கண்ணீர் ஊற்றே-அதைக்
காணாமல் மறைத்ததந்தோ தேர்தல் காற்றே
சாயாத மனத்திண்மை கொண்டோர் கூட-ஏனோ
சாயந்தார்கள் பதவிக்கே ஓட்டு தேட
வாயார சொல்லுகின்ற கொடுமை அன்றே-அது
வரலாற்றில் என்றென்றும் மறையா ஒன்றே

கொத்துமலர் வீழ்வதுபோல் வன்னிக காட்டில்-ஈழ
குடும்பங்கள் வீழ்வதனை கண்டு ஏட்டில்
முத்துகுமார் முதலாக பலரும் இங்கே-தீ
மூட்டியவர் உயிர்துறந்தும் பலன்தான் எங்கே
செத்துவிழு மவர்பிணத்தை எடுத்துக் காட்டி-ஓட்டு
சேகரிக்க முயன்றாராம் திட்டம் தீட்டி
எத்தர்களும் ஐயகோ கொடுமை அன்றோ-அது
எதிர்கால வரலாற்றில் மறையா தன்றோ

வீரத்தின் விளைநிலமே ஈழ மண்ணே-மீண்டும்
வீறுகொண்டே எழுவாய்நீ அதிர விண்ணே
தீரத்தில் மிக்கவராம் ஈழ மறவர்-எட்டு
திசையெங்கும் உலகத்தில் வலமே வருவார்
நேரத்தில் அனைவருமே ஒன்றாய் கூடி-தாம்
நினைத்தபடி தனிஈழப் பரணி பாடி
கூறத்தான் போகின்றார் வாழ்க என்றே-உள்ளம்
குமுறத்தான் சிங்களவர் வீழவார் அன்றே

இரக்கமெனும் குணமில்லார் அரக்கர் என்றே-கம்பர்
எழுதியநல் பாட்டுக்கே சான்றாய் இன்றே
அரக்கனவன் இராசபக்சே செய்யும் ஆட்சி-உலகில்
அனைவருமே அறிந்திட்ட அவலக் காட்சி
உறக்கமின்றி ஈழமக்கள் உலகில் எங்கும்-உள்ளம்
உருகியழ வெள்ளமென கண்ணீர் பொங்கும்
தருக்கரவர் சிங்களரின் ஆட்சி அழியும்-உரிய
தருணம்வரும் தனிஈழம் மலர்ந்தே தீரும்

அழித்திட்டோம தமிழர்களை என்றே கூறி-சிங்கள்

ஆலவட்ட மாடினாலும் அதையும் மீறி       கழித்திட்ட காலமெல்லாம் துன்பப் படவும்-சில
கயவர்களாம் நம்மவர்கை காட்டி விடவும்
விழித்திட்டார் உலகுள்ள ஈழ மறவர்-அதன்
விளைவாக அணிதிரள விரைந்தே வருவார்
செழித்திட்ட வளநாடாய் ஈழம் மாறும்-இரத்தம்
சிந்தாமல் தனிஈழம் மலர்ந்தே தீரும்

புலவர் சா இராமாநுசம்      


           மீள்பதிவு

Saturday, January 26, 2013

ஆண்டுதோறும் திருவிழாபோல் வந்தே போகும் –குடி அரசுயென்னும் திருநாளின் நிலையே ஆகும்!




ஆண்டுதோறும்  திருவிழாபோல் வந்தே  போகும் குடி
   அரசுயென்னும்   திருநாளின்  நிலையே  ஆகும்!
ஈண்டுபல   இடங்களிலும்   கொடியே   ஏற்றி என்றும்
   ஈடில்லா தலைவர்கனின்  நினைவை  போற்றி!
மீண்டுமீண்டும்   நடக்கின்ற சடங்காம்  என்றே-இதன்
    மேன்மைதனை உணராதும் செய்வார்  இன்றே!
வேண்டியிதை  அந்நாளில்  செய்தார்  தியாகம் நாட்டு
    விடுதலைக்கே  உயிர்பலியே  தந்தோர்  ஏகம்!

தன்னலமே  ஏதுமின்றி  பாடும்  பட்டார் அடிமைத்
     தளைதன்னை  முற்றிலுமே  நீக்கி  விட்டார்!
என்னலமே  பெரிதென்பார்  கையில்  தானே நாடும்
    எள்ளுகின்ற  நிலைதானே,   அனைத்தும்  வீணே!
இன்னலதே   நாள்தோறும்   வாழ்வில் ஆக மேலும்
    ஏழைகளோ  ஏழைகளாய்  மடிந்தே  போக!
மன்னரென  ஆனார்கள்  சிலரும்  இங்கே  - உண்மை
    மக்களாட்சி  காணாது   போன  தெங்கே ?


ஒப்புக்கே  நடக்கும்விழா   நாட்டில்,  முற்றும்  - எடுத்து
      உரைத்தாலும்   உணர்வாரா ? மக்கள்   சற்றும்!
தப்புக்கே  தலையாட்டும்   தாழ்ந்த  மனமே  - குடியால்
     தள்ளாடும்   ஐயகோ  மனித   இனமே!
எப்பக்கம்  நோக்கினாலும்   அவலக்  காட்சி
     எதிர்கால  வளர்ச்சிக்கு   இதுவா  மாட்சி!
செப்பிக்க  குடியரசு   இதுதான்  போலும் விளக்கி
     செப்பிடவே இயலாத கொடுமை  நாளும்!

                                            புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, January 15, 2013

மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!




மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ்
         மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு
  நாட்டுக்கும் இல்லாத பெருமை!-நம்
         நாட்டுக்கே உரியதாம் அருமை!

 உழுதிட உழவனின் துணையே!-என
        உற்றது இரண்டவை இணையே-நாளும்
 பழுதின்றி பயிர்த்தொழில் செய்ய!-அவை
         பங்குமே பெற்றது ஐய்ய!

 தொழுதின்று போற்றிட வேண்டும்-அதன்
        தொண்டினை சாற்றுவோம் யாண்டும்-மேலும்
 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்-இன்றேல்
         உணவின்றி அனைவரும் வீழ்வார்

 மஞ்சு விரட்டெனச் சொல்வார்-மணி
         மாலைகள் சூட்டியே மகிழ்வார்-மிரண்டு
 அஞ்சிய மாடுகள் ஓடும்-ஆகா!
         அவ்வழகினைப் பாடவா கூடும்!

 வண்ணங்கள் தீட்டுவார் கொம்பில்-அதை
          வண்டியில் பூட்டுவார்! அன்பில்!-உவகை
  எண்ணத்தில் மலர்ந்திட உள்ளம்-அவை
           விரைந்திட ஓட்டுவார் இல்லம்

   ஏர்தனைக் கட்டியே உழுவார்-கதிர்
            இறையென பார்த்துமே தொழுவார்-இப்
   பாரெங்கும் பசிப்பிணி நீங்க- இட்ட
          பயிர்நன்கு செழித்துமே ஓங்க!

  ஊரெங்கும் மக்களின் கூட்டம்!-பெரும்
           உற்சாகம் பொங்கிட ஆட்டம்!-நல்
   சீர்மிகும் புத்தாடை அணிவார்-இளையோர்
          சென்றுமே பெரியோரைப் பணிவார்

   உண்டிடக் கொடுப்பவன் உழவன்!-நம்
           உயிரையும் காப்பவன் உழவன்!-பெரும்
   தொண்டினைச் செய்பவன் உழவன்!-நாம்
            தொழுதிட உரியவன் உழவன்!

                                  புலவர் சா இராமாநுசம்
              

Wednesday, September 26, 2012

போதும் என்ற மனமில்லை-நல் பொறுமை என்ற குணமில்லை




போதும் என்ற மனமில்லை-நல்
   பொறுமை என்ற குணமில்லை
வாதே செய்தும் வாழ்வார்கள்-வீண்
   வம்பு செய்தே வீழ்வார்கள்
ஏதம் ஒன்றேத் தொழிலாக-சிலரை
    ஏய்துப் பிழைப்பதும் அதுவாக
பேதம் அற்றே எங்கெங்கும்-வாழ்வில்
   பிண்ணி கிடப்பதும் முறைதானா ?

முற்றும் துறந்தார் துறவியென-எதையும்
   முழுதும் உணர்ந்தார் ஞானியென
கற்றோம் நாமும் ஏட்டினிலே-ஆனாப்
    காணோம் இன்றே நாட்டினிலே
பெற்றோர் பிள்ளை தம்மிடையே-பணம்
    பெசிட இன்றும் நம்மிடையே
பற்றோ பாசமோ இல்லாமே விட்டுப்
    பறந்திடப் பாரீர் சொல்லாமே

குற்றம் எதுவெனத் தெரியவில்லை நாளும்
    குறைகளே வளர்வதும் புரியவில்லை
அற்றார் அழிபசி தீரவில்லை நாட்டை
   ஆள்வோர் போக்கும் மாறவில்லை
சுற்றுச் சூழலும் மாசாக வாய்ச்
   சொல்லும் செயலும் வேறாக
சுற்றம் தாழா நிலைபெற்றோம் வெறும்
   சுயநலம் ஒன்றே நாம்கற்றோம்

                           புலவர் சா இராமாநுசம்

   

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...