Saturday, April 13, 2013

இத்தரை மீதினில் சித்திரைப் பெண்ணே!



            இத்தரை மீதினில்

            சித்திரைப் பெண்ணே
            எத்தனை முறையம்மா வந்தாய்-நீ
            என்னென்ன புதுமைகள் தந்தாய்

            எண்ணிப் பதினொரு
            இன்னுயிர் தோழியர்
            நண்ணிப் புடைசூழப் பின்னே-நீ
            நடந்து வருவதும் என்னே

            ஆண்டுக் கொருமுறை
            மீண்டும் வருமுன்னை
            வேண்டுவார் பற்பல நன்மை-அது
            ஈண்டுள மக்களின் தன்மை

            இல்லாமை நீங்கிட
            ஏழ்மை மறந்திட
            வெள்ளாமைத் தந்திடு வாயே-உயிர்
            கொல்லாமைத் தந்திடு வாயே

            ஏரிக்குள மெல்லாம்
            எங்கும் நிரம்பிட
            வாரி வழங்கிடு வாயா-வான்
            மாரி வழங்கிடு வாயா

             புலவர் சா இராமாநுசம்

Wednesday, April 10, 2013

கோழையாய் கிடப்பவன் எழுந்தாலே-பொங்கி குமுறும் எரிமலை ஆவானே


இடுவீர் பிச்சை இடுவீரே-கல்வி
   ஏழைகள் கற்க விடுவீரே
 கெடுவீர் இன்றேல் ஒருநாளே-இது
   கேடெனக் களையின் எதிர்நாளே
 தொடுவீர் ஏழைகள் நெஞ்சத்தை-உடன்
   தொலைப்பீர் கல்வியில் இலஞ்சத்தை
 விடுவீர் ஏழைகள் நிலைஉயர-அவர்
   வேதனை நீங்கி தரமுயர

திறமை இருந்தும் பயனின்றி-வீணே
    தேம்பிட வாழல் மனங்குன்றி
 அறமா கருதிப் பார்ப்பீரே-பணம்
    அளித்தால் எவரையும் சேர்ப்பீரே
 தரமே அற்றவர் போனாலும் –அந்தோ
    தருவீர் இடமே!ஆனாலும்
 வரமே பொற்றவர் அவர்தானா-ஏழை
    வாழ்வே குட்டிச் சுவர்தானா

இல்லோர்  கல்வி இல்லோரா-இதை
    எடுத்து எவரும் சொல்லாரா
 நல்லோர் எண்ணிப் பாருங்கள்-இது
    நாட்டுக்கு நலமா கூறுங்கள்
 வல்லோர் வகுத்ததே வாய்க்காலா-ஏழை
    வாழ்வை அழிக்கும் பேய்க்காலா
 கல்லார் என்றும் அவர்தான-கேட்கும்
    கவிதை இதுவென் தவற்தானா

ஏழையின் கண்ணீர் பாரென்றீர்-அங்கே
    இருப்பது இறைவன் தானென்றீர்
 பேழையுள் இருக்கும் பாம்பாக-கட்டிப்
    பிணைத்திட பணமது தாம்பாக
 வாழையின் அடிவரும் வாழையென-அவன்
    வாழ்ந்தே மடிவது கொடுமையென
 கோழையாய் கிடப்பவன் எழுந்தாலே-பொங்கி
    குமுறும் எரிமலை ஆவானே

                                    புலவர்  சா இராமாநுசம்

Monday, April 8, 2013

வெண்பா- நான்கும் இயற்கைப் பாங்கும்!




தென்றல்  வரவேற்க தீந்தமிழோ தாலாட்ட
அன்றங்கே பூத்தப்பூ ஆடிடவும் –நின்றமரம்
நீண்ட கிளையாலே நீங்கா நிழல்தருமே
தூண்ட உணர்வன்றோ தான்

சோலைக் குயிலங்கே சொக்கும் குரல்காட்ட
வாலைக்  குமரியென  வாவியிலே –மாலைமதி
தன்முகத்தைக் காட்டி தவழ்கின்ற மேகத்துள்
நன்றே மறைப்பதா நன்று


தேன்தேடி  வண்டொன்று தேன்மலரை நாடிவர
தான்தேடி சேர்த்தனை தந்திடுமே – வான்வரையில்
வீசும் மணம்போல வேந்தனவன  மார்பினிலே
பூசுகின்ற சந்தனமாய்  சொல்




இயற்கை எழில்சூழந்த ஏற்றமிகு காட்சி
செயற்கை அளித்திடுமா செப்பு –வியப்புமிகு
எண்ணற்ற பல்வசதி இன்றிங்கே வந்தாலும்
பண்ணற்ற பாவலவோ பார்

              புலவர்  சா  இராமாநுசம்

Friday, April 5, 2013

ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம் ஊரை ஆளச் சென்றீர்கள்!


ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம்
   ஊரை ஆளச் சென்றீர்கள்!
கேட்டு வாங்கிப் போனீர்கள-பின்
   கேடே செய்வதாய் ஆனீர்கள்!
நாட்டு  நடப்பைப் பாருங்கள்-மிக
   நன்றா? ஒன்றா? கூறுங்கள்!
காட்டுக் கூச்சல் இன்றேதான்-தினம்
   கட்சிகள் செய்வது ஒன்றேதான்!

மக்கள் அவையே கூடுவதும்-உடன்
   மாநில அவையே கூடுவதும்
தக்கது பேசி  முடிப்பதற்கா-வீண்
   தகராறு செய்தே கெடுப்பதற்கா
அக்கரை இல்லை யாருக்குமே-எதையும்
    ஆய்வதும் இல்லை பேருக்குமே
துக்கமே உண்டா துளிகூட-காணும்
     தொடர்கதை ஆனது நாம்வாட

ஒவ்வொரு முறையும் நடக்குதய்யா-தினம்
     உண்மை! உண்மை! இதுபொய்யா
இவ்வகை நடப்பின் எவ்வாறே-நாடு
    ஏற்றம் பெறுமா? அறிவீரே!
செவ்வகை ஆட்சி நடைபெறுமா?-நன்கு
    சிந்தனை செய்யின் தடைபடுமா!
எவ்வகை நலமென அவைதன்னில்-பேசி
    எடுப்பதே முடிவு சரியெண்ணில்!
             
                    புலவர் சா இராமாநுசம்
     
      

Tuesday, April 2, 2013

கீழோ ராயினும் தாழஉரை கேடோ! குறையோ! அல்ல! நிறை!


நினைத்து நினைத்துப் பார்க்கின்றேன்
     நினைவில் ஏனோ வரவில்லை!
அனைத்தும் மனதில் மறைந்தனவே
    அறிவில் குழப்பம்  நிறைந்தனவே!
தினைத்துணை  அளவே செய்நன்றி
    தேடிச் செய்யின் மனமொன்றி!
பனைத்துணை யாகக் கொள்வாரே
    பயனறி உணரும் நல்லோரே!

அடுத்தவர் வாழ்வில் குறைகண்டே
     அன்னவர் நோக அதைவிண்டே!
தொடுத்திடும் சொற்கள் அம்பாக
     தொடர்ந்து அதுவே துன்பாக!
கெடுத்திட வேண்டுமா நல்லுறவை
     கேடென தடுப்பீர் அம்முறிவை!
விடுத்திட வேண்டும் அக்குணமே
     வேதனை குறையும் அக்கணமே!

கீழோ ராயினும் தாழஉரை
   கேடோ! குறையோ! அல்ல! நிறை!
வீழ்வே அறியா பெரும்பேறே
   விளைவு அதனால் நற்பேரே!
பேழையில் உள்ள பணத்தாலே
   பெருமையும் வாரா குணத்தாலே!
ஏழைகள் பசிப்பிணி போக்கிடுவீர்
   இணையில் இன்பம் தேக்கிடுவீர்!

மக்கள் தொண்டு ஒன்றேதான்
   மகேசன் தொண்டு என்றேதான்!
தக்கது என்றே சொன்னாரே
   தன்நிகர் இல்லா அண்ணாவே!
எள்ளல் வேண்டா எவர்மாட்டும்
   இனிமை ஒன்றே மகிழ்வூட்டம்!
சொல்லல் யார்க்கும் எளிதன்றோ
   சொன்னதை செய்தல் அரிதன்றோ!

                  புலவர் சா இராமாநுசம்

Sunday, March 31, 2013

அன்பின் இனிய உறவுகளே! வணக்கம்!



அன்பின் இனிய உறவுகளே! வணக்கம்!

இன்று தமிழ்நாடுயெங்கும், மாணவரும், சமூக அமைப்புகளும், பல்வேறு கட்சிகளும், பொதுமக்களும தனிஈழம் வேண்டி போராடி வருகின்றனர். இதுபோது வலைவழியும் ,முகநூல், கூகுல்பிளஸ், இன்னும் இது போன்ற பல் வகையிலும் எழுதுகின்ற பதிவர்களாகிய நாமும் நம் பங்கை ஆற்ற வேண்டாமா!

ஒருநாள் உண்ணா விரதமோ, ஆர்பாட்டமோ நேரமும் இடமும் நாளும் குறித்து திட்ட மிட்டு கூடி அறிவித்து ஆவன செய்வது நலமல்லவா!

சென்னையும் அதனை சுற்றியுள்ள பதிவர்களும்
உடன் இச்செயலில் ஈடுபட்டால் , பிறகு ஆங்காங்கே உள்ள மற்றவர்களும் செயல் படுவார்கள் என்பது என் வேண்டுகோளாகும்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் வேண்டுகிறேன்


                               புலவர்  சா இராமாநுசம்

Saturday, March 30, 2013

தனிஈழம் காண்பதுதான் தீர்வு என்றே-ஈழத் தமிழரை ஏமாற்ற வேண்டாம் நன்றேl




தனிஈழம் காண்பதுதான் தீர்வு என்றே-ஈழத்

     தமிழரை ஏமாற்ற வேண்டாம் நன்றேl

இனிஈழம் வாழ்நாளின் நோக்கம் என்றே-மேலும்

    இயம்பாதீர்! கலைந்தது வேடம் நன்றே


கனிகேட்டு காய்கவர நினைத்தல் தீதே-உரிய

    காரணம்தான் யாமறியோம் சொல்வீர் யாதே

பனிபட்டு பூக்கருகி உதிரல் போல-ஏனோ

    பதில்சொல்ல இயலாது விழிப்பீர் சால


உண்மையான எண்ணமுடன் கேட்க வேண்டும்-ஈழம்

    ஓட்டுக்கே கேட்பவரை ஒதுக்க வேண்டும்!

வெண்மைமிகு உள்ளமுடன் செயலும் வேண்டும்-மிக

     வேகமுடன் அதற்காக முயல வேண்டும்!


வெம்பித்தான் கிடக்கின்றார் ஈழக் குடிகள்-அவர்

    வேதனைக்கு வைக்காதீர் மேலும் வெடிகள்!

நம்பிக்கை வரும்படியாய் செயலும் வேண்டும்-எனில்

     நாடகமா..?என்றேதான் சொல்வார் மீண்டும்!


அடிபட்டார் திட்டுவதும் இயல்பு தானே-இதை

    அரசியலாய் ஆக்கினால் அனைத்தும் வீணே!

கொடிகட்டி ஆள்வதற்கே ஈழம் என்றே-எவர்

    குரல்கொடுக்க வந்தாலும் ஒழிப்போம் நன்றே!


உலகத்து நாடுகளின் கவனம் நன்றே-ஈழம்

   உருவாக ஏற்றதொரு சூழல் இன்றே!

திலகம்போல் தெளிவாக மிளிரக் கண்டோம்-வெற்றி

    தேவதையும்  தேடிவர வழிதான்! விண்டோம்!



ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றாய் சேரின்-மேலும்

    உலகத்து தமிழர்களும் ஓங்கக் கூறின்

கிட்டிவிடும் ஈழம்தான் ஐயம் இல்லை!-படு

    கிழவன்நான் சொல்வது பொய்யா? இல்லை!


எதிர்காலம் கயவர்களை காட்டி விடுமே-அந்த

    எத்தர்களின் வாழ்வு மேலும் கெடுமே!

புதிரல்ல! புரிந்துவிடும் காலம் செல்ல-இது

    பிழையெனில் பொறுத்திடுக! ஈழம் வெல்ல!


                         புலவர் சா இராமாநுசம்



இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...